கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் காணப்படுபவை பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல என்று விளக்கம் தெரிவித்துள்ள தமிழக அரசு, பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பு வந்தால் அதனை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கியுள்ளது.
பாலைவன வெட்டுக்கிளிகளைத் தடுப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (மே 30) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை:
"வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தி, மகசூல் இழப்பிலிருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு வழிகளில் உதவி வருகிறது. மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழு, நெல்லில் ஆனைக்கொம்பன், தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ, மரவள்ளியில் மாவுப்பூச்சி போன்ற பூச்சித் தாக்குதலுக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பயிர் சேதத்தைக் குறைத்து விவசாயிகளின் நலனைப் பாதுகாத்துள்ளது.
தற்போது, வடமாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளிகள் படையாக பல்வேறு பயிர்களைத் தாக்கி சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. வடமேற்கு மாநிலங்களில் தாக்கிய வெட்டுக்கிளிகள், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள வயல்வெளிகளில் காணப்படுவதாகப் பெறப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மற்றும் ஊட்டி போன்ற மாவட்டங்களில் உள்ள வயல்வெளிகளில் வெட்டுக்கிளிகள் காணப்படுவதாக விவரம் தெரிந்தவுடனேயே முதல்வரின் ஆணையின்படி, வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்களும் வயலுக்குச் சென்று ஆய்வு செய்தனர்.
மேலும், இது தொடர்பான ஆய்வுக்கூட்டம் முதல்வரின் தலைமையில் இன்று நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், துணை முதல்வர், வேளாண்மைத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர், வேளாண்மை இயக்குநர், தோட்டக்கலை துறை இயக்குநர் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் பாலைவன வெட்டுக்கிளிகள் ஊடுருவுவதற்கான வாய்ப்பு, முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள வயல்வெளிகளில் வெட்டுக்கிளிகள் காணப்படுவதாக பெறப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை விஞ்ஞானிகள் வயநாடு ஒட்டிய தமிழக எல்லைப் பகுதியான ஊட்டி காந்தள் பகுதியில் வயலாய்வு மேற்கொண்டு, இப்பகுதியில் காணப்படும் வெட்டுக்கிளிகள், பாலைவன வெட்டுக்கிளி வகையைச் சார்ந்தது அல்ல எனவும் உள்ளூர் வகை வெட்டுக்கிளிகள் எனவும் உறுதி செய்துள்ளனர்.
அதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளி வட்டாரம், நெர்லகிரி கிராமம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம், கண்ணனூர் பகுதியில் காணப்பட்ட வெட்டுக்கிளிகள், பாலைவன வெட்டுக்கிளிகள் வகையைச் சார்ந்தது அல்ல எனவும் உள்ளூர் வகை வெட்டுக்கிளிகளே எனவும் கள ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், கிருஷ்ணகிரியில் உள்ளுர் வெட்டுக்கிளிகள் இருந்ததால், விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து கட்டுப்படுத்தப்பட்டது.
ஆப்பிரிக்க நாடுகளில் உருவாகும் சிஸ்டோசெர்கா கிரிகேரியா என்று அழைக்கப்படும் பாலைவன வெட்டுக்கிளிகள் நடப்பாண்டில் ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பாலைவனப் பகுதிகளைக் கடந்து ராஜஸ்தான் மாநிலத்திற்குள் பெருங்கூட்டமாகப் படையெடுத்து வந்து சுமார் 33 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் உள்ள எல்லை மாவட்டங்களிலும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு காணப்படுவதால் அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மத்திய வேளாண் அமைச்சகம் மூலம் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் தொடர்ந்து அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று (மே 29) வெளியிடப்பட்டுள்ள மத்திய அரசின் அறிவுரை அறிக்கையின்படி பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பானது ஜூலை மாதம் வரை இருக்கும் எனவும், ராஜஸ்தானில் இருந்து கிழக்கு பக்கமாக பிஹார் மற்றும் ஒடிசா வரை பரவ வாய்ப்புள்ளது எனவும், பாலைவன வெட்டுக்கிளிகள் தாக்குதல் தென்னிந்தியப் பகுதிகளுக்கு பரவுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டுக்குப் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பு வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதால் விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை.
தமிழ்நாட்டுக்குப் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பு வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்ற போதிலும், கண்காணிப்பு மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் கீழ்க்கண்ட அறிவுரைகளை துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.
1) பாலைவன வெட்டுக்கிளிகள் நகர்வு குறித்து மத்திய அரசு மூலமும் அண்டை மாநிலங்களில் உள்ள வேளாண்துறை வாயிலாகவும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
2) திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி போன்ற அண்டை மாநில எல்லைகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் வெட்டுக்கிளி தாக்குதல் குறித்து தீவிரமாகக் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட ஆட்சியரின் தலைமையில் வேளாண்மை இணை இயக்குநர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட வன அலுவலர், மாவட்ட தீயணைப்பு அலுவலர், தோட்டக்கலை துணை இயக்குநர், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) மற்றும் வேளாண் உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ஆகியோரை உள்ளடக்கிய சிறப்புக் குழு அமைத்து உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
3) அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறி, எதிர்பாராத சூழலில் பாலைவன வெட்டுக்கிளிகளின் ஊடுருவல் ஏற்படுமாயின், அதனை உடனடியாக எதிர்கொள்ளும் பொருட்டு, பரிந்துரைக்கப்பட்ட உயிரி பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன மருந்துகள், மருந்து தெளிப்பதற்குத் தேவையான உபகரணங்களை போதுமான அளவு இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4) ஒருவேளை, பாலைவன வெட்டுக்கிளி தாக்குதல் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை ஆலோசித்த பிறகு கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
அ. வயல்களில் டிரம் அல்லது டின்கள் கொண்டு ஒலி எழுப்புவதன் மூலம் வெட்டுக்கிளிகள் பயிர்களின் மேல் அமர்வதைத் தடுக்கலாம்.
ஆ. விவசாயிகளின் வயல் அளவில் பாலைவன வெட்டுக்கிளி கூட்டங்கள் தென்பட்டால், முதல் சுற்றில் அசாடிராக்டின் எனும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வேம்பு சார்ந்த தாவர பூச்சிக்கொல்லியினைப் பயன்படுத்த வேண்டும்.
இ.பாலைவன வெட்டுக்கிளிகள் பெருங்கூட்டமாக தென்பட்டால் ஹெக்டேர் ஒன்றுக்கு மாலத்தியான் 50 சதம் - 1.850 லிட்டர் அல்லது மாலத்தியான் 25 சதம் நனையும் தூள் – 3.7 கி.கி., குளோர்பைரிபாஸ் 20 சதம் - 1.2 லி. அல்லது லாம்டாசைஹேளோத்ரின் 5 சதம் 400 மி.லி. போன்றவற்றில் ஏதேனும் ஒரு மருந்தினை, தெளிப்பான்கள் மற்றும் பெரிய டிராக்டர் மூலம் தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.
ஈ. குறிப்பாக லாம்டாசைஹேளோத்ரின் மருந்து அதிக திறன் வாய்ந்தது என்பதால் இதனைத் தெளிக்கும்போது, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஒரே நபர் தொடர்ந்து தெளிக்கும் பணியில் ஈடுபடக்கூடாது.
உ. பரந்த அளவில் பாலைவன வெட்டுக்கிளிகள் தாக்குதல் ஏற்படும் பட்சத்தில், மாலத்தியான் 96 சதம் பூச்சிமருந்தை மத்திய அரசிடமிருந்து பெற்று, வேளாண்மைத் துறை மூலம் ஒட்டு மொத்த முறையில் தீயணைப்பு இயந்திரம் மூலம் தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
சாதாரண வெட்டுக்கிளிகள் உயிர் சங்கிலியின் ஒரு பகுதியாகும். இவை, களைகள் மற்றும் புல் வகைகளை உண்டு வாழும். இவற்றில் பல வகைகள் உள்ளன. கிருஷ்ணகிரியில் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் எருக்கஞ்செடியினை மட்டுமே உணவாகக் கொண்டு வாழும். இதுபோன்று, ஊட்டி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காணப்படும் வெட்டுக்கிளிகள் உள்ளூர் வகையைச் சார்ந்தவை. இதுபோன்று 250 வகையான உள்ளூர் வெட்டுக்கிளிகள், தமிழ்நாட்டில் உள்ளன. இவற்றில் நன்மை செய்யக்கூடிய வெட்டுக்கிளிகளும் உள்ளன. இவற்றில் நீள்கொம்புடன் கூடிய வெட்டுக்கிளிகள் தீமை செய்யும் பூச்சிகளை உண்பதால், அவை பாதுகாக்கப்பட வேண்டும்.
எனவே, விவசாயிகள் தமிழ்நாட்டில் வயல்களில் காணப்படும் உள்ளூர் வெட்டுக்கிளிகளைக் கண்டு, பாலைவன வெட்டுக்கிளிகள் என அச்சப்பட வேண்டாம். இருப்பினும், வெட்டுக்கிளிகள் கூட்டமாகத் தென்பட்டால், விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள வேளாண்மைத்துறை அல்லது தோட்டக்கலைத்துறை அல்லது வேளாண் பல்கலைக்கழகம் அல்லது வேளாண் அறிவியல் மையத்திற்குத் தகவல் தெரிவித்து ஆலோசனை பெறலாம் என்றும் அல்லது வெட்டுக்கிளிகளின் புகைப்படம் எடுத்து உழவன் செயலியில் பூச்சி நோய் கண்காணிப்புப் பிரிவில் பதிவேற்றம் செய்தும் ஆலோசனை பெறலாம் எனவும் முதல்வர், விவசாயிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago