பிரபல 10 வழக்குரைஞர்களின் கடிதத்தினையடுத்து புலம் பெயர்வோர் மீது உச்ச நீதிமன்றம் அக்கறை செலுத்தியது வரவேற்கத்தக்கது. கடிதம் எழுதிய வழக்கறிஞர்களுக்குப் பாராட்டு என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
.இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:
“கரோனாவின் தாக்குதலால் சொந்த ஊர்களுக்கு நடைபயணமாகச் செல்லும் மக்களுக்குத் தேவையான உதவி, பாதுகாப்புகள் தேவை என்ற மனுவின் மீது - அது ‘‘அரசின் கொள்கை முடிவு’’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றம் இப்படிக் கூறியது அதிர்ச்சிக்குரியது என்றும், பிரபலமான பத்து வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தையடுத்து, நீதிபதிகள் இதில் அக்கறை செலுத்த முற்பட்டது வரவேற்கத்தக்கது.
நமது ஜனநாயக அமைப்பில், நிர்வாகத் துறை, சட்டமியற்றும் துறை ஆகிய இரண்டு துறைகளின் அதிகார எல்லை, சட்டங்கள் - முடிவுகள் பற்றி ஆராய்ந்து தீர்ப்பளித்து அவர்களுக்குரிய கடமைகளை முறையாக நிறைவேற்ற வைக்கும் முழுப் பொறுப்பும் மூன்றாவது துறையான நீதித் துறைக்கு - குறிப்பாக உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்திற்கு உரிய கடமைகளாகும்.
» ஓய்வு வயது உயர்வு சலுகை கோரிய ஆசிரியர்களைப் பணியிலிருந்து விடுவிக்கத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆனால், நாடு ‘கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரும் எதிரியான கரோனா (கோவிட் 19) வைரஸுடன்’ ஒரு தொடர் போரை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், நான்கு ஊரடங்குகள், வீட்டுக்குள் முடக்கம், பல லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்மையால் ஏற்பட்ட வறுமை, பசி - நோய் அச்சத்தையே பின்னுக்குத் தள்ளி, பசியுடனும், பிறந்த மண்ணுக்குச் சென்றாவது உறவுக்காரர்களுடன் வாழும் முடிவை எடுத்துள்ளனர்.
இதுவரை இரண்டாம் உலக யுத்தப் போரில் வெளிநாடுகளான பர்மா போன்ற நாடுகளிலிருந்தும், 1947 வட நாட்டில் மதக் கலவரங்களின்போது கால்நடையாக பல்லாயிரக்கணக்கில் அகதிகளாக குடும்பம் குடும்பமாக நடந்து சென்ற பழைய காட்சிகளையெல்லாம் வெகு ‘சின்னக் கோடு’களாக்கி விட்டதைப்போல, பல லட்சக்கணக்கில் சொந்த மாநிலத்திற்குக் கால்நடையாகப் புறப்பட்டுச் செல்லும் - கொடுமையான நிலை.
இதை உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குமூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமல்ல, நமது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜீவாதார உரிமைகளுடன் (Fundamental Rights) வாழும் உரிமை படைத்த மக்களுக்குரிய வாழ்வாதாரப் பாதுகாப்புத் தர வேண்டுகோள் விடுத்து வழக்குரைஞர்கள் சிலர் வாதாடினர்.
அப்போது அரசு சார்பில் வாதாடிய மத்திய அரசு வழக்கறிஞர் (Solicitor General) ‘‘எந்தத் தொழிலாளியும் சொந்த மாநிலம் செல்ல - யாரும் நடந்து செல்லவில்லை என்றும், இது ஒரு பொய்யான செய்தி (Fake News) என்றும்‘’ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததும் (31.3.2020), அதைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘‘அது அரசுகளின் கொள்கை முடிவு - (Policy Decision) நாங்கள் இதற்காக உத்தரவு போட முடியாது’’ என்று கைவிரித்ததும், மக்களாட்சியின் கடைசி நம்பிக்கையும் காணாமற்போகச் செய்த ஒரு கருப்பு அவலமேயாகும்.
பிறகு அடுத்து வந்த வேறு வழக்கில் சில நம்பிக்கை துளிர்க்கும் உச்ச நீதிமன்ற கேள்விகளும் மெல்ல மெல்ல தலைகாட்டியுள்ளன என்பது சற்று ஆறுதலான செய்தி.
கருணையையும், சட்ட அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய உச்ச நீதிமன்றத்தின் மேற்காட்டிய போக்கு, ‘‘அரசின் கொள்கை முடிவு - நாங்கள் அதில் தலையிட்டு உத்தரவிட முடியாது’’ என்ற தவறானப் போக்கினைச் சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத்தின் 10 மூத்த வழக்குரைஞர்கள் டெல்லி, மும்பை போன்ற நீதிமன்றங்களில் வாதாடுபவர்கள் கடிதம் எழுதினர்.
மனிதநேயம் ஒளிர வேண்டிய நேரத்தில், பொறுப்பை தாங்களே தட்டிக் கழித்தல், இதற்கு ஆணை பிறப்பிக்க மனமில்லாமல், அலட்சியமான போக்கே என்ற தோற்றம். இவற்றைக் காட்டிய நீதிப்போக்கு பற்றி, மூத்த வழக்குரைஞர்கள் ப.சிதம்பரம், கபில்சிபல், பிரசாந்த் பூஷன், இந்திரா ஜெய்சிங், விகாஸ்சிங், இக்பால் சாவ்லா, நவ்ரேஸ் சீர்வாய், ஆனந்த்குரோவர், மோகன் கட்டார்கி, சித்தார்த் லூத்ரா, சந்தோஷ் பால், மகாலட்சுமி பாவ்னல், சி.யூ.சிங், ஆஸ்பில்சினாய், மிகிர்தேசாய், ஜானக் துவராகதாஸ், ரஜனி அய்யர், யூசூப் மக்ஹாலா, ராஜீவ் பாட்டீல், காய்த்ரி சிங், சஞ்சய் சிங்வி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்திற்குக் கையெழுத்திட்டுக் கடிதம் அனுப்பினர்.
கடிதம் கிடைத்த அடுத்த நாள் - 26.5.2020 (செவ்வாய்க்கிழமை) ஒரு வகையான நிவாரண நடவடிக்கைகளில் உள்ள போதாமை (inadequate - பல செயல்படாது விட்ட நிலைகள்) பற்றி இப்போது உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது. இன்று வியாழன் (28.5.2020) மீண்டும் விசாரணைக்குப் போடப்பட்டுள்ளது என்றும் செய்தி வெளிவந்துள்ளது.
பல லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமைகளை அலட்சியப்படுத்துதல் ஏற்கத்தக்கதா? அது அரசின் கொள்கை முடிவு தலையிட முடியாது என்பதா? அரசமைப்புச் சட்டத்தின் 142 ஆவது பிரிவினை அலட்சியப்படுத்தி, கவனிக்கத் தவறிய நீதி மறுப்பு ஆகும் என்பதை இந்த மூத்த வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்டியதற்கு நமது பாராட்டுதல்கள்.
சுதந்திரமாக இயங்க வேண்டியது நீதித்துறை கடமை. ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை (குறள் 541)
என்ற நிலையிலிருந்து, உச்ச நீதிமன்றத்தின் போக்கு சரிகிறதோ என்ற எண்ணம் பரவலாக மக்களுக்கு உருவாகலாமா?.
மூத்த வழக்குரைஞர்களை வாழ்த்துகிறோம். தொடரட்டும் உங்கள் நீதி காக்கும் நெடிய பயணம்”.
இவ்வாறு வீரமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
22 hours ago