அலட்சியப் போக்கைக் கைவிட்டு மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே சென்னையிலிருந்து கரோனா தொற்றை விரட்ட முடியும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மே 28) வெளியிட்ட அறிக்கை:
"சென்னையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அரசுத் தரப்பில் புதிய, புதிய உத்திகள் கடைப்பிடிக்கப்பட்டாலும் கூட, கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறையாததைப் பார்க்கும்போது, தலைநகர் சென்னையில் அடுத்து வரும் நாட்களில் நிலைமை என்னவாகுமோ? என்ற அச்சம் வாட்டுகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி மொத்தம் 12 ஆயிரத்து 203 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையின் புறநகர் மாவட்டங்களான செங்கல்பட்டில் 888 பேர், காஞ்சிபுரத்தில் 330 பேர், திருவள்ளூர் மாவட்டத்தில் 825 பேர் என சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் 14 ஆயிரத்து 246 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இது 77% ஆகும்.
சென்னையில் ஏப்ரல் இறுதியில் 906 பேர் மட்டும்தான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்றுடன் முடிவடைந்த 27 நாட்களில் 11 ஆயிரத்து 297 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பில் 92% நடப்பு மே மாதத்தில்தான் ஏற்பட்டுள்ளன. இந்த மாதத்தில் மொத்தம் 11 நாட்கள் 500க்கும் மேற்பட்டோருக்குப் புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளன.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கரோனா கிட்டத்தட்ட கட்டுப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், சென்னையை கரோனா வைரஸ் எவ்வளவு மோசமாகத் தாக்கியிருக்கிறது என்பதற்கு இப்புள்ளி விவரங்களே சாட்சி.
கோயம்பேட்டில் கரோனா தொற்று கடந்த மாத இறுதியில்தான் வேகமாகப் பரவத் தொடங்கியது. அதன்பின் இம்மாத தொடக்கத்தில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டது, புதிய யுத்திகள் வகுக்கப்பட்டது, 'நம்ம சென்னை கரோனா விரட்டும் திட்டம்' அறிமுகம் செய்யப்பட்டது என ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கரோனா குறையவில்லை.
அண்மையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி, ஒரு காவல்துறை உயரதிகாரி அடங்கிய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஏற்கெனவே நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் புதிய பொறுப்பு அதிகாரிகளும் இணைந்து இரவு, பகலாகப் பாடுபட்டு, புதிய உத்திகளைக் கடைப்பிடித்தாலும் அதற்கான பயன் கிடைக்காதது ஏமாற்றமளிக்கிறது.
சென்னையில் அதிக அளவில் சோதனைகள் செய்யப்படுவதால்தான் பாதிப்பு அதிகமாக தெரிகிறது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு வந்தது. ஆனால், அது ஓரளவுக்குத்தான் உண்மை; கரோனா பரவல் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டதுதான் இந்த நிலைக்குக் காரணம் என்று மே 18-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தேன்.
அதை முதல்வருடன் நேற்று முன்நாள் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவ வல்லுநர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். 'சென்னையில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மட்டும் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 5 விழுக்காட்டினர், அதாவது ஒரு லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்' என்று அவர்கள் கூறியுள்ளனர்.
சென்னையில் கரோனாவால் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக வைத்துக் கொண்டால், அவர்கள் அனைவரையும் அதிகபட்சமாக ஒரு வாரத்திற்குள் சோதனை செய்து கண்டுபிடித்து, தனிமைப்படுத்தினால் மட்டும்தான் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
ஆனால், சென்னையில் இப்போது அதிக எண்ணிக்கையில் சோதனை நடத்தப்பட்டாலும் கூட, அது போதுமானதல்ல. இப்போதைய வேகத்தில் சோதனை நடத்தினால், ஒரு லட்சம் பேரையும் கண்டுபிடிக்க மாதக்கணக்கில் ஆகும். அதற்குள் அந்த ஒரு லட்சம் பேரிடமிருந்து இன்னும் பல லட்சம் பேருக்கு கரோனா பரவிவிடும் ஆபத்து உள்ளது.
கரோனா சோதனைகளின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்காவிட்டால், ஜூன் மாதத்திற்குள் சென்னையில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, கண்டுபிடிக்கப்படாமல் இருப்பார்கள் என்றும், குறைந்தபட்சம் இறப்பு விகிதம் 0.7% என்று வைத்துக் கொண்டாலும் கூட 1,400 பேர் உயிரிழப்பார்கள் என்பது வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. இது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. இதை எச்சரிக்கையாகக் கொண்டு செயல்படாவிட்டால் விபரீதங்களைத் தவிர்க்க முடியாது.
சென்னையில் கரோனா சோதனைகளை அதிகரிப்பது சாத்தியமானதுதான். தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் 42 அரசு ஆய்வகங்கள், 28 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 70 ஆய்வகங்கள் உள்ளன. இந்த ஆய்வகங்கள் மூலம் தினமும் சராசரியாக 30 ஆயிரம் சோதனைகள் செய்ய முடியும்.
ஆனால், நேற்று 11 ஆயிரத்து 231 சோதனைகள்தான் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த மே 4-ம் தேதி 50 ஆய்வகங்கள் மட்டுமே இருந்தபோது செய்யப்பட்ட 12 ஆயிரத்து 863 சோதனைகளை விட 14.53% குறைவாகும். இது போதாது.
மற்றொருபுறம் சென்னையில் கரோனாவைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தரப்பில் அளிக்கப்படும் ஒத்துழைப்பும் போதுமானதல்ல. கரோனாவை விரட்ட மக்கள் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று 22 முறை அறிக்கைகள் வாயிலாகவும், 25-க்கும் மேற்பட்ட முறை ட்விட்டர்கள் வாயிலாகவும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால், மக்களிடமிருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.
ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில், மக்கள் முகக்கவசம் அணிவதையும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதையும் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், சென்னையில் 40% மக்கள் முகக்கவசம் அணிவதில்லை; தனிமனித இடைவெளியையும் பின்பற்றுவதில்லை. இத்தகைய அலட்சியப் போக்கைக் கைவிட்டு மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே சென்னையிலிருந்து கரோனா தொற்றை விரட்ட முடியும்.
அணை உடைந்து தண்ணீர் வேகமாக வெளியேறும்போது, அதை தடுப்பதற்கான பணிகள் தண்ணீர் பாயும் வேகத்தை விட விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதேபோல், சென்னையில் கரோனா பரவலைத் தடுப்பதற்கான பணிகள், நோய் பரவுவதை விட அதிக வேகத்தில் நடைபெற வேண்டும்.
இதை உணர்ந்து சென்னையில் தற்போது மேற்கொள்ளப்படும் சோதனைகளின் எண்ணிக்கையை இரு மடங்காகவோ, வாய்ப்பிருந்தால் அதை விட கூடுதலாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீண்டும், மீண்டும் சென்னை மாநகர மக்களை நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கரோனாவை ஒழிக்க முடியாது என்பதை உணர்ந்து, முகக்கவசம் அணிதல், மற்றும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் மூலம் கரோனாவைக் கட்டுப்படுத்த ஒத்துழைக்க வேண்டும்"
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago