சென்னை உட்பட 4 மாவட்டங்கள் தவிர மற்ற பகுதிகளில் 50 சதவீதம் மட்டுமே பேருந்துகள் இயக்கம்: கடைகள் பெருமளவு திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி; நகர்ப்புறங்களில் மக்கள் கூட்டம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்களை தவிர மற்ற பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் குறைந்த அளவே பயணித்தனர். அதேநேரம், துணிக்கடைகள் உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

தமிழகத்தில் கரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் 4-ம் கட்டம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. மத்திய அரசின் அறிவுறுத்தல் படி தற்போது 5-ம் கட்டமாக ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கரோனா பாதிப்பு அதிளவில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து மாவட்டங்கள் அனைத்தும் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ள 7 மற்றும் 8-வது மண்டலங்களைத் தவிர்த்து, பிற மண்டலங்களில் உள்ள மாவட்டங்களுக்கிடையே 50 சதவீதம் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஐடி நிறுவனங்களில் 100 சதவீதம் பணியாளர்களுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் அதிகளவில் பாதிப்பு இருந்தாலும், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஷோரூம்கள், ஜவுளி, நகைக்கடைகள் போன்ற பெரிய கடைகளில் குளிர்சாதன வசதி இன்றி 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. இதே போன்று முடிதிருத்தகங்கள், அழகு நிலையங்கள் இயங்கவும், சென்னையில் ஆட்டோக்கள் இயங்கவும் அனுமதியளிக்கப்பட்டது. பொது போக்கு வரத்து தடை செய்யப்பட்டுள்ள போதிலும் இந்த தளர்வுகள் மூலம் நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

பிற மாவட்டங்கள்

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நேற்று உள்ளூர், வெளியூர் பேருந்துகள் இயங்கினாலும், கூட்டம் குறைந்திருந்தது. கோவை- மயிலாடுதுறை மற்றும் காட்பாடிக்கு 2 ரயில்கள் இயங்கின. உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின்னரே பயணத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஊரடங்கு தளர்வால் தொழில், வணிக நிறுவனங்கள், கடைகள், ஹோட்டல்கள் திறந்திருந்தன. பல பகுதிகளில் நெரிசல் ஏற்படும் அளவுக்கு போக்குவரத்து இருந்தது. நீலகிரியில் சுற்றுலாப் பயணிகள் இல்லாததால், சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பேருந்துகளில் குறைந்த பயணிகளே சென்றனர். சேலத்தில் இருந்து இயக்கப்பட்ட ரயில்களில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. பேருந்துகள் இயக்கத்தால், பணிக்கு வந்து செல்லும் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். முகூர்த்த நாட்கள் வருவதால், நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஈரோட்டில் வெளியூர் செல்லும் பேருந்துகளில் கூட்டம் அதிகளவில் இருந்தது. கடைகள் திறக்கப்பட்டிருந்தாலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.

தருமபுரியில் இருந்து சேலத்துக்கு பேருந்துகள் இயக்கம் இல்லாததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். கிருஷ்ணகிரியில் ஓசூரில் இருந்து கர்நாடகா எல்லையான ஜுஜுவாடி வரை பேருந்துகள் இயக்கப்பட்டன. வேலூர் மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான காவேரிப்பாக்கம் வரையும், 2-ம் மண்டலத்துக்கு உட்பட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி வரையும் நேற்று பேருந்துகள் இயக்கப்பட்டன. தனியார் பேருந்துகள் இன்று முதல் இயக்க திட்டமிட்டுள்ளனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. திருவண்ணாமலையில் இருந்து, வேலூர் மாவட்ட எல்லையான கண்ணமங்கலம் முதல் கள்ளக்குறிச்சி, சிதம்பரம், விழுப்புரம் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.

மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட 6 மாவட்டங்களிலும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் மிகக் குறைவாக இருந்தது. குறிப்பாக, தொலைதூர மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. பயணிகள் இல்லாததால் பல பகுதிகளில் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன. பேருந்து நிலையங்களும் வெறிச்சோடின. இந்த மாவட்டங்களில் உள்ள நகர்புறங்களில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இருந்தது. நகரங்கள், கிராமங்களில் உள்ள கடை வீதிகள், சாலைகளில் மக்கள் நடமாட்டம் சாதாரண நாட்களைபோல் காணப்பட்டது.

கடலூரில் 45 சதவீதம் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. அங்கும் மக்கள் குறைவாகவே பயணித்தனர். விழுப்புரம் கோட்டத்தில் 1,057 பேருந்துகள் இயக்கப் பட்டாலும், குறைந்த பயணிகளே பயணித்தனர். 24 பெட்டிகளுடன் மதுரையில் இருந்து விழுப்புரம் வந்த இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 500 பயணிகள் முன்பதிவு செய்து வந்திருந்தனர். தளர்வைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகரில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் திறக்கப்பட்டது. நகர எல்லைக்கு அப்பால் ஊராட்சிப் பகுதிகளுக்குச் சென்று மது வாங்கியவர்கள், நகரில் உள்ள கடைகளில் மது வாங்கி அருந்தினர்.

பேருந்து இயக்கம் இல்லை

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் குறைந்த அளவுக்கே மக்கள் பயணம் செய்தனர். அதேநேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். 2 மாதங்களுக்குப்பின் மீன் சந்தைகள் முழுவீச்சில் செயல்பட தொடங்கின.

பேருந்து போக்குவரத்து தொடர்பாக துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘அரசின் வழிமுறைகளை பின்பற்றி, முன்னெச்சரிக்கை யுடன் பேருந்து களை இயக்கி வருகிறோம். நீண்ட நாட்களுக்கு பின் பேருந்து போக்குவரத்து தொடங்குவதால் மக்கள் மத்தியில் ஆர்வமில்லை. வரும் நாட்களில் படிப்படியாக அதிகரிக்கும்’’ என்றனர். போலீஸார் தடுக்கவில்லை
புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வு அறிவித்த சூழலில் நகரெங்கும் போராட்டங்கள்தான் அதிகரித்துள்ளன. முதல்வர் நாராயணசாமி அறிவித்தப்படி பூங்காக்கள், கடற்கரை சாலை திறக்கப்படவில்லை. கடற்கரை சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாவிட்டாலும், மக்கள் நடந்து சென்று சமூக இடைவெளியோடு உடற்பயிற்சி செய்வதை போலீஸார் தடுக்கவில்லை. நகரெங்கும் மக்கள் நெரிசல் அதிகம் காணப்பட்டது. முகக்கவசம் அணிவதை பலரும் கடைபிடிக்கவில்லை. பேருந்துகள் குறைந்த அளவே இயங்கின.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்