காவிரியில் கழிவுநீர் கலப்பு: ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அன்புமணி

By செய்திப்பிரிவு

காவிரியில் கழிவுநீரைக் கலக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (மே 27) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு வகையான தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் திறந்து விடப்படும் கழிவுநீர் காவிரி ஆற்றில் தொடர்ந்து கலந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அத்துமீறலை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

ஈரோடு நகரத்தையொட்டிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகள், சலவை ஆலைகள், அச்சு தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் கலக்கவிடப்பட்டு வந்தது. இதை தடுக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தப்பட்ட போதும் சட்டவிரோதமாக காவிரி ஆற்றில் கழிவுகள் கலக்க விடப்பட்டு வந்தன.

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டதால், காவிரியில் கழிவு நீர் கலப்பது முடிவுக்கு வந்தது. காவிரி ஆறும் தூய்மையடைந்தது.

ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு ஆலைகள் செயல்பட அண்மையில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஆலைகள் திறக்கப்படுவதற்கு முன்பாக ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்க கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றனவா? என்பதை ஈரோடு மாவட்டத்திலுள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறு செய்யாததன் விளைவாக தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஓடை போல ஓடி காவிரி ஆற்றில் கலக்கிறது. கழிவு நீரில் அமிலம் கலந்திருப்பதால் அப்பகுதியில் கடுமையான கார நெடி வீசுவதுடன், அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், தோல் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வளவுக்குப் பிறகும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவதை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தியாவின் புனித நதிகளில் ஒன்றாக காவிரி போற்றப்படுகிறது. ஆனால், கள எதார்த்தம் வேறு விதமாக இருக்கிறது. காவியங்களில் காவிரி புனித நதியாக போற்றப்பட்டாலும், களத்தில் காவிரி சாக்கடையாக மாற்றப்பட்டு வருகிறது.

பெங்களூரு நகரிலும், அதையொட்டிய பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து ஒவ்வொரு நாளும் 150 கோடி லிட்டர் கழிவுகள் காவிரியில் கலக்கவிடப்படுகின்றன. தமிழகத்திற்குள் வந்த பிறகு மேட்டூரிலேயே காவிரியை கழிவுநீர் கால்வாய் ஆக்கும் பணிகள் தொடங்கி விடுகின்றன.

அங்குள்ள கெம்பிளாஸ்ட் ஆலையிலிருந்து புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கார்சினோஜென், நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் டையாக்சின் போன்ற 28 வகையான நச்சுப்பொருட்கள் காவிரியில் கலக்க விடப்படுகின்றன. மேட்டூரில் உள்ள பிற ஆலைகள், ஈரோடு, கரூர், திருச்சி என அனைத்து மாவட்டங்களில் இருந்தும் காவிரியில் கழிவுகள் கலக்கின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் காவிரியில் மக்கள் புனித நீராடும் தலமாக திகழ்கிறது. ஆனால், அங்கு தான் காவிரியில் மொத்தம் 52 வகையாக நச்சுப்பொருட்கள் கலந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. காவிரியில் இவ்வளவு கழிவுகள் கலந்திருப்பது விவசாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீமையை ஏற்படுத்தும்.

அதுமட்டுமின்றி, ஆற்றில் குளிப்பவர்களுக்கும் உடல்நலக் கேட்டை ஏற்படுத்தும். காவிரி கழிவுநீர் தொட்டியாக்கப்படுவதைக் கண்டித்து பாமக பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. காவிரியை தூய்மைப்படுத்த வலியுறுத்தி கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 'கரம் கோர்ப்போம் - காவிரி காப்போம்' என்ற பெயரில் காவிரியை காக்க வலியுறுத்தி ஓகனேக்கல் முதல் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டேன்.

அதன்பின்னர் காவிரியை தூய்மைப்படுத்துவதற்காக 'நடந்தாய் வாழி காவேரி' என்ற பெயரிலான திட்டத்தை தமிழக அரசு, தயாரித்து மத்திய அரசின் நிதியை கோரியிருக்கிறது. தமிழக அரசின் இந்த நோக்கத்தை புரிந்து கொண்டு, காவிரியை தூய்மைப்படுத்தும் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

மாறாக, காவிரியை கழிவுநீர் கால்வாயாக மாற்றுவதை வேடிக்கை பார்க்கக் கூடாது. அதுமட்டுமின்றி, காவிரி ஆற்றில் கழிவுநீரை கலக்கவிடும் அனைத்து தொழிற்சாலைகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் முன்வர வேண்டும்.

காவிரி ஆறு 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக திகழ்வதால், அதை காக்கவும், தூய்மைப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கங்கை ஆற்றைத் தூய்மைப்படுத்த மத்திய அரசு நடப்பாண்டு இறுதிக்குள் மொத்தம் ரூ.20 ஆயிரம் கோடியை செலவிடவுள்ளது. அதேபோல், காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கான நிதியையும் மத்திய அரசு வழங்க வேண்டும்".

இவ்வாறு அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்