ஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் மே 29 முதல் மே 31 ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே வழங்கப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 27) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா வைரஸ் தொற்றினைத் தடுக்க பல்வேறு தீவிர நோய்த் தடுப்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் 24.3.2020 முதல் மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி, ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து, அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அக்கறையினால், ஊரடங்கு உத்தரவுக்கு முன்பாகவே 3,280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு நிவாரணத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
» ஊரடங்கால் முடங்கிய தகவல் உரிமை சட்டம்: மேல்முறையீடு மனுக்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்படுமா?
» சொந்த முகத்தோற்றத்தில் மாஸ்க் - சென்னை, குமரியில் களைகட்டும் விற்பனை
அதன்படி, ஏப்ரல் மாதத்திலேயே அனைத்து 2.01 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் ரொக்க உதவித்தொகையுடன் விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டன. இதில் 98.85 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவித்தொகையும், 96.30 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாப் பொருட்களும் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன.
இது தவிர, ஊரடங்கு தொடர்ந்த காரணத்தினால், மே மாதத்திலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு தகுதியான அளவு அரிசியும், சர்க்கரையும் ஏப்ரல் மாதத்தில் வழங்கியதைப் போன்றே விலையில்லாமல் வழங்க நான் உத்தரவிட்டேன். அதன்படி இதுவரை 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு, மே மாதத்திற்கான பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், நபர் ஒருவருக்கு கூடுதலாக 5 கிலோ வீதம், ஏப்ரல் முதல் ஜூன் முடிய மூன்று மாதங்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையினைப் பொறுத்து, கூடுதலான அரிசியும், 4 மற்றும் அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் அரிசியை இரு மடங்காக உயர்த்தி, இந்த 3 மாதங்களுக்கு வழங்கப்படுகின்றது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரிசியுடன் எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாய விலைக் கடைகளில், விலையின்றி வழங்கப்படும்.
இவ்வாறு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றம் சமையல் எண்ணெய் ஆகியவற்றை 3 மாதங்களாகத் தொடர்ந்து வழங்கி, மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்தது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான்.
நோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் மேற்படி அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், வருகின்ற 29.5.2020 முதல் 31.5.2020 வரை, குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கன்களில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தத்தமது நியாய விலை கடைகளுக்குச் சென்று ஜூன் 1 ஆம் தேதி முதல் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த நடைமுறையின் படி, ஜூன் 1 ஆம் தேதி முதல் அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களுக்குத் தொடர்ந்து விநியோகம் செய்யப்படும்.
பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தும், தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago