மின்சாரச் சட்டத் திருத்தம்: கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது; திரும்பப் பெற வலியுறுத்தி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

மின்சாரச் சட்டத் திருத்தம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும், அதனைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (மே 28) புதிய மின்சாரத் திருத்தச் சட்டம் 2020-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் திமுகவை மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

அதோடு, மு.க.ஸ்டாலின், புதிய மின்சாரத் திருத்தச் சட்டம் 2020-ஐ திரும்பப் பெற்றிட பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளதைக் குறிப்பிட்டு, மாநில உரிமைகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாத்திடும் திமுகவின் முயற்சிக்குத் துணை நின்றிட வேண்டும் என பாஜக மற்றும் பாஜக கூட்டணி அரசு அல்லாத மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதம்:

"நமது விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு மட்டுமல்ல; இன்றைக்கு நமது நாடு சிறந்து விளங்குவதற்கு அவர்கள் இன்றியமையாத பங்களிப்புகளைச் செய்துள்ளனர். ஆனால், அவர்கள் கடந்து வந்த பாதை இலகுவானதாக இல்லை. பல ஆண்டுகாலப் போராட்டங்களுக்குப் பிறகே அவர்களது உரிமைகள் நிலைநாட்டப்பட்டன. அத்தைகைய போராட்டங்களில், மிக முக்கியமானது, தமிழ்நாட்டில் மின் கட்டணக் குறைப்பு மற்றும் இலவச மின்சாரம் ஆகியவற்றை வலியுறுத்தி அப்போதைய விவசாயிகள் சங்கத் தலைவர் மறைந்த நாராயணசாமியின் தலைமையில் கோயம்புத்தூரில் நடைபெற்ற மாபெரும் போராட்டமாகும்.

கடன் மற்றும் மோசமான விளைச்சல் ஆகிய சுமைகளால், எந்தவிதமான நிவாரணமும் கிடைக்காத விவசாயிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள்.

விவசாயிகளின் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, 1989-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்காக திமுகவின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் 'விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்' என்று வாக்குறுதியை கருணாநிதி அளித்தார்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்து, மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்ற கருணாநிதி இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்துச் செயல்படுத்தினார்.

அத்திட்டம் 1990-லிருந்து இன்று வரை செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டம்தான் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முக்கியத் தூணாக விளங்கி, உணவுப் பற்றாக்குறையைப் போக்கியதுடன் லட்சக்கணக்கான விவசாயிகளைப் பாதுகாத்தது.

இத்தகைய திட்டத்தை முடக்கும்விதமாக, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் விதமாகவும் மின்சாரத் திருத்தச் சட்டம் 2020 உள்ளது. மேலும், கரோனா தொற்று மற்றும் அதனால் பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது பொறுப்பற்ற முடிவு மட்டுமில்லாமல், திறம்படக் கையாள வேண்டிய கரோனா பேரிடரிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதுமாகும்.

மேலும், நமது அரசியல் சட்டப்படி மின்சாரம் பொதுப்பட்டியலில் இருக்கிறது. மின் நுகர்வு மீதான வரி, மின் விற்பனை மீதான வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலில் உள்ளது. இந்நிலையில் புதிதாக 2020-ம் ஆண்டு புதிய மின்சாரத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய மின்சாரச் சட்டத் திருத்தம் 2020-ன் மூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் கீழ் 246-வது பிரிவு வழங்கியுள்ள மாநிலங்கள் சட்டமியற்றும் அதிகாரத்தையும் மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரத்தையும் மீறுவதாக உள்ளது.

புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தில் உள்ள கீழ்கண்ட அம்சங்கள் மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும், அரசியல் சாசனம் வகுத்துள்ள கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாகவும் இருக்கிறது என்பதை தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

i) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது.

ii) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்குத் தலைவர், உறுப்பினர்களைக் கூட மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தேர்வுக் குழுவே தேர்வு செய்வது.

iii) 5 பேர் கொண்ட அந்த தேர்வுக் குழுவில் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களில் இருவர் மட்டுமே உறுப்பினர்களாக இருப்பது. அது கூட ஒரு வருடப் பதவிக்காலம் கொடுக்கப்பட்டு, மாநிலங்களின் பெயர் அகரவரிசைப்படி உறுப்பினர்களாக நியமிக்கப்படுவது.

iv) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினரோ, தலைவரோ இல்லாமல் இருந்தால், மாநில ஆணையத்தின் பணியை வேறொரு மாநிலத்தின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கவனிக்க உத்தரவிடும் மத்திய அரசுக்கான அதிகாரம்.

v) மின் கொள்முதல், மின் விற்பனை, மின்சாரத்தை அனுப்புதல் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்கள் தொடர்பான தாவாக்களை, இனிமேல் மத்திய அரசின் கீழ் அமைக்கப்படும் மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம் ஒன்றே தீர்வு காணும் என்பதும் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் இப்படியொரு ஆணையத்தை உருவாக்குவது.

vi) மின் ஒப்பந்த அமலாக்க ஆணையத்தில் மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை.

மீண்டும் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்ய பாஜகவுக்கு மக்கள் அளித்த வாக்குகளை மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிப்பதற்கோ, அரசியல் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தை ஒதுக்கித் தள்ளுவதற்கோ பயன்படுத்துவது, ஆரோக்கியமான மத்திய - மாநில உறவுகளுக்கு உகந்ததல்ல. மின்சாரத்தை தனியார்மயமாக்க மாநில அரசின் நிறுவனங்களை மத்திய அரசு மயமாக்குவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

எனவே, திமுகவின் தலைவர் என்ற முறையில், மாநிலங்கள் சட்டமியற்றும் அதிகாரத்தைப் பறிக்கும் புதிய மின்சாரத் திருத்தச் சட்டம் 2020-ஐ திரும்பப் பெற்றிட வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், புதுச்சேரி, டெல்லி ஆகிய 12 மாநில முதல்வர்களுக்கு திமுக தலைவர் எழுதியுள்ள கடிதத்தில், பிரதமருக்கு விடுத்துள்ள கோரிக்கைகளையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தில் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக உள்ளவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அரசியல் சட்டம் வழங்கியுள்ள மாநில உரிமைகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாத்திடும் திமுகவின் முயற்சிக்கு தாங்கள் துணை நின்றிட வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 secs ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்