கரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் மிகத் தீவிரமாகப் போராடி வருகின்றன. இதனால் கடைக்கோடி கிராமங்கள் வரை கரோனா குறித்த விழிப்புணர்வு போய்ச் சேர்ந்திருக்கிறது. அதேநேரம் கரோனா தவிர்த்த பிற நோய்கள் குறித்த மருத்துவப் புரிதல் நாளுக்கு நாள் குறைந்துவருகிறது.
அதிலும் குறிப்பாக, குழந்தைகளுக்கான பருவகால தடுப்பூசி போடும் நாள்களும் கரோனா அச்சத்தால் தள்ளிப் போவதாகவும், இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும் எனவும் எச்சரிக்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ஹபிபுல்லா.
இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ்’ இணையத்திடம் பேசுகையில், “கரோனா அச்சம் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக பெரும்பான்மையான குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் முறையாகக் கொடுக்கப்படவில்லை. மருத்துவமனைக்குச் சென்றால் கரோனா நோய் தொற்றிவிடும் என்று பெற்றோர்கள் மத்தியில் இருக்கும் அச்சமும், அவர்கள் தங்களது மருத்துவரை இப்போதுள்ள சூழலில் சந்திக்க முடியாத நிலையும் இதற்குக் காரணம்.
காசநோய், போலியோ போன்ற தடுப்பூசிகள் கொடுக்காதபோது அந்த நோய்த் தாக்குதல் மீண்டும் அதிகரிக்குமா என்பதுபற்றி இப்போது சொல்லிவிட முடியாது. அதேநேரம், உரிய மருத்துவ ஆலோசனை பெற்று, நோய்த் தடுப்பூசிகளை தாமதமின்றித் தருவது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு நலம் பயக்கும். இது ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்குச் செய்யவேண்டிய கடமை.
மழைக் காலங்களில் குழந்தைகள் அதிக பாதிப்புக்கு ஆளாக நேரிடலாம். சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை குழந்தைகளை அதிகம் தாக்கக்கூடும். குழந்தைகள் மூலம் தாய்க்கும் நோய் பரவலாம். தாயும் அவதியுற்றால் குடும்பம் பாதிப்புக்கு ஆளாக நேரிடும். எனவே, அதி கவனத்துடன் இருக்கவேண்டிய நேரம் இது. காய்ச்சல் இல்லாத வரையில் பயம் இல்லை. எல்லாக் காய்ச்சல்களும் கரோனா காய்ச்சல் இல்லை. என்றாலும் சாதாரணக் காய்ச்சல் என்று காய்ச்சல் வந்தால் உதாசீனமும் செய்ய முடியாது. ஃபுளூ காய்ச்சல், டெங்கு, மலேரியாவுடன் கரோனாவும் கை கோக்குமா என்று பலர் கேட்கிறார்கள். என் அனுபவத்தில், அதற்கும் வாய்ப்பிருக்கிறது என்றுதான் சொல்வேன்.
ஏனென்றால், இயல்பாகவே எந்த நோய் வந்தாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இது கரோனா வைரஸ் உடலில் உட்புக வழி வகுக்கலாம். இப்படிப் பல நோய்கள் உடலைத் தாக்கினால் அதை ‘சிண்டமிக்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். பல நோய்களுடன் கூடிவாழும் தன்மை கொண்டதாகவே இப்போது கரோனா வைரஸ் இருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு இந்த நேரத்தில் போதிய ஊட்டச்சத்தான உணவுகளைப் பெற்றோர் கொடுக்க வேண்டும். பச்சிளம் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டமுடியும். அதேபோல் எந்தக் காரணத்தைக் கொண்டும் தடுப்பூசிகளைத் தள்ளிப் போடாமல் உரிய நேரத்தில் எடுத்துக்கொள்வதன் மூலம் குழந்தைகளை எதிர்கால நோய்களில் இருந்தும் காக்கலாம்.
நிகழ்கால நோய்த் தொற்றின் அச்சத்தில், எதிர்காலத்தில் அவர்களை நோயாளியாக்கிவிடக் கூடாது. அரசும், சுகாதாரத் துறையின் மூலம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை குழந்தைகளின் பெற்றோர் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago