மருத்துவக் கல்வி: 50 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடக் கோரி தமிழக காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு; கே.எஸ்.அழகிரி

By செய்திப்பிரிவு

மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடக் கோரி தமிழக காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஜூன் 2) வெளியிட்ட அறிக்கை:

"இந்தியாவில் நீண்ட நெடுங்காலமாக சமூகத்தில் நிலவி வந்த அநீதியின் காரணமாக கல்வி, வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய வகுப்பினர் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த 1921 ஆம் ஆண்டே பின்தங்கிய வகுப்பினருக்கு அரசு வேலைகளில் வாய்ப்பு அளிக்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

1947 இல் இந்திய நாடு விடுதலைப் பெற்றவுடன் அரசமைப்புச் சட்டம் 1950-களில் அமலுக்கு வந்த சில மாதங்களிலேயே சென்னை மாகாணத்தில் கடைப்பிடித்து வந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி வகுப்பைச் சார்ந்த இரு மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு சமூகநீதிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதை உணர்ந்த அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு உடனடியாக அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வந்து, சென்னை மாகாணத்தில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை மீண்டும் உறுதி செய்தது. இந்த உரிமையை பெறுவதற்கு காரணமாக இருந்தவர்கள் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, பெரியார், காமராஜர் ஆகியோரே ஆவர். இதனால் இவர்களை முதல் திருத்தத்தின் மூலவர்கள் என்று சமூகநீதி ஆதரவாளர்கள் பாராட்டி மகிழ்ந்தார்கள். இந்த வகையில் தமிழகம் எப்பொழுதுமே சமூகநீதியை காப்பதில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, இடஒதுக்கீட்டுக் கொள்கையில் சமூகநீதியை உறுதிப்படுத்துகிற வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த கடந்த 1993 ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. இந்த சட்டத்துக்கு அப்போதைய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு, 69 சதவிகித இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்தில் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இதன்மூலம் அரசியல் சாசன பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் வழிகாட்டு நெறிமுறைப்படி, மாநில அரசும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இளநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் 15 சதவிகித இடங்களை ஒப்படைக்க வேண்டும். மருத்துவ முதுநிலை படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரிகள் 50 சதவிகித இடங்களை ஒப்படைக்க வேண்டும். இப்படி ஒப்படைக்கப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தமிழக அரசின் 1993 ஆண்டு 69 சதவிகித இடஒதுக்கீட்டின்படி, அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவிகிதம் இடங்கள் தரப்பட வேண்டும்.

ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு முதுகலை படிப்புக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 8,137 இடங்கள் இருந்தன. இதன்படி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2,197 இடங்கள் ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், 224 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த 1,973 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் முதுகலை மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பை இழந்தனர்.

முதுகலைப் படிப்புக்கு தமிழகத்திலிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 866 இடங்கள் ஒப்படைக்கப்படுகின்றன. இதில் 50 சதவிகித இடஒதுக்கீட்டைப் பெற தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உரிமை உண்டு. மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் சேர 27 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரே ஒரு தமிழக மாணவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்ததையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

கடந்த கல்வியாண்டில் மட்டும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட 400 மாணவர்கள் வாய்ப்பை இழந்துள்ளனர். இந்த ஆண்டும் மருத்துவ முதுகலை படிப்பில் சேர முடியாமல் 425 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வாய்ப்பை இழந்துள்ளனர்.

அதேபோல், 795 மருத்துவ இளநிலை மற்றும் டிப்ளேமா படிப்புகளில் சேர முடியாமல் 395 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வாய்ப்பை இழந்துள்ளனர். 50 சதவீத இடஒதுக்கிட்டின் படி, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மருத்துவ படிப்புகளில் இடம் ஒதுக்கக் கோரி, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பினார்கள். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதினார்கள். இதுவரை எந்த பலனும் இல்லை.

இந்நிலையில், 2020 ஆம் ஆண்டுக்கான மருத்துவ முதுகலைப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை கடந்த 09.05.2020 அன்று தேசிய தேர்வுகள் வாரியம் வெளியிட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படும் விவரம் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும், அகில இந்திய ஒதுக்கீட்டில் மாநில அரசுகள் ஒப்படைக்கும் இடங்களை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடக் கோரியும், அதுபோலவே பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீட்டையும், மாநில அரசுகள் வழங்கும் விகிதாச்சாரத்தின்படி இடஒதுக்கீடு பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் உ.பலராமன் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், சமூக நீதிக்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்பதையும் இத்தருணத்தில் உறுதியாக குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்"

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்