மக்கள் எதிர்ப்பை மீறி சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றத் துடிப்பதா என, மத்திய, மாநில அரசுகளுக்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, வைகோ இன்று (ஜூன் 5) வெளியிட்ட அறிக்கை:
"சேலம் - சென்னை எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தால் சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் விளைநிலங்கள் பாழாகும். இயற்கை அரண்களாக உள்ள மலைகள் தகர்க்கப்பட்டு, கனிம வளங்கள் சூறையாடப்படும், சுற்றுச்சூழல் சீர்கேடு அடையும் என்பதால், பொதுமக்களும், விவசாயிகளும், அனைத்து அரசியல் கட்சி மற்றும் பொதுநல இயக்கங்களும் தொடர்ச்சியாக இரு ஆண்டுகளாக போராடி வருகின்றன.
இத்திட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 8 வழிச்சாலை பசுமைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசுப் பிறப்பித்த அறிவிப்பாணையை 2019 ஏப்ரல் 8 ஆம் தேதி ரத்து செய்து தீர்ப்பு அளித்தது. பொதுமக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தால் அவற்றை 8 வார காலத்துக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்காமல், தடை ஆணையை ரத்து செய்யக் கோரி, 2019 மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அரசு மேல் முறையீடு செய்தது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில், சேலம் - சென்னை எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. உடனடியாக செயல்படுத்தி ஆக வேண்டும். எனவே இந்த வழக்கை உடனடியாக அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தற்போது இடைக்கால மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
மத்திய பாஜக அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் சேலம் - சென்னை பசுமை வழிச் சாலைத் திட்டத்திற்காக சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும்.
277.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படவுள்ள பசுமை வழிச் சாலையில் 3 குகைப் பாதைகள், 23 பெரிய பாலங்கள். 156 சிறு பாலங்கள், 578 கல்வெட்டுகள், 8 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படும்.
இதனால் 10 ஆயிரம் பாசனக் கிணறுகள், 100 குளங்கள், 6 ஆயிரம் தென்னை மற்றும் பாக்கு மரங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும். மேலும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மரங்கள் வெட்டி அகற்றப்படும். பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் பறிபோகும்.
22 கி.மீ. தூரத்துக்கு அடர்ந்த வனப்பகுதி வழியாக இச்சாலை அமைக்கப்படுவதால், சுற்றுச்சூழலுக்கு பேராபத்து ஏற்படுவதுடன், சேலம் மாவட்டத்தில் ஜருகுமலை, அருநூற்றுமலை, சேர்வராயன்மலை, சின்ன கல்வராயன்மலை, பெரிய கல்வராயன் மலை, தருமபுரி மாவட்டத்தில் சித்தேரி மலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் கவுந்திமலை, வேடியப்ப மலை உள்ளிட்ட 8 மலைகள் உடைத்து அழிக்கப்படும். மலைவளம் நாசமாகும். எனவேதான் சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராக மக்கள் எரிமலையென வெடித்தனர்.
தமிழ்நாட்டையே சூறையாடி வரும் மத்திய பாஜக அரசு, மக்கள் கொந்தளிப்பைப் புறந்தள்ளிவிட்டு, இத்தகைய நாசகாரத் திட்டங்களைச் செயல்படுத்தத் துடிக்கிறது, அதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு துணைபோய்கொண்டு இருக்கிறது.
மத்திய - மாநில அரசுகள் தமிழகத்திற்கு இழைக்கும் பச்சைத் துரோத்திற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக மக்களின் எதிர்ப்புகளைத் துச்சமாகக் கருதும் மத்திய பாஜக அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்".
இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago