மின்சார சட்டத் திருத்தத்தால் ஏழைகளுக்கு மின்சாரம் எட்டாக் கனியாக மாறும்; மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் மின்சார சட்டத் திருத்த மசோதா 2020-ஐ மத்திய அரசு கைவிட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (மே 30) வெளியிட்ட அறிக்கை:

"மத்திய அரசு மின்சாரத் துறையில் தனியார் மயமாக்கலை எவ்வளவு விரைவாகச் செயல்படுத்திட முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்திட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு முனைப்பு காட்டி செயல்பட்டு வருகிறது.

கரோனா தொற்று ஏற்பட்டு நாடே பரிதவித்துக் கொண்டிருக்கிற இந்த அசாதாரணச் சூழலில் மின்சார வாரிய ஊழியர்கள் வைரஸ் தொற்று தடுப்புப் பணியில் இரண்டாம் கட்ட வீரர்களாகப் பணியாற்றி வரும் சூழலில், தனியார் முதலாளிகளை ஊக்குவிக்கவும் மாநில மின் வாரியங்களை விற்பனை செய்யவும் மத்திய அரசு முயன்று வருகிறது.

இந்த மின்சார சட்டத் திருத்த மசோதா 2020 அமலானால் மாநில அரசுகளின் உரிமை பறிபோகும். மின்சாரம் சந்தைப் பொருளாக மாறும். வசதி உள்ளவனுக்கே மின்சாரம் என்ற நிலை உருவாகும். ஏழைகளுக்கு மின்சாரம் எட்டாக் கனியாக மாறும்.

மாநில அரசுகள் அளிக்கும் மானியங்கள் அனைத்தும் ரத்தாகும் சூழல் ஏற்பட்டு, விவசாயம், நெசவு உள்ளிட்ட தொழில்கள் கடும் பாதிப்பைச் சந்திக்கும். இலவச மின்சாரம் ரத்தாகக் கூடிய சூழல் உருவாகும். இதனால் விவசாயிகள் சொல்லொணா துயரங்களுக்கு உள்ளாவார்கள். விவசாயிகளுக்கு அவர்கள் செலுத்தும் மின் கட்டணத்தை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவித்தாலும், எரிவாயு சிலிண்டருக்கு வங்கிக் கணக்கில் செலுத்தியது சில மாதங்களில் ரத்தானது போல் இதுவும் ரத்தாகும்.

சுதந்திர இந்தியாவின் முதல் மின்துறை அமைச்சர் அம்பேத்கர், மின்சார வாரியங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் கடைக்கோடி சாதாரண ஏழைக்கும் மின்சாரம் கிடைக்கும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படும் என்று கூறி மாநிலங்களின் கட்டுப்பாட்டில் மின்துறை இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தார்.

ஆனால், மத்திய அரசு அம்பானி, அதானி போன்ற பெருமுதலாளிகளை வாழவைப்பதற்காக கேந்திரமான சேவைத் துறையான மின்துறையை தனியார் முதலாளிகளுக்குத் திறந்துவிட்டு ஏழைகளுக்கு வேட்டு வைக்க மின்சார சட்டத் திருத்த மசோதாவை அமலாக்கத் துடிக்கிறது.

இந்தப் புதிய மின்சார திருத்தச் சட்டத்தில் புதுப்பிக்கத்தக்க தேசிய எரிசக்திக் கொள்கையை மத்திய அரசே வகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாநில அரசுகளின் உரிமையை அப்பட்டமாகப் பறிக்கும் செயல் மட்டுமல்லாமல் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும். இச்சட்டத் திருத்தம் மாநிலங்களின் வளர்ச்சியைக் கடுமையாக பாதிக்கும். தொழில்கள் மற்றும் விவசாயம் நலிந்து வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் ஏற்படும்.

மின்சாரச் சட்டம் 2003 இன் படி அமைக்கப்பட்ட மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் இனி மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வரும். மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மத்திய ஒழுங்குமுறை ஆணையமே தேர்வு செய்யும்.

மின் கட்டண நிர்ணயம் செய்யும் உரிமையை மத்திய அரசு எடுத்துக் கொள்ளும். இதனால், மாநில மக்களின் தேவையை மாநில அரசுகள் நிறைவேற்ற முடியாத சூழல் உருவாகும். மின் விநியோகத்தில் தனியாரை ஈடுபடுத்துவது நாட்டிற்கு அழிவை உண்டாக்கும்.

அதைப் போன்று தனியார் பெருமுதலாளிகள் மின் விநியோகத்தில் நகர்ப்புறத்தை மட்டுமே தேர்வு செய்வார்கள். கிராமங்களைத் தேர்வு செய்ய மாட்டார்கள். இதனால் கிராமங்களில் மீண்டும் அரிக்கேன் விளக்குகளுக்குத் திரும்புகின்ற அபாயம் ஏற்படும்.

கரோனா தொற்றின் காரணமாக நாட்டு மக்கள் வாழ்வாதாரம் இன்றி வாடுவது, இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல இயலாமல் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வது, தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்வது என பல்வேறு பிரச்சனைகளில் சிக்கியிருக்கிற மக்களிடம் இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுகிற வகையில் இந்த மின்சார சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு மத்திய பாஜக அரசு துடிக்கிறது.

20 லட்சம் கோடி குறித்து ஐந்து நாட்களாக பத்திரிகையாளர்கள் மத்தியில் உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மின்சார வாரியங்களுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகக் கூறினார். இந்தப் பணத்தை மின் வாரியங்கள் தனியாரிடமிருந்து பெற்ற மின்சாரத்திற்காக செலுத்த வேண்டிய கட்டண பாக்கிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர வேறு எதற்கும் செலவிடக் கூடாது என்றும் தெரிவித்தார்.

புதிய மின் உற்பத்தித் திட்டங்களுக்காகவோ அல்லது மின் திட்டங்களின் கட்டுமானப் பணிகளுக்காகவோ அல்லது ஊழியர்களின் நலன்களுக்காகவோ நிதி ஒதுக்காமல், மின்சார வாரியங்கள் எவ்வளவு நட்டத்தில் இயங்கினாலும் பரவாயில்லை, தனியார் முதலாளிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்கிற ஒரே நோக்கத்தில்தான் அந்த நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

நேற்று நடைபெற்ற மின்துறை அமைச்சகத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, டிஸ்காம் நிறுவனங்கள் தங்களது செயல்திறன் அளவுகளை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடுவதை மின்துறை அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாகத்தான் உரையாற்றியிருக்கிறார். இதன் மூலம் மோடி அரசு யாருக்கான அரசு என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக வெளிச்சத்திற்கு வருகிறது.

இந்த மின்சார சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டாம் என தமிழக அரசும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, மத்திய அரசு எக்காரணம் கொண்டும் மக்களைப் பாதிக்கும் இந்த மின்சார சட்டத் திருத்த மசோதா 2020-ஐ நிறைவேற்றக் கூடாது எனவும் அதை உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும், எந்தச் சூழ்நிலையிலும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது எனவும் மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்