தொல்லியல் மற்றும் காணாமல் போன பழங்கால பொருட்களையெல்லாம் கோவையில் நடந்த கண்காட்சியில் பார்த்து பரவசமாகினர் கோவைவாசிகள்.
‘நம்ம கோயமுத்தூர்’ என்ற தலைப்பில் புதுவித கண்காட்சியினை கோவை பீளமேடு சுகுணா திருமண மண்டபத்தில் ‘ஒமேகா’ என்ற அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த கண்காட்சியில் பழம்பொருட்கள் பல்வேறு அரங்குகளில் இடம்பெற்றிருந்தன.
இதில் 6 மாதங்களுக்கு முன்பு உடுமலை கொங்கல் நகரில் மேற்பரப்புஅகழ்வில் கிடைத்த கிமு 2 ஆம் நூற்றாண்டு சேரர் முத்திரை ஓடு. ஊட்டியில் கிடைத்த மான்பாறை ஓவியம். செங்கத்துறையில் சேகரிக்கப்பட்ட 2500 ஆண்டுகள் மேற்பட்ட குறியீடுகள் கொண்ட ப்ராமி எழுத்துக்கள் கொண்ட ஓடுகள், சுடுமண்ணால் ஆன காதணி, தொங்கட்டான், தாயக்கட்டை, நீலகற்கள், பாசிமணிகள் போன்றவை வெகுவாக பார்வையாளர்களை கவர்ந்தன.
இதனை காட்சிக்கு வைத்திருந்த திருப்பூர் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநர் சு.ரவிக்குமார், மக்கள் தொடர்பாளர் க.பொன்னுசாமி ஆகியோர் கூறுகையில், ‘ அந்தக் காலத்தில் காங்கயம், கொடுமணல் ஏரியா ஒரு இண்டஸ்ட்ரியல் ஏரியாவாக இருந்துள்ளது. அங்கிருந்து இரும்பு உருக்குலை, ஊதுலை, ஊதுகுழாய் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு கிடைத்த நீலகற்கள், பாசி மணிகள் போன்றவற்றை ரோமானிய வியாபாரிகள் ரோமானிய காசுகளை கொடுத்து வாங்கிச் சென்ற வரலாற்றுப்பதிவுகள் எல்லாம் கிடைத்துள்ளன.
அந்தக்காலத்து ரோமானிய அரசர் தங்கத்தை கொண்டு போய் அந்த கற்களை வாங்காதீர்கள் என்று மக்களை கேட்டுக் கொண்ட வரலாறும் உள்ளது!’ என்று தெரிவித்தனர்
மகாத்மா காந்தி திருப்பூர் வந்தபோது அங்குள்ள கதர்ராட்டையில் நூல் நூற்றுள்ளார். அந்த ராட்டையையும், அப்போது அவர் அணிந்த கண்ணாடியை காட்சிப்படுத்தியிருந்தார் திருப்பூரை சேர்ந்த எஸ்.பி. அர்ச்சுனன். இவர், 1533ஆம் ஆண்டில் விஜயநகரப்பேரரசர் வெங்கலக்கண்ணாருக்கு கொடுத்த செப்பேடு (செம்பு, வெண்கலப் பாத்திரங்கள் செய்து ஊர் ஊராக கொண்டு சென்று வியபாரம் செய்தவர்களிடம் வரி கேட்டதற்கு பதிலாக தன் தலையை துண்டித்து சத்தியத்தை நிலைநிறுத்திய வியாபாரிக்கு அவர்கள் பரம்பரை சந்திர சூரியர்கள் உள்ளவரை வரிகொடாமல் வியாபாரம் செய்வதற்கு அளித்த அதிகாரப் பத்திரம்), துலாக்கோல் எடைக்கல் இல்லாத தராசு, அந்தக்காலத்து எழுத்தாணி, எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள், பிரிட்டீஸார் காலத்தில் எழுதப்பட்ட கிரயப் பத்திரங்கள் போன்றவற்றை வைத்து பலரையும் கவர்ந்தார்.
இரண்டு தலைமுறைக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த பாட்டுப் புத்தகங்கள், ஓட்டைக்காசு, ஓரணா, நாலணா, எட்டணா, ஒரு பைசா, ரெண்டு பைசா, மூன்று பைசா, ஐந்து பைசா, பத்துபைசா, இருபது பைசா என வரும் பழைய நாணயங்கள், வெளிநாட்டு கரன்சிகள், நாணயங்கள் ஓர் அரங்கில் இடம்பிடித்திருந்தன. 2013 ஆம் ஆண்டில் சினிமா நூற்றாண்டு விழாவிற்காக இந்திய சினிமாவில் சாதித்த 50 முக்கிய பிரபலங்களுக்கு அஞ்சல்தலை வெளியிட்டு சிறப்பு செய்தது. அந்த தபால்தலைகளை காட்சிப்படுத்தியதுடன், எம்.ஜி.ஆர், நாகேஷ், இயக்குநர் ஸ்ரீதர், பானுமதி, மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் உள்ளிட்ட அந்த 50 பிரபலங்களை பற்றிய பயோ டேட்டா மற்றும் அதன்மூலம் உள்ள சினிமா வரலாறை 5204 புகைப்படங்களாக காட்சிக்கு வைத்து அசத்தியிருந்தார் செல்வராஜ் என்பவர். ‘இது அனைத்தும் 50 பிரபலங்களின் அஞ்சல்தலை சேகரிப்பை தேடிச்சென்றபோது 15 ஆண்டுகளில் கிடைத்த தகவல்கள், புகைப்படங்கள்!’ என்று தெரிவித்தார் அவர்.
இவை தவிர நூற்றாண்டுகள் பழமை மிக்க கிணற்றில் நீர் இறைக்கும் கவளை, மரத்திலான எண்ணெய் ஆட்டும் செக், கோவையில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற கோவை தியாகிகளின் வரலாறு, கோவையை உருவாக்கிய தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள், கோவையில் முக்கிய இடங்கள், ஆலயங்கள், மசூதிகள் என சகலமும் இந்த கண்காட்சியில் இடம் பிடித்திருந்தது.
இந்த கண்காட்சியை ஒருங்கிணைத்த சி.ஆர். இளங்கோவன் கூறுகையில், ‘கோவையை நினைவுகூறும் வண்ணம் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று இந்த ஏற்பாட்டை முதன்முறையாக செய்துள்ளோம். மக்களும் ஆர்வத்துடன் வந்து கண்டு வியக்கிறார்கள். இதில் இடம்பிடித்திருக்கும் அனைத்துப்பொருட்களும் நம் தலைமுறைக்கு தெரியவே தெரியாதவை என்பது அவர்கள் பார்க்கும் விதத்திலும் கேள்வி கேட்கும் தன்மையிலுமே உணரமுடிகிறது!’ என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 secs ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago