கரோனா நோய்ப்பரவல் கட்டுக்குள் இல்லை; கட்டுக்கு அடங்காமல்தான் இருக்கிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மே 28) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா நோய்த் தொற்றினைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்டு வரும் நான்காம் கட்ட ஊரடங்கு இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட இருக்கிறதா அல்லது முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுமா என்பதில் மத்திய, மாநில அரசுகள் தங்கள் முடிவை இன்னமும் அறிவிக்கவில்லை.
இந்திய அளவிலும் தமிழக அளவிலும் நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், இறப்போர் எண்ணிக்கையும், அதிகமாகிக் கொண்டேதான் போகிறதே தவிர குறைந்த மாதிரி தெரியவில்லை.
» கோயில்களைத் திறக்க வலியுறுத்தி பழநியில் விடலைத் தேங்காய் உடைத்துப் போராட்டம்
» பள்ளிகள் திறப்பு: பள்ளிக் கல்வித்துறை செய்ய வேண்டியது என்னென்ன?- தங்கம் தென்னரசு பட்டியல்
தொற்று பரவாமல் தடுப்பதற்கு, ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லை என்று, இதுவரை எடுத்துரைத்து வந்த இரண்டு அரசுகளும், தொற்றுப்பரவல் குறையாத நிலையில், என்ன மாதிரியான முடிவுகள் எடுக்க இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் அதற்கு மக்களைத் தயார்ப்படுத்துவதும், மக்களுக்கு முன்கூட்டியே சொல்வதும், அரசாங்கத்தின் முக்கியக் கடமையாகும்.
கடைசி நிமிடம் வரைக்கும் மக்களைக் காத்திருக்க வைத்திருப்பதும், மக்களைப் பதற்றத்திலேயே வைத்திருப்பதும் மிக மோசமான செய்கைகள் ஆகும். எனவே, எந்த அறிவிப்பாக இருந்தாலும், அதனை அரசுகள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 817 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று பரவிய காலம் முதல் இதுவரை இவ்வளவு எண்ணிக்கையில் ஒரே நாளில் தொற்று ஏற்பட்டது இல்லை. மிக மிக அதிகமான எண்ணிக்கை இது!
தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை 18 ஆயிரத்து 545 ஆகும். நேற்று மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் மட்டும் 133 உயிர்கள் பலியாகி உள்ளன. இந்திய அளவில் மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இதில் தலைநகர் சென்னையின் நிலைமை, மிகவும் அச்சம் தருவதாக உள்ளது. சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 203. சென்னையில் மட்டும் 100 உயிர்களை இழந்துள்ளோம். சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை ஆகியவற்றில் மட்டும் நேற்று ஒரே நாளில் 5 பேர் இறந்துள்ளனர்.
கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவரது மரணம் மிகவும் வருத்தம் தருவதாக உள்ளது. தனது மகனுக்குப் பரிசோதனை செய்தபோது, அவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் தனக்கும் பரிசோதனை செய்ய சசிகலா கேட்டுள்ளார். ஆனால், குடும்பத்தில் ஒருவருக்குத்தான் பரிசோதனை செய்வோம் என்று அதிகாரிகள் சொன்னதால், வீட்டில் சசிகலா தங்க வைக்கப்பட்டுள்ளார். ஆனால், இவருக்கும் நோய்த் தொற்று இருந்துள்ளது. அரசின் அலட்சியத்தால்தான் சசிகலா இறந்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவர், சிறிது காலம் சென்னை மாநகராட்சியில் கரோனா தடுப்புப் பணியில் பரிசோதனை செய்பவராகத் தற்காலிகமாக இருந்துள்ளார். அவருக்கே இந்த நிலைமைதான் என்றால், சாதாரணப் பொதுமக்களது உயிரை இந்த ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு மதிப்பார்கள், காப்பாற்றுவார்கள் என்று சொல்ல வேண்டியது இல்லை.
சென்னை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும் அதிகமாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஊடகவியலாளர்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, பாதுகாப்புப் பணியில் இருப்பவர்களுக்கே சரியான பாதுகாப்பு இல்லை என்று தெரிகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பரிசோதனைகளைச் செய்திருந்தால், இவர்கள் இந்த அளவு பாதிப்பை அடைந்திருப்பார்களா? நோய்த் தொற்று ஏற்பட்டவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தாததால்தானே, அவர்களால் இத்தனை பேருக்குத் தொற்று பரவியுள்ளது.
தொற்று ஏற்பட்டவர்களைத் தனிமைப்படுத்துவதற்கு ஏராளமான திருமண மண்டபங்கள், கல்லூரிகள், பள்ளிகளை ஏற்பாடு செய்து வைத்துள்ளோம் என்று சொல்லும் அரசு, அங்கு அவர்களைத் தங்க வைக்கத் தயங்குவது ஏன்?
பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டவர்களையும், 'உங்களுக்கு அறிகுறி இல்லை' என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைப்பதால்தானே இந்தப் பரவல் அதிகம் ஆகிறது என்பதை அரசு உணர்ந்ததா?
இப்படி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்கள், அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுகிறார்களா? அவர்கள் முறையாகக் கண்காணிக்கப்பட்டு இருந்தால் இந்த அளவுக்குச் சென்னையில் நித்தமும் எண்ணிக்கை அதிகமாகி வருமா? தினமும் ஆலோசனைகள் செய்யும் முதல்வர், என்ன மாதிரியான ஆலோசனை செய்கிறார்?
அவரும் கணக்குக் காட்ட, 'நானும் செயல்படுகிறேன்' என்பதை ஊருக்குச் சொல்வதற்காக, நாள்தோறும் ஆலோசனை நாடகங்களை நடத்துகிறாரா?
சென்னையில் மட்டும் முன்னெச்சரிக்கை என்ற பெயரால், அதிகாரிகள் குழுவை நியமனம் செய்து, எத்தனை நாள் ஆகிவிட்டது? அதன் பிறகும் தொற்று குறைந்தபாடு இல்லை என்றால், இந்த அரசாங்கத்துக்குப் பேரிடர் காலத்தில் எப்படிச் செயல்படுவது என்பதே முழுமையாகத் தெரியவில்லை என்று அர்த்தம்!
ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன; பாதிக்கப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வரைச் சந்தித்த மருத்துவர் குழு, சென்னையில் மட்டும் ஜூன் மாதம் இறுதிக்குள் இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லியிருப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிகளவில் பரிசோதனைகள் செய்யாவிட்டால் இந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லியதாகத் தகவல்கள் வருகின்றன. ஆனால், பரிசோதனைகள் செய்தால் எண்ணிக்கை கூடும் என்பதற்காகப் பரிசோதனை செய்யாமல் தவிர்க்கிறது தமிழக அரசு.
நோயை மறைக்க முடியாது. அது இன்று இல்லாவிட்டாலும் இரண்டு நாளில் வெளியில் வந்துவிடும். எனவே, நோயை மறைப்பது என்பது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் ஆபத்து என்பதை முதல்வர் உணர வேண்டும்.
தமிழகத்திலிருந்து சென்றவர்கள் மீண்டும் மாநிலத்துக்குள் வருவார்கள். அப்படி வருபவர்களைத் தனிமைப்படுத்துவதற்கு தமிழக அரசு தயாராக இருக்க வேண்டும். வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் இருப்பவர்கள், தங்களை அழைத்து வர தமிழக அரசு எந்த உதவியும் செய்வதில்லை என்று வீடியோக்கள் எடுத்து அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். இவர்களை அழைத்து வர வேண்டிய கடமையும் தமிழக அரசுக்குத்தான் இருக்கிறது. அவர்களைத் தனிமைப்படுத்திக் காக்க வேண்டிய பொறுப்பும் தமிழக அரசுக்குத்தான் இருக்கிறது.
மார்ச் 22-ம் தேதி தொடங்கி, மே மாதம் இறுதி வரைக்கும், 'கரோனா கட்டுக்குள் இருக்கிறது' என்று சொல்லியே காலத்தைக் கடத்திய தமிழக அரசு, மேலும் பரவாமல் தடுப்பதற்கு ஆக்கபூர்வமான காரியங்களைச் செய்ய வேண்டும்.
களப்பணியில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்களைக் காக்க வேண்டும். வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வந்து, அவர்களைத் தனிமைப்படுத்திப் பாதுகாக்க வேண்டும். இங்கே இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை, அவர்களது மாநிலத்துக்குப் பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டும்.
பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். அறிகுறி இல்லை என்பதற்காக பாசிட்டிவ் என்று முடிவுகள் வந்தவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தனது கடமையிலிருந்து தமிழக அரசு நழுவக்கூடாது. சென்னைக்குச் சிறப்புக் கவனம் செலுத்தியாக வேண்டும். வீடு வீடாகப் பரிசோதனைகள் செய்ய வேண்டும். நோய்ப்பரவல் கட்டுக்குள் இல்லை; கட்டுக்கு அடங்காமல்தான் இருக்கிறது என்பதை அரசு உணர வேண்டும்.
இந்த நடவடிக்கைகளில் முதலில் வெளிப்படைத்தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும். தினமும் மாலையில் ஏதோ எண்ணிக்கையைச் சொல்வதோடு கடமை முடிந்ததாக நினைக்கக் கூடாது. எதையும் மறைக்க நினைப்பதே மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம் என எச்சரிக்க விரும்புகிறேன்.
வரலாற்றில் மாபெரும் கடும்பழிக்கு இரையாகி விடாதீர்கள் என்பதே எனது அனைத்துக் கோரிக்கைகளுக்குமான உண்மையான அர்த்தம் என்பதை முதல்வர் உணர்ந்து செயல்பட வேண்டும்".
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago