அடிக்கிற வெயிலில் செத்துவிடுவோம் என நினைத்தேன்; தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் குரல்!

By நந்தினி வெள்ளைச்சாமி

டெல்லி நிசாமுதீன் பாலத்தில் ஒருவர் 'Type pad' போனில் பேசிக்கொண்டே அழுதுகொண்டிருக்கிறார். பிடிஐ நிறுவனத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் அதைப் படம் பிடிக்கிறார்.

"எங்களைப் போன்ற தொழிலாளர்கள் சக்கரத்தில் மாட்டிக்கொண்ட சக்கையைப் போல. வாழ்க்கை முழுக்க நசுங்கிச் சுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அதைத்தவிர வேறு வாய்ப்பில்லை எங்களுக்கு" எனக் கதறி அழுதவரின் பெயர் ராம்புகார் (38).

ராம்புகாரின் அழுகைக்குக் காரணம் இருந்தது. நிசாமுதீன் பாலத்திலிருந்து 1,200 கி.மீ.க்கு அப்பால் இருக்கும் பிஹார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் ஒருவயது கூட ஆகாத அவருடைய மகன் இறந்துவிட்டான். அந்த வலியில் உடைந்த அழுகை அது.

அழுதுகொண்டிருந்த ராம்புகாரிடம், 'நீ இப்ப உன் வீட்டுக்கு போயிட்டா மட்டும் உன் புள்ளை உயிரோட வந்துரப்போதா... இது ஊரடங்கு... அதெல்லாம் உன்னை அனுப்ப முடியாது' என சொல்லியிருக்கிறார் காவல்துறை அதிகாரி ஒருவர்.

நிர்கதியின் ரணம் அப்பிக்கிடக்கும் முகத்தோடு அழும் ராம்புகாரின் புகைப்படம், இன்னும் பல ஆண்டுகளுக்கு நினைவில் இருக்கும்.

ராம்புகார்

மார்ச் 24, இந்தியாவில் முதல்கட்ட ஊரடங்கு தொடங்கிய நாள். இப்போது மே 31-ம் தேதி வரை நான்காம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. முதல் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே ஊருக்குச் செல்லத் தொடங்கினர். இன்று வரை இந்தியர்கள் நடக்கிறார்கள்; நடக்கிறார்கள்; நடந்துகொண்டே இருக்கிறார்கள்.

நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் பொடிநடை, குடும்பத்தோடு சைக்கிள் பயணம், கிடைக்கின்ற இடத்தில் எல்லாம் பைக் லிஃப்ட், லாரி டிரக்குகளில் நெருக்கியடித்து தேசவலம், சிமெண்ட் கலவை செய்யும் வாகனத்தில் புழுதியுடன் பிரயாணம் என இந்தியா நடுரோட்டில் பயணித்துக்கொண்டே இருக்கிறது. தனியாகவும், குடும்பமாகவும், கூட்டம் கூட்டமாகவும் !

ஊரடங்கில் தப்பிக்க வீடு செல்ல முயன்று வெயிலில் நடந்ததால் மட்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்துகொண்டிருக்கிறார்கள் பலர். 12 வயது குழந்தைத் தொழிலாளி ஒருவர் சத்தீஸ்கரில் உள்ள தனது வீட்டுக்கு தெலங்கானாவிலிருந்து நடந்தே செல்லும்போது, வீட்டை அடையும் தூரத்தில் உயிரிழந்தது, இத்தகைய இறப்புகளின் வலியை நமக்கு உணர்த்திவிடும்.

உடல் நலிவுற்று இறந்தவர்களின் சோகம் ஒருபக்கம் என்றால், விபத்தால் இறந்தவர்களின் நிலைமை இன்னும் கொடுமை.

உத்தரப் பிரதேசத்தின் அவுரியாவில் புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லாரி விபத்துக்குள்ளானதில் புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் பகுதியில் தண்டவாளத்தில் படுத்திருந்த புலம்பெயர் தொழிலாளர்களின் மீது ரயில் ஏறியதில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இன்னும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஆபத்துகளை தினந்தோறும் ஊடகங்களின் வாயிலாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

மார்ச் 24 முதல் மே 17 வரை, 134 தொழிலாளர்கள் சாலை விபத்தால் இறந்திருக்கிறார்கள். இதில், மே 6 - 17 வரையிலான கடைசி 11 நாளில் இறந்தவர்கள் மட்டும் 96 பேர். இது ஊடகங்களில் பதிவான எண்ணிக்கை.

இதற்கிடையே புலம்பெயர் தொழிலாளர்கள் ஏன் நடக்கிறார்கள் என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்படுகிறது. பல மைல்கள் நடந்தே செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களின் திறன்களைப் புனிதப்படுத்தும் வகையிலான கருத்துகளும் உலாவுகின்றன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகள் இவான்கா ட்ரம்ப், அப்படி ஒரு புனிதப்படுத்தலைச் செய்து இந்திய இணைய வெளியில் விமர்சனத்துக்கு ஆளானார்.

ஊரடங்கால் நடந்தே செல்லும் அவலம் வடமாநிலங்களுக்குச் சொந்தமானது என்றுதான் தமிழ்நாடு நினைக்கிறது. ஆனால், பிழைப்புக்காக வெளிமாநிலங்கள் சென்றுவிட்டு தமிழ்நாட்டுக்கு பல நூறு கி.மீ. நடந்தே வந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் இருக்கிறார்கள். கோயம்பேடு சந்தையிலிருந்து அரியலூருக்கும், திருவண்ணாமலைக்கும் நடந்தே சென்ற தொழிலாளர்களின் துயரம் நினைவுகூரத்தக்கது.

வெளிமாநிலங்களிலிருந்து நடந்தே தங்கள் ஊர்களை அடைந்த தமிழகத் தொழிலாளர்கள் சிலரிடம் 'இந்து தமிழ்' இணையதளம் சார்பாக பேசினோம்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஓவரூர் எனும் ஊராட்சியைச் சேர்ந்த இளைஞர் ராகுல் டிராவிட் (வயது 20). மகாராஷ்டிராவின் யவதமால் மாவட்டத்தில் பணிபுரிந்தவர்.

"என்னுடைய அப்பா விவசாயக் கூலியாக இருக்கிறார். அவருக்கு ஒரு நாளுக்கு 500-600 ரூபாய் தான் வருமானம். பிஎஸ்சி வேதியியல் படித்திருக்கிறேன். மகாராஷ்டிராவின் யவதமால் மாவட்டம், புஷத் (Pusad) எனும் பகுதியில், விவசாயம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றில் வேலை செய்து வந்தேன். அங்கு நிரந்தர வருமானம் இல்லை.

வேலையைப் பொறுத்து ஏறக்குறைய மாதத்திற்கு 18 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 2 ஆண்டுகளுக்கு 18 ஆயிரம் ரூபாய் அறை வாடகையை வேலைக்குச் சேரும்போதே மொத்தமாக கட்டிவிட வேண்டும். உணவு அங்கேயே கொடுத்துவிடுவார்கள். அடிப்படைச் செலவுகளுக்கு மட்டும் கொஞ்சம் பணம் எடுத்துக்கொண்டு சம்பளத்தை அப்படியே வீட்டுக்கு அனுப்பிவிடுவேன்" என்கிறார் ராகுல் டிராவிட்.

பிரதிநிதித்துவப் படம்

சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், உணவுக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. உணவுக்கு அஞ்சியே நடந்தே ஊருக்குச் செல்ல முடிவெடுத்ததாகக் கூறும் ராகுல், 1,378 கி.மீ. நடந்தே திருவாரூரில் உள்ள சொந்த கிராமத்தை அடைந்துள்ளார். கிட்டத்தட்ட வங்காள விரிகுடாவின் அகலத்தை நடந்தே கடந்திருக்கிறார்.

"இரவில்தான் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ரயில் இல்லை. ஒன்றுமே இல்லை. ஒரு வாரம் அங்கேயே தங்கிப் பார்த்தோம். ஆனால் அங்கு இருக்க முடியவில்லை. மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் அதிகமாகப் பரவுவதாகச் சொல்லிக்கொண்டனர்.

வெளியில் சென்று ஒழுங்காக சாப்பிடவும் முடியவில்லை. எங்களை ஒரு பள்ளியில் தங்க வைத்தனர். வாகனம் தயார் செய்து ஊருக்கு அனுப்புவதாக தாசில்தார் சொன்னார். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் அவர் எடுத்ததாகத் தெரியவில்லை. அதனால் நாங்கள் நடந்தே செல்ல முடிவெடுத்தோம்.

எங்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 50 பேர் கிளம்பினர்" எனக் கூறும் ராகுல், மகாராஷ்டிரா, கர்நாடகம், தமிழகம் என 3 மாநிலங்களைக் கடந்து 7 நாட்கள் இரவும் பகலும் நடந்தே வந்துள்ளார்.

"மார்ச் 27-ம் தேதி நடக்க ஆரம்பித்தோம். ஏப்ரல் 4 ஆம் தேதி தான் வீட்டுக்கு வந்தோம். நடக்க ஆரம்பிக்கும்போது என்னிடம் சுமார் 3,000 ரூபாய் இருந்தது. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது? தொண்டு நிறுவனங்கள் ஆங்காங்கே உணவு அளிப்பார்கள். எப்போதும் உணவு கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. எப்போதாவதுதான் கிடைக்கும். சாப்பிடாமலும் இருப்போம்.

மகாராஷ்டிரா முழுவதும் மலைப்பகுதிகள். அதில் ஏற முடியாது. பசங்களுடன் பேசிக்கொண்டே நடந்ததால் கஷ்டம் தெரியவில்லை. சோர்வாகத்தான் இருக்கும். காலில் பயங்கர வலியிருக்கும். 'பெயின் ரிலீஃப்' போட்டுக்கொண்டு நடப்போம்.

ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது மட்டும்தான் எங்களுக்கு எண்ணமாக இருந்தது. சிலர் பாதியிலேயே முயற்சியைக் கைவிட்டு அறைக்குச் சென்றுவிட்டனர். நாங்கள் 15 பேர் ஒன்றாக நடந்தோம், சில சமயங்களில் பிரிந்து தனித்தனியாக நடப்போம். 'கூகுள் மேப்' மூலம் லொக்கேஷனைப் பகிர்ந்துகொண்டு ஓரிடத்தில் ஒன்று சேருவோம்.

இரவில் எங்காவது ஷெட் போட்டிருந்தால் படுப்போம். இல்லையென்றால் இரவிலும் நடப்போம். பகலில் வெயில் நேரத்தில் நடப்பது கடினம். அப்போது மட்டும், பைக்கில் யாராவது உதவி செய்தால் வண்டியில் ஏறிக்கொள்வோம். சில கி.மீ. தூரங்களையே அப்படிக் கடந்தோம்.

எல்லோரும் உதவி செய்துவிடவில்லை. சோலாபூரில் தமிழர் ஒருவரே அவருடைய லாரியில் எங்களை ஏற்றவில்லை. அப்போது எங்களுக்கு வருத்தமாக இருந்தது. லாரி, டிரக்குகளில் ஏறிக்கொண்டு வந்தால் அவர்களுக்குப் பணமும் தர வேண்டும்" என்கிறார், திருவாரூர் ராகுல் ட்ராவிட்.

தான் நடந்தே ஊருக்கு வருவது குறித்து அப்போது குடும்பத்தினர் ஒருவரிடமும் ராகுல் சொல்லிக்கொள்ளவில்லை.

"திருவாரூருக்கு வந்தவுடன் தான் வீட்டில் நான் நடந்தே வந்தது தெரியும். வீட்டுக்குச் சென்றதும், எல்லோரும் அழுதனர். ஊரடங்கு அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பே சொல்லியிருந்தால் எங்களைப் போன்ற தொழிலாளர்கள் எல்லோரும் வீட்டுக்குச் சென்றிருப்பார்கள். இன்னும் தொழிலாளர்கள் பல மாநிலங்களில் சிக்கியுள்ளனர்.

பெண்களால் நிறைய தூரம் நடக்க முடியாது. குழந்தைகளை வைத்துக்கொண்டு நடப்பதைப் பார்க்கும்போது எங்களுக்குக் கவலையாக இருக்கிறது. நடந்தே செல்வதன் வலி எங்களுக்குத் தெரியும். அதனால் அரசின் மீது எங்களுக்குக் கோபம் இருக்கிறது" என்று முடிக்கிறார், டிராவிட்.

ராகுலுடன் நடந்தே வந்த மற்றொரு இளைஞர் பிரபாகரன் (வயது 20). நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த பிரபாகரன், பி.எஸ்சி வேதியியல் முடித்திருக்கிறார். மகாராஷ்டிராவின் யவதமால் மாவட்டத்தில் உள்ள ஸ்கேனிங் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். பயிற்சிக் காலத்தில் இருப்பதால் அவருக்கு மாதச் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்.

"அப்பா சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். ஏழ்மையான குடும்பச் சூழல். தமிழகத்தில் நிரந்தரமாக எதுவும் வேலை கிடைக்காததால் கடந்த பிப்ரவரியில்தான் மகாராஷ்டிராவில் வேலைக்குச் சென்றேன். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சமயத்தில் நாங்களே சாப்பாட்டுக்குச் செலவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

அதுமட்டுமல்லாமல், எங்களில் யாருக்காவது கரோனா இருந்தாலும் அந்த ஊர் மக்கள் எங்களை ஒதுக்க நேரிடலாம் என பயந்தோம். அதனால், எங்களின் பாதுகாப்புக்காக வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்தோம்.

அதுமட்டுமல்லாமல், நான் வீட்டில் இருந்தால் அம்மா, அப்பா நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். நடந்தே செல்ல முடிவெடுத்தபோது எங்களுக்கு பயம் இருந்தது. ஆனால், அதைத் தாண்டியும் ஊருக்குச் செல்ல முடிவெடுத்தோம். பாதியில் கைவிடவும் நாங்கள் நினைக்கவில்லை" என்கிறார் பிரபாகரன்.

பிரதிநிதித்துவப் படம்

7 நாட்கள் நடைபயணத்தின்போது பெரும்பாலும் பிஸ்கட்டும் தண்ணீரும்தான் உணவு என்கிறார் பிரபாகரன்.

"எங்களுடன் நடந்த ஒவ்வொருவரிடமும் 1,000-1,500 ரூபாய் தான் இருந்தது. செல்போனுக்குக் கிடைக்கும் இடத்தில் சார்ஜ் போட்டுக்கொள்வோம். பேசுவதற்கு மட்டும்தான் செல்போனைப் பயன்படுத்துவோம். அதனால், நாங்கள் நடந்தே வந்தது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் கூட எங்களிடம் அவ்வளவாக இல்லை.

இரவில் எங்காவது 11 மணிக்குப் படுத்தால் ஊரில் உள்ளவர்கள் எழுவதற்கு முன்பே அதிகாலையில் நடக்க ஆரம்பித்துவிடுவோம். முட்டி வலி இருந்தது. பகலில் அடிக்கும் வெயிலுக்குச் செத்துருவோம் என்றுகூட நினைத்தேன்.

வெயில் அதிகமாக இருக்கும் மகாராஷ்டிரப் பகுதிகளில் தண்ணீர் கூட கிடைக்காது. பொத்தல் காடுகளில் தண்ணீர் எப்படி கிடைக்கும்? சில வீடுகளில் கேட்டால் தண்ணீர் கொடுப்பார்கள். நாங்கள் நடந்த பல பகுதிகள் தரிசு நிலம்தான். சுற்றிப்பார்த்தால் ஒன்றுமே இருக்காது. வீடுகளும் இருக்காது.

பிஸ்கட் பாக்கெட் எப்போதும் கையில் வைத்திருப்போம். அதைத்தான் பகிர்ந்து உண்ணுவோம். உள்ளூரிலேயே இருப்பதை வைத்து வேலை பார்த்துக்கொண்டிருக்கலாம் என்றுகூட தோன்றியது. நாங்கள் நடந்தே வருகிறோம் என வீட்டுக்கு சொல்லியிருந்தால் நாங்கள் சாப்பிட்டோமா என்னவென்று யோசித்துக்கொண்டே இருப்பார்கள் என நினைத்து அவர்களுக்குச் சொல்லவில்லை.

வழியில் எங்களுக்கு ஏதாவது ஆகி இறக்க நேர்ந்தாலும் எங்கள் வீட்டில் நடக்க வேண்டும் என்று நினைத்தோம்" என தனக்கு இந்த நடைபயணம் இறப்பின் வலியை உணர்த்தியதாகக் கூறுகிறார் பிரபாகரன்.

தெலங்கானா - மகாராஷ்டிர மாநில எல்லையில் உள்ள இங்கோலி எனும் பகுதியில் நெட்வொர்க் மார்க்கெட்டிங் பணி செய்து வந்தவர், 22 வயதான சதீஷ்குமார். சுமார் 800 கி.மீ.க்கு மேல் நடந்தே நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள தனது வீட்டை அடைந்திருக்கிறார் இவர். கொளுத்தும் வெயில், ஆங்காங்கே ஓய்வு என நடந்து வந்ததால் கிட்டத்தட்ட வீட்டை வந்தடைய 15 நாட்களாயின.

"அம்மா - அப்பா இருவருமே கூலி வேலைதான். இருவருக்கும் சேர்த்தே ஒரு நாளைக்கு 800 ரூபாய்தான் வருமானம் கிடைக்கும். அதுவும் வேலை இருக்கும்போதுதான். டிப்ளமோ படித்ததால் இங்கோலியில் வேலை செய்து வந்தேன். தமிழகத்தில் குறைவான சம்பளமே கிடைத்தது. நான் வேலை பார்க்கும் இடத்தில் 20-22 ஆயிரம் வரை சம்பளம் வரும். அது ஓரளவுக்குத் தேவையை நிறைவேற்றுவதாக இருந்ததால் அங்கு இருந்தேன்.

எங்களுக்குத் தேவையான அனைத்தையும் நிறுவனம் வழங்கிவிடும். ரீசார்ஜ் உள்ளிட்ட செலவுக்கு மட்டும் நாங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு முழுவதையும் ஊருக்கு அனுப்பிவிடுவோம்.

ஊரடங்கு சமயத்தில் அங்கு உணவுதான் பிரச்சினை. ஒரே சாப்பாட்டை இரு வேளையும் கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும் உணவும் சரியிருக்காது. அந்த உணவால் உடம்பு வீக்காகிவிட்டது. அது எனக்கே தெரிய ஆரம்பித்தது. அதனால் தான் நடந்து செல்ல முடிவெடுத்தோம்" என்கிறார் சதீஷ்குமார்.

பிரதிநிதித்துவப் படம்: சந்தீப் ரசல்

"ஊரடங்கு அறிவிக்கும்போது நான் சேர்த்து வைத்த 10 ஆயிரம் ரூபாய் இருந்தது. 15 பேர் நாங்கள் ஒன்றாக நடந்தோம். நான் மட்டும் நடந்தால் அந்தப் பணம் எனக்குப் போதுமானதாக இருந்திருக்கும். ஆனால், மற்றவர்கள் சிலரிடம் பணம் இல்லாததால் வாங்கும் உணவில் பகிர்ந்து அளிக்க வேண்டும்.

உணவு உள்ளிட்டவை கொடுப்பதாக அப்போது அரசு கூறியது. அது எதுவும் எங்களுக்குத் தெரிவதுபோல் அரசு செய்யவில்லை. வழியில் எந்தப் பிரச்சினை வந்தாலும் வீட்டுக்குச் சென்று சேர்ந்துவிட வேண்டும் என நினைத்தோம்.

ஒருவேளைதான் சாப்பிடுவோம். மற்ற வேளைகளில் பிஸ்கட்டும் தண்ணீரும்தான். இரவில் சாலையில் ஒரு மணிநேரம் அதிகபட்சமாக தூங்குவோம். காலில் அடிபட்டது, புண் ஏற்பட்டது. நடந்தே வரும் எங்களை அங்குள்ளவர்கள் பார்த்தாலே அலர்ஜி போன்று நடந்துகொள்வார்கள்.

போலீஸாரில் சிலர் உதவினர், சிலர் கோபப்படுவார்கள். 11-12 நாட்களில் பெங்களூரு ஹைவே வந்தோம். கிராமங்கள் வழியாகத்தான் நடந்தோம். போலீஸ் என்றால் எங்களுக்கு பயம். அதனால் அவர்கள் கண்களில் மாட்டாமல் கிராமங்கள் வழியாக வந்ததாலேயே தாமதமானது.

கிருஷ்ணகிரியில் போலீஸார் உதவினர். சாப்பாடு கொடுத்து அந்த வழியே வந்த லோடு வண்டியில் ஏற்றிவிட்டனர். அதில் திருவண்ணாமலை வரை வந்தோம். அங்கிருந்து நடந்தே ஊருக்கு வந்தோம்.

நாங்கள் நடக்கும் வழியில் குழந்தைகளுடன் குடும்பமாக வந்தவர்களைப் பார்த்தோம். எல்லோரையும் பார்க்க வருத்தமாக இருக்கும். எங்களுக்கு லிஃப்ட் கொடுத்த வாகனத்தில் அவர்களை ஏற்றிவிட்டோம்.

யாருமே எங்களுக்கு உதவி செய்யவில்லை. ஊருக்கு வந்ததும் கரோனா பரிசோதனை செய்தனர். ஊரில் இருக்கும் நிறையப் பேர் எங்களுக்கு தொற்று இருக்குமோ என பயந்தனர். ஆனால், வீட்டில் நன்றாகப் பார்த்துக்கொண்டனர்.

இன்னும் நடந்தே வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் இறப்பதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில்தான் வாழ்க்கையே இருக்கிறது. இதெல்லாம் சரியாகி இயல்பானால் போவோம். இல்லையென்றால் இங்கேயே வேலை செய்யலாம் என்று தோன்றுகிறது.

மார்ச் மாதம் முதல் எங்களுக்குச் சம்பளமும் வழங்கவில்லை. அம்மா- அப்பா கூலி வேலை செய்து வரும் வருமானத்தில் தான் குடும்பம் பிழைக்கிறது" என்கிற சதீஷ்குமார் அரசின் மீதான தன்னுடைய அதிருப்தியையும், கோபத்தையும் பகிர்ந்துகொண்டார்.

ஒருபக்கம் பசி, மற்றொரு பக்கம் கரோனா பயம், அரசுகள் கைவிட்டதன் வலி என, நடந்தே வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் வீட்டை அடைந்த நிம்மதியுடன் இருந்தாலும், பிரபாகரன் போன்றவர்கள் சம்பளம் இல்லாமல் வாழ்வாதாரத்திற்கு வழி இல்லாமல் திணறிக்கொண்டிருக்கின்றனர்.

இவர்களைப் போன்று இளம்வயதினர் நம்பிக்கையில் பல 100 கி.மீ. கடந்து சொந்த ஊர் திரும்புவதற்கு பல காரணங்கள் இருந்தன. ஆனால், 48 வயதான சுந்தரத்திற்கு இறக்கும் தருவாயில் உள்ள 94 வயதான தன் தந்தையைக் காண வேண்டும் என்பதே கிட்டத்தட்ட 400 கி.மீ. கேரளாவிலிருந்து நடந்தே அரியலூர் மாவட்டம் குழுமூரில் உள்ள வீட்டுக்கு வருவதற்குப் போதுமான காரணமாக இருந்தது.

"கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் பில்லர் குழி பறிப்பது உள்ளிட்ட கூலி வேலைகள் செய்துவந்தேன். ஒரு நாளைக்கு வேலை கிடைக்கும், மற்றொரு நாள் கிடைக்காது. வேலை கிடைத்தால் ஒரு நாளைக்கு 700 ரூபாய் கிடைக்கும். சாப்பாடு செலவு, வீட்டு வாடகை ரூ.2,000 செலவுகளைத் தவிர்த்து மற்றவற்றை வீட்டுக்கு அனுப்பிவிடுவேன்.

நான் தனிமையாக இருந்ததால் எனக்கு 'லாக் டவுன்' அறிவித்ததே தெரியாது. வேலை பார்க்கும் இடத்தில் இருப்பவர்கள்தான் சொன்னார்கள். என் அப்பாவுக்கு 94 வயதாகிவிட்டது. முதல்கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோதே அப்பா இறந்துவிடுவார் என வீட்டிலிருந்து போன் செய்தார்கள். நான் தான் வீட்டுக்கு கடைசிப் பையன். நான் சென்றுதான் அப்பாவுக்குக் கொள்ளி போட வேண்டும் என்பதால், நடந்தே செல்ல முடிவெடுத்தேன்.

பைபாஸ் சாலையில் தான் நடந்துவந்தேன். கையில் எதனையும் எடுத்துக்கொள்ளவில்லை. மாற்றுத்துணி கூட எடுத்துக்கொள்ளவில்லை. துண்டு மட்டும் எடுத்துவந்தேன், அதனை முகத்தில் கட்டிக்கொள்ள வேண்டும் என்று வழியில் போலீஸ் ஒருவர் சொன்னார். அதனால் அதனை மட்டும் முகத்தில் கட்டிக்கொண்டேன்.

சாப்பாடு எதுவும் கிடைக்கவில்லை. பிரெட், வாட்டர் பாட்டில்தான் உணவு. இதுதான் நான் நடந்து வந்த 5 நாட்களிலும் இதுதான் உணவு. என்னிடம் இருந்ததே 2,000 ரூபாய்தான். அது தண்ணீர் பாட்டில்கள், பிரெட்டுக்கே சரியாக இருந்தது. சாப்பிட்டால்தானே பாத் ரூம் செல்வது. அவசரத்திற்கு எதுவாக இருந்தாலும் மறைவாக ஒதுங்கிக்கொள்ள வேண்டியதுதான்.

வெயில் சிரமத்தையெல்லாம் நான் பார்ப்பதில்லை. எப்படியாவது வீட்டுக்குச் சென்று அப்பாவைப் பார்த்துவிட வேண்டும் என்பதுதான் எண்ணம். மதியம் 12-1 மணிக்கு மரத்தடி நிழலில் படுப்பேன். அவ்வளவுதான் தூக்கம். இரவு முழுவதும் நடப்பேன். தூங்குவதற்கெல்லாம் இடம் கிடைக்கவில்லை. போலீஸ் வந்து ஏதாவது கேட்பார்கள் எனத் தூங்கவில்லை.

டிரக், லாரியில் உதவி கேட்டாலும் ஏற்றவில்லை. கோயம்புத்தூரில் லாரியில் ஒருவரிடம் கேட்டபோது தொற்று பயத்தால் ஏற்றவில்லை. அதனை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது" எனக் கூறுகிறார் சுந்தரம்.

சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்படும் தொழிலாளர்கள், படம்: பிடிஐ

கோயம்புத்தூர் உள்ளிட்ட சில பகுதிகளில் தண்ணீர் கேட்டால் கூட பலர் உதவவில்லை என நொந்துகொண்டார் சுந்தரம்.

"என்னிடம் இருந்தது சிறிய செல்போன்தான். செல்போன் பேசுவதற்கு மட்டும்தான். அந்த செல்போனில் அது மட்டும்தான் செய்ய முடியும். அதனால் என்னால் மேப் பார்த்தெல்லாம் என்னால் வர முடியவில்லை. பைபாஸ் சாலையில் வைத்திருக்கும் போர்டுகளை பார்த்தே வந்தேன். கோவை வரைதான் போனில் சார்ஜ் இருந்தது. கோயம்புத்தூரில் தண்ணீர் கேட்டாலே முறைக்கின்றனர். எங்கிருந்து சார்ஜ் போடுவது?

எப்போது இதெல்லாம் முடியும் எனத் தெரியவில்லை. சீக்கிரம் கேரளாவுக்குச் செல்ல வேண்டும். எத்தனை சிக்கல்கள், துன்பங்கள் வந்தாலும் எங்காவது கூலி வேலைக்குச் சென்றுதானே ஆக வேண்டும்" என முடிக்கும் சுந்தரத்தின் வார்த்தைகளில் வாழ்க்கையின் எதார்த்தம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவுவதில் இருக்கும் முக்கிய சிக்கல், அவர்களைக் குறித்த முறையான தகவல் அரசிடம் இல்லாதது. 2011 மக்கள்தொகை பதிவேட்டின் படி, கடைசியாக குடியிருந்த முகவரி மாற்றத்தின் அடிப்படையில் இந்தியாவில் 45 கோடி பேர் புலம்பெயர்ந்தவர்கள். இது 2001-ஐ விட 14 கோடி அதிகம்.

2016-17 பொருளாதார அறிக்கையின்படி, மாநிலம் விட்டு மாநிலம் வேலை பார்க்கும் தொழிலாளர் புலம்பெயர்வு ஆண்டுக்கு 9 கோடி. கடந்த 31-ம் தேதி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் இந்தியாவில் 4.14 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் இருப்பதாகச் சொல்கிறது.

20 லட்சம் கோடி அறிவிப்பு வெளியிட்ட நிதியமைச்சர் மத்திய அரசின் திட்டங்கள் 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் எனத் தெரிவித்தார். அந்த நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள் புலம்பெயர் தொழிலாளர்கள்.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்