கரோனா: 'ஒரு கை ஓசை இனியும் பயன்படாது'-புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள் அனுப்பிய கூட்டறிக்கையை பிரதமர்பயன்படுத்திக் கொள்ள வேண்டும்- கி.வீரமணி

By செய்திப்பிரிவு

புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள் அனுப்பிய கூட்டறிக்கையை பிரதமர் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ள முன்வருவது அவசியம் என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, கி.வீரமணி இன்று (ஜூன் 2) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா தொற்று பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டிலும் அதிகமாகி வருகிறது. 1.6.2020 இல் 5 ஆவது முறை ஊரடங்கு தொடங்கும் காலகட்டத்தில், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 90 ஆயிரத்து 535. பலியானவர்கள் 5,394 குணமடைந்தோர் 91 ஆயிரத்து 879. இது உலக அளவில் 7 ஆவது இடத்திற்கு வந்துள்ளது என்பது மிகுந்த வேதனைக்குரிய ஒன்றாகும்.
தமிழ்நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 495. ஒரே நாளில் நேற்று 1,162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கிலும் கரோனா அதிகரிப்பது ஏன்?

இப்படி நான்கு ஊரடங்குகளுக்குப் பின்பும், 5 ஆவது முறை ஜூன் ஒன்றாம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு மீண்டும் என்று தொடர்ந்து அறிவித்தும் நாளுக்கு நாள் பாதிப்பு கூடிக் கொண்டே போகிறது.

பிரதமர் மோடிக்கு மருத்துவ வல்லுநர்கள் எழுதிய கூட்டறிக்கை

பிரதமரின் உரைகள் இந்தத் தடுப்பு குறித்து பொத்தாம் பொதுவான உரையாகவே மனதின் குரலில் ஒலிக்கிறதே தவிர, சரியான மருத்துவ நிபுணர்கள், குறிப்பாக தொற்று தடுப்பு வல்லுநர்கள் போன்றவர்களின் முதிர்ந்த ஆலோசனைகளைக் கேட்டு, அதன்படி சில தடுப்பு முயற்சிகளை எடுக்காமல், வெறும் அதிகாரிகள் தந்த சில ஆலோசனைகளை மட்டுமே நம்பி செயல்பட்டதால்தான் இவ்வளவு பெரிய விலையை நாடும், மக்களும் கொடுக்க வேண்டியுள்ளது என்பதை நேற்று பிரதமர் மோடிக்கு மருத்துவ வல்லுநர்கள் கூட்டாக ஒரு கடிதம் எழுதி தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

இது நோய் நாடி, நோய் முதல் நாடும் அணுகுமுறையின் சரியான வெளிச்சம் என்பதை ஆட்சித் தலைமை சிந்தித்து, அதற்கேற்ப இந்தக் கட்டத்திலாவது தங்களது அணுகுமுறையை தடுப்பு நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டியது அனுபவம் நமக்குத் தரும் கசப்பான படிப்பினையாகும்.

பிரதமர் மோடி: கோப்புப்படம்

சுகாதாரத் துறை, சேவைகளின் துணை இயக்குநர் அனில்குமார், எய்ம்ஸ் சமூக மருத்துவத் துறை பேராசிரியர் புனித் மிஸ்ரா, எய்ம்ஸ் சமூக மருத்துவ மையத்தின் கூடுதல் பேராசிரியர் கபில் யாதவ் உள்ளிட்டோர் கையொப்பமிட்டு பிரதமர் மோடிக்குக் கூட்டறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்கள்.

அதில் அவர்களுடன் ஏப்ரல் 6 ஆம் தேதி அமைக்கப்பட்ட கோவிட்-19-க்கான தொற்று நோயியல் மற்றும் கண்காணிப்புப் பற்றிய ஐ.சி.எம்.ஆர். ஆராய்ச்சிக் குழுத் தலைவர் டி.சி.எஸ்.ரெட்டி, அத்துறையின் தற்போதையத் தலைவர் சசிகாந்த் ஆகியோரும் அந்த அறிக்கையை கையெழுத்திட்டு கூட்டாக அனுப்பியுள்ளனர்.

கூட்டறிக்கையின் முக்கிய கருத்துகள்!

அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய கருத்துகள் வருமாறு:

1. பொது முடக்கத்திற்கு முன்பாகவே, புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பியிருந்தால், கரோனா பரவல் இந்த அளவுக்குப் பரவி அதிகரித்திருக்காது.

2. பொது முடக்கம் கடந்த மார்ச் 25 அன்று தொடங்கும்போது, 606 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பொது முடக்கத்தின் 4 ஆவது கட்டம் முடியும்போது, மே 24 அன்று ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்!

இதற்குப் பிறகும் சமூகப் பரவல் இல்லை என்று கூறுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

3. மக்கள் கரோனாவால் தற்போது சந்தித்துவரும் சிக்கல் மற்றும் உடல்நலன் சார்ந்த பிரச்சினைகளைக் களைய, மாவட்டம், மாநில அளவில் பொது சுகாதாரம், தடுப்பு சுகாதார நிபுணர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகள் குழுவை உருவாக்க வேண்டும்.

4. கரோனா நோயாளிகளுக்கு செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகள் அனைத்தும் வெளிப்படையாக இருந்தால்தான் ஆய்வு செய்பவர்களால் எளிதாக அணுக முடியும்; அதைத் தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, நோயின் தீவிரம், அதைக் கட்டுப்படுத்தும் மாற்று வழிகளை கண்டறிய முடியும்.

5. மக்களிடையே தீவிரமாக தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்துவது கரோனா பரவல் வேகத்தைக் குறைக்கும்; அதேசமயம் கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் சமூகத்தால் ஒதுக்கப்படும் நிகழ்வுகள் நடப்பதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு மன ரீதியான சிகிச்சையையும், மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

6. இன்புளூயன்சா காய்ச்சல், நுரையீரல் தொடர்பான நோய்கள் இருப்பவர்களைக் கண்டறிந்து தொடர்ந்து சிகிச்சையளித்தல், கண்காணித்தல், கண்டுபிடித்துத் தனிமைப்படுத்துதல் போன்றவற்றைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

7. புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில்களிலும், சாலையில் கூட்டம் கூட்டமாக நடந்தும், சைக்கிள்களிலும் செல்லும்போது, அவர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கரோனாவைக் கொண்டு செல்லும் வாய்ப்பு அதிகமாகும் ஆபத்தும் ஏற்பட வழி வகுக்கிறது.

குறிப்பாக, கிராமப்புறங்களுக்கும், புறநகர்ப் பகுதிகளுக்கும் குறைவான பாதிப்பு இருக்கக்கூடிய மற்ற மருத்துவ வசதி குறைவாக இருக்கக்கூடிய மாவட்டங்களுக்கும் நோய்த் தொற்றை கொண்டு செல்கின்றனர்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க புலம் பெயர்ந்த தொழிலாளர்களை உரிய நேரத்தில் முன்பே அனுப்பியிருந்தால், லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்திருக்கலாம்.

8. தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்தும் சிறந்த பொது முடக்க மாதிரிகளை அறிந்த நோய் பரவல் இயக்கவியலை நன்கு புரிந்துகொள்ளக் கூடிய தொற்று நோயியல் நிபுணர்களுடன் இந்திய அரசு கலந்து ஆலோசித்து இருந்தால், பொது முடக்கத்தை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்!

9. பொதுக் களத்தில் கிடைக்க வேண்டிய குறைந்த தகவல்களிலிருந்து வரையறுக்கப்பட்ட களப் பயிற்சி மற்றும் திறன்களுடன் உள்ள மருத்துவர்கள் மற்றும் கல்வி தொற்று நோயியல் நிபுணர்களிடமிருந்து மட்டுமே அரசு அறிவுறுத்தல்களைப் பெற்றிருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.

10. அத்துடன் நிர்வாகத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளையே பெரிதும் ஆட்சியாளர்கள் நம்பியிருந்தனர். தொற்று நோய், பொது சுகாதாரம், தடுப்பு மருத்துவம் மற்றும் சமூக விஞ்ஞானிகள் போன்ற துறைகளில் நிபுணத்துவ தொழில் நுட்ப வல்லுநர்களுடன் அரசின் ஈடுபாடு குறைவாகவே இருந்தது.

முதிர்வு நிறைந்த கூட்டறிக்கை!

இதன் காரணமாகவே மனிதநேயச் சிக்கல் மற்றும் நோய் பரவலில் மிகப்பெரிய விலையை இந்தியா அளித்து வருகிறது. குறிப்பாக தேசிய அளவில் பொருத்தமற்ற அடிக்கடி மாறும் நிலைப்பாடுகள், கொள்கைகள் போன்றவை, தொற்று நோய் தடுப்பு வல்லுநர்களின் மனநிலையில் அமையாமல் ஆட்சியாளர்களின் ஒரு பகுதி மனநிலையிலே வகுக்கப்பட்டுள்ளன.

மேற்காட்டியது தற்போது நாட்டில் உள்ள நிலவரத்தை அப்படியே 'ஸ்கேன்' செய்து காட்டியுள்ள ஒரு முதிர்வு நிறைந்த கூட்டறிக்கை.

மத்திய, மாநில அரசும், குறிப்பாக பிரதமரும் மற்றவர்களும் இனியாவது இந்த அணுகுமுறை மாற்றத்தினை நடைமுறைப்படுத்த 'காய்தல், உவத்தல், எரிச்சலுக்கு' இடம் தராது, வரவேற்று உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

மேற்காட்டிய பல அறிவுரைகளைத்தான் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் நம்மைப் போன்றோரும் முன்பே பல அறிக்கைகளிலும் வலியுறுத்தியுள்ள கருத்துகள்தான் இதில் இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டறிக்கைக்கு பாராட்டு - ஆறுதல்!

'ஒரு கை ஓசை இனியும் பயன்படாது' இதனைச் சுட்டிக்காட்டிய பிறகும்கூட 'தானடித்த மூப்பாகவே' அரசுகள் நடந்ததால், மேலும் நிலைமை மோசமாகி, கட்டுக்கடங்காமல் கையைவிட்டு நழுவும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. மருத்துவ நிபுணர்கள் தெளிவும், துணிவும் கலந்து பிரதமருக்கு எழுதிய கூட்டறிக்கைக்கு நாடே அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்து, ஆறுதல் அடைகிறது"

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்