சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்க முன்வர வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மே 30) பல்வேறு வங்கி நிர்வாகிகளோடு முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, நிர்வாகிகளிடையே முதல்வர் பேசியதாவது:
"உலகமே கரோனா பேரிடரைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தச் சவாலான காலகட்டத்தில் கரோனா தொற்றைத் தடுப்பதற்கும், தொற்றின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் கடந்த 4 மாதங்களாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து வருவதன் காரணமாக, தமிழ்நாட்டில் பூரண குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை மிக அதிகமாகவும், இறப்பு விகிதம் குறைவாகவும் உள்ளது.
இச்சூழலில் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் பொருளாதாரத்தை மேம்படுத்திட உயர்மட்டக் குழு அமைத்து நான் உத்தரவிட்டேன்.
ஊரடங்கின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்கள் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளன. இதனை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் புதிய திட்டங்களை அறிவித்துள்ளன. பல்வேறு தொழில்களுக்கு இச்சூழலில் முக்கியத் தேவை வங்கிகளின் கடனுதவிதான்.
தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் கடன் வைப்புத் தொகை விகிதம் 100 சதவீதத்திற்கும் அதிகமாகவே இருந்துள்ளது. இதன் மூலம், தொழில் நிறுவனங்கள் கடன்களைப் பெற அதிக அளவில் வருகிறார்கள் என்பதும், வங்கிகள் முனைப்போடு செயல்படுவதும் தெளிவாகிறது. இதுபோன்ற ஒத்துழைப்பை வருங்காலத்திலும் வங்கிகள் அளிக்க வேண்டும்.
2020-2021 ஆம் ஆண்டில், 4 லட்சத்து 21 ஆயிரத்து 404 கோடி ரூபாய் முதலீடு உள்ள ஆண்டு கடன் திட்டம் குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு கடன் திட்டத்தில் வேளாண்மைத் துறைக்கு 1 லட்சத்து 48 ஆயிரத்து 859 கோடி ரூபாய், குறு, சிறு தொழில்களுக்கு 92 ஆயிரத்து 75 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இது ஒரு உத்வேகம் வழங்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால், டெல்டா பகுதியில் முழு வீச்சில் குறுவை சாகுபடி செய்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு விவசாயம் இன்றியமையாதது என்பதால், விவசாயிகளுக்குக் கடன்களை உடனுக்குடன் வழங்கி வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் இதுவரை 20 லட்சத்து 20 ஆயிரம் உழவர் கடன் அட்டைகள் விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளன. இந்த கடன் அட்டையின் மூலம் விவசாயிகள், 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை விதைகள், உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் வாங்க வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்கப்படுகிறது.
நீங்கள் அனைவரும் உங்கள் பகுதிகளில் சிறப்பு முகாம்களை நடத்தி, இந்த உழவர் கடன் அட்டைகள் மூலம் கடன்களை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் பல்வேறு புதிய திட்டங்களை சமீபத்தில் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏறத்தாழ 5 லட்சம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிறுவனங்கள் மூலம் சுமார் 1 கோடி மக்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில், சிறு, குறு நடுத்தர தொழில்களின் பங்கு சுமார் 30% ஆகும்.
அரசின் சிறப்பு சலுகைத் திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு செல்வது நம் அனைவரின் கடமையாகும். மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 3 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் நிதியுதவி அதிக அளவில் நம் மாநிலத்துக்குக் கிடைக்க நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடனை வங்கிகள் வழங்க வேண்டும். இத்தொழில்களின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. 2018-2019 ஆம் ஆண்டு 8,023 கோடி ரூபாய் அளவுக்கு இந்நிறுவனங்களுக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனுதவியின் வருடாந்திர வளர்ச்சி 4% என்ற அளவில் குறைவாகவே உள்ளது. இந்த சதவீதத்தைப் பெரிய அளவில் வங்கிகள் உயர்த்திட வேண்டும்.
கடன் உத்தரவாத நிதியத்தின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் கடனுதவி 2017-2018 ஆம் ஆண்டில் 1,784 கோடி ரூபாயிலிருந்து 2018-2019 ஆம் ஆண்டில் 2,541 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கத்தைப் போக்க, கடன் வழங்குவது மேலும் அதிகரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஊரக தொழில்களை மேம்படுத்தவும், வருமானத்தைப் பெருக்கவும் உலக வங்கி உதவியுடன் ஒரு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தொழில்களை மேம்படுத்தவும், புதிய தொழில்களை உருவாக்கவும் 300 கோடி ரூபாய் அளவிலான கரோனா சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தினை 28-ம் தேதி அன்று நான் தொடங்கி வைத்துள்ளேன்.
வறுமையைப் போக்க கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு 2019-2020 ஆம் ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 13 ஆயிரத்து 301 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 5,500 கோடி ரூபாய் உப இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கை 2021, ஜனவரி மாதத்திற்குள் அடைந்து சாதனை படைக்க வேண்டும் என வங்கிகளைக் கேட்டுக்கொள்கிறேன். ஊரகப் பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களை குறு நிறுவனங்களாக உருவாக்கிட, கடன் உத்தரவாத நிதித்திட்டத்தின் கீழ், வங்கிகள் மூலம் 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அப்படி, சிறந்த மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கண்டறிந்து வங்கிகள் கடனுதவி வழங்க வேண்டும்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago