மேட்டூர் அணை திறப்பு: காவிரி டெல்டாவில் கால்வாய் தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றிடுக; ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற நிலையில், இப்போது தூர்வாரும் பணிகளை அறிவித்திருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மே 25) வெளியிட்ட அறிக்கை:

"இந்தியாவிலேயே முதன்முதலாக அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்குகின்ற ஒரே ஒரு ஆட்சி, அதை அறிமுகப்படுத்திய ஆட்சி, திமுக ஆட்சிதான். இவை, கருணாநிதி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில், 06-04-1998 அன்று பதிவு செய்துள்ள பொன் முழக்க வரிகள். அதுமட்டுமின்றி, கூட்டுறவுக் கடன்களை அனைத்து விவசாயிகளுக்கும் முதன்முதலில் தள்ளுபடி செய்த ஆட்சியும் திமுக ஆட்சிதான்.

விவசாயிகளின் மேம்பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் வேளாண் தொழில் வளர்ச்சிக்காகவும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னோடியாகத் தமிழ்நாட்டில்தான் திமுக ஆட்சியில், தொலைநோக்குத் திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டு, விவசாயிகளுக்கு உதவும் கரங்களாக விளங்கியது.

ஆனால் இன்றைக்கு 'தும்பை விட்டு வாலைப்பிடிப்பது' போல், ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று அறிவித்துவிட்டு, இப்போது தூர்வாரும் பணிகளை அறிவித்திருக்கிறது அதிமுக அரசு. காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு ஜூன் மாதத்தில் அணை திறக்கப்படும், அதற்குரிய நீர் இருப்பு அணையில் இருக்கிறது என்பது இந்த அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும், அது பற்றி பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளவும் இல்லை; கவலைப்படவும் இல்லை.

மாறாக, நெடுஞ்சாலைத் துறையில், எப்படி கரோனா காலத்திலும் டெண்டர் விடுவது, அந்த டெண்டரில் எப்படி 'ரேட்டை' உயர்த்திப் போட்டு ஊழலுக்கான ஊற்றுக்கண்ணை மேலும் பெருக்கிக் கொள்வது, என்பன போன்றவற்றில் மட்டுமே தீவிரக் கவனம் செலுத்தி வந்தது, தற்போது உயர் நீதிமன்ற விசாரணைக்கே போய் விட்டது.

இந்நிலையில், காவிரி டெல்டா பகுதி வேளாண்மைக்கான நீர்ப்பாசனத்திற்கு மிக முக்கியமான கால்வாய் தூர்வாரும் பணிகளை அறிவித்து, அந்தப் பணிகளைக் கண்காணிக்கச் சிறப்பு அதிகாரிகளையும் நியமித்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி.

அணை திறக்க இன்னும் 18 நாட்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில், அதற்குள் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள கால்வாய்கள் அனைத்தையும் தூர்வாரி விடுவார்களா?

மேட்டூரில் ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் நீர் கடைமடைப் பகுதிக்கும் சென்றடையுமா என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது. துறை அமைச்சரின் அலட்சியம் அணையிலிருந்து வரும் காவிரி நீரும் விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்குமா என்பது பதில் தெரியாத புதிராகவே இப்போது வரை இருக்கிறது.

ஆகவே, காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

வழக்கம் போல் அதிகாரிகளை நியமித்து, அவர்களிடமிருந்து ஆய்வு அறிக்கைகள் பெற்று, தூர்வாரும் பணிகள் அமோகமாக நடந்து விட்டது போன்ற கற்பனைத் தோற்றத்தை உருவாக்கி கணக்குக் காட்ட முயற்சிக்காமல், மேற்கண்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் கண்காணிப்புக்குழுவில் இடம்பெறச் செய்து, கால்வாய் தூர்வாரும் பணிகளில் எவ்வித முறைகேட்டுக்கும் இடம் தராமல் வெளிப்படையாகவும் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் குறுவை சாகுபடிக்கு உண்மையிலேயே கடைமடை வரை தங்கு தடையின்றி, பயன்பட்டிடும் வகையில் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்