முதல்வரைப் பாராட்ட மனம் இல்லாதவர்; குறைகூறுவது ஒன்று மட்டும் தான் தலையாய பணி; ஸ்டாலின் மீது அமைச்சர் காமராஜ் விமர்சனம்

By செய்திப்பிரிவு

முதல்வரைப் பாராட்ட மனம் இல்லாத எதிர்கட்சித் தலைவர் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் காமராஜ் இன்று (மே 29) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டின் அத்தியாயத்தில் புதிய மைல் கல்லாக, டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு செய்து, விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய, தமிழ்நாடு முதல்வர் தற்போது தமிழ்நாட்டில் இது வரை இல்லாத அளவில் பல்வேறு நீர் மேலாண்மை சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

குறிப்பாக, குடிமராமத்துத் திட்டம், விவசாயிகளுக்கு இலவச வண்டல் மண் வழங்கும் திட்டம், டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டம் மற்றும் மாநிலத்திலுள்ள பல்வேறு நதிகளின் கட்டமைப்புக்களை சீரமைத்தல் போன்ற பல திட்டங்களை, தானே ஒரு விவசாயி என்பதால், விவசாயிகளின் தேவைகளை முழுமையாக உணர்ந்து, முதல்வர் செயல்படுத்தி வருகிறார். பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த காவிரி நதிநீர் பிரச்சினைக்கு சட்டப்போராட்டத்தின் மூலம் தீர்வு கண்டவர் முதல்வர்.

எந்தப் பிரச்சினைகளுக்கும் ஆக்கப்பூர்வமான கருத்துகளை தெரிவிக்காமல், அரசின் மீது ஏதாவது குறை கூறிக் கொண்டிருப்பதையே தனது வழக்கமான பணியாக வைத்திருக்கும் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது டெல்டா மாவட்டங்களில் தூர்வரும் பணிகள் குறித்து அரசின் மீது குறைகளை கூறுவது ஒன்றும் புதிதல்ல.

கடந்த 2019-2020 ஆம் ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 60.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 281 பணிகள் சிறப்பாக செய்து முடிக்கப்பட்ட காரணத்தினால்தான் மேட்டூர் அணை திறக்கப்பட்டவுடன், அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் பாசன நீர் வழக்கத்தைவிட விரைவாக சென்றடைந்தது.

மேலும், பல்வேறு நீர் மேலாண்மைத் திட்டங்களையும் திறம்பட செய்ததன் காரணமாகத் தான் கடந்த ஆண்டு 7 லட்சம் ஏக்கர் நிலங்களில் கூடுதலாக சாகுபடி செய்யப்பட்டது. இதை பாராட்ட மனமில்லாத ஸ்டாலின் தற்போது டெல்டா மாவட்டங்களில் உரிய காலத்தில் தூர்வாரப்படுமா என்று கேள்வி எழுப்புவது விந்தையாக உள்ளது.

நீர் மேலாண்மைக்கு மக்கள் பங்களிப்பு அத்தியாவசியமானது என்பதை உணர்ந்த முதல்வர் 2017 ஆம் ஆண்டு குடிமராமத்து என்ற மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். இதன் மூலம் 2016-2017 மற்றும் 2017-2018-ம் ஆண்டுகளில் 3,036 குடிமராமத்துப் பணிகள் ரூ.430.56 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டது. 2019-2020 ஆம் ஆண்டில் ரூ.499.69 கோடி மதிப்பீட்டில், 1,829 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆண்டு ரூ.498.51 கோடி செலவில் 1,387 குடிமராமத்துப் பணிகள் எடுக்கப்பட்டு, பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் பொதுப்பணித் துறை மூலமாக மட்டுமே பல்வேறு திட்டங்களில் ஆயிரக்கணக்கான குளங்கள் மற்றும் ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன.

இதன் காரணமாகவே, சென்ற வருடம் கிடைக்கப் பெற்ற மழை நீர் கூடுதலாக சேமிக்கப்பட்டு, நீர் ஆதாரம் பெருகியதன் காரணமாகவே, வேளாண்மை தழைத்தோங்கியது, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படவில்லை.

ஏரிகள், கால்வாய்கள் மற்றும் நீர் தேக்கங்களில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் மற்றும் மட்பாண்டங்கள் செய்பவர்களுக்கு விலை இல்லாமல் வழங்கும் ஒரு சிறப்பான திட்டமும் முதல்வரால் அறிவிக்கப்பட்டு இதுவரை 6 லட்சத்து 68 ஆயிரத்து 39 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்.

முதல்வர், வழக்கமான ஜுன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படுமென்று அறிவித்ததன் மூலம், லட்சக்கணக்கான டெல்டா விவசாயிகளின் மனதில் பால் வார்த்து உள்ளார்.

எனவே, டெல்டா பகுதிகளிலுள்ள ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களை சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 392 பணிகள் ரூ.67.248 கோடி மதிப்பீட்டில், பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி, போர்க்கால அடிப்படையில் இப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் 3,457 கி.மீ. வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் ஆறுகளில் தூர்வாரும் பணிகளை மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பதற்கு முன்னரே முடிப்பதற்கு முதல்வர் ஆணையிட்டு அதன் அடிப்படையில் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை கண்காணித்து விரைவுபடுத்தும் பொருட்டு, 7 மூத்த ஐஏஏஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்கள் களப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க நீர் மேலாண்மை திட்டங்களை அறிமுகப்படுத்தியும், டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தும், தமிழ்நாட்டின் விவசாயிகளின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள முதல்வரைப் பாராட்ட மனம் இல்லாத எதிர்கட்சித் தலைவர், குறைகூறுவது ஒன்று மட்டும் தான் தனது தலையாய பணி என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

மக்கள் நலனுக்காகவே செயல்படும் தமிழக அரசு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதில், ஆக்கப்பூர்வமான வழியில் தொடர்ந்து நடைபோடும்"

இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்