நெல்லை மாவட்டத்தில் 19 நாட்களுக்குப்பின் கரோனா பாதிப்பு இல்லை

திருநெல்வேலி மாவட்டத்தில் 19 நாட்களுக்குப்பின் இன்று கரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. இது மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி 63 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து 10 நாட்களுக்கு நோய் தொற்று கண்டறியப்படாமல் இருந்தது. இந்நிலையில் மே 5-ம் தேதி மேலப்பாளையத்தில் கர்ப்பிணிக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு வந்தது.

மகராஷ்டிரா மாநிலத்திலிருந்து ஏராளமானோர் திருநெல்வேலி மாவட்டத்துக்கு திரும்பிவரும் நிலையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வந்தது.

கடந்த 20 நாட்களில் பாதிப்பு 200-க்கும் அதிகமானதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 282 ஆக உயர்ந்திருந்தது.

இந்நிலையில் 19 நாட்களுக்குப்பின் மாவட்டத்தில் மீண்டும் நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. இது பொதுமக்களுக்கு மட்டுமின்றி சுகாதாரத்துறையினருக்கும், அரசுத்துறைகளுக்கும் சற்று நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.

மாவட்டத்தில் நோய் பாதிக்கப்பட்ட 282 பேரில் 94 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியிருக்கிறார்கள். ஒருவர் உயிரிழந்துள்ளார். 187 பேருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE