கடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி ரிசர்வ் வங்கியில் வைப்பீடு; பொதுத்துறை வங்கிகள் ஏழைகளுக்குக் கடன் அளிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கடன் வாங்க ஆளில்லாத நிலையில் பொதுத்துறை வங்கிகள் தங்களிடம் இருந்த பணத்தில் ரூ.10 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கியில் வைப்பீடு செய்துள்ளன. இது வங்கிகளுக்கு இழப்பையே ஏற்படுத்தும். கடன் விதிகளைச் சற்று தளர்த்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வங்கிகள் அதிக அளவில் கடன் கொடுத்தால் அனைத்துத் தரப்பினரும் பயனடைவார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:

''கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு விதிகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நினைக்கும் ஏழை & நடுத்தர மக்களுக்கு பொருளாதார நெருக்கடி பெரும் சுமையாக உருவெடுத்துள்ளது. கடன் வாங்கியாவது நெருக்கடியை சமாளிக்கலாம் என்று நினைக்கும் மக்களுக்கு, அதற்கான வட்டி பெரும் தண்டனையாக அமைந்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் பெரும்பான்மையான ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுவிட்டன. ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு விட்டாலும் கூட, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வாழ்வாதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை; அடுத்த சில வாரங்களுக்கு மக்களுக்கு வாழ்வாதாரங்கள் கிடைப்பதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.

முதற்கட்ட ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டபோது, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.1000 நிதியுதவி வழங்கப்பட்டது. அதன்பின் அந்தக் குடும்பங்களுக்கு மே மாதத்தில் நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

ஜூன் மாதமும் இலவசமாக வழங்கப்படவுள்ளன. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இரண்டாவது முறையாக ரூ.1,000 உதவி வழங்கப்பட்ட போதிலும், அனைவருக்கும் அந்த உதவி கிடைக்கவில்லை. இதனால் வருவாய்க்கு வழி இல்லாத மக்கள் கடன் வாங்கித்தான் காலம் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.

மக்களுக்கு மிகவும் எளிமையாகக் கிடைக்கும் கடன் என்பது நகைக்கடன் தான். எந்தச் சிக்கலும் இல்லாமல் சில நிமிடங்களில் நகைகளை அடகு வைத்து பணம் ஈட்டி விட முடியும். ஆனால், தனியார் வட்டிக் கடைகளில் மிக அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.17,000 வரையில் கடன் வழங்கப்படும் நிலையில், அதற்காக ஆண்டுக்கு 24% முதல் 36% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

நகை இல்லாமல் தனிநபர் கடனாக ரூ.50,000 வரை வழங்கப்படுகிறது; அதற்காக அதிகபட்சமாக 48% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இது மிக அதிகமான வட்டி விகிதம் ஆகும். இவ்வளவு அதிக வட்டிக்கு கடன் வாங்கும் ஏழைகளால் கடன் சுமையிலிருந்து மீள முடியாது.

அதேநேரத்தில் பொதுத்துறை வங்கிகளில் தங்க நகைகளுக்கு அவற்றின் மதிப்பில் குறைந்தது 80% முதல் 90% வரை நகைக்கடன் வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு பவுன் தங்க நகைக்கு சராசரியாக ரூ.30,000 வரை கடன் கிடைக்கும். அதுமட்டுமின்றி, நகைக்கடனுக்கு ஆண்டுக்கு 4% முதல் 8% வரை மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது. அதேபோல் வங்கிகளில் தனிநபர் கடனுக்கு 10.80% முதல் 13.00% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இது மிகக்குறைந்த வட்டியாகும்; மக்களுக்கு சுமையாக இருக்காது.

ஒருவர் தனியார் அடகுக்கடையில் ரூ.1 லட்சம் நகைக்கடன் பெற்றால், அதற்காக ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.36,000 வரை வட்டி செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், பொதுத்துறை வங்கிகளில் அதிகபட்சமாக ரூ.8,000 செலுத்தினால் போதுமானது. ஆண்டுக்கு ரூ.28,000 சேமிக்கலாம்.

அதேபோல், ரூ.1 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் தனியாரிடம் ரூ.48 ஆயிரமும், வங்கிகளில் ரூ.13 ஆயிரமும் வட்டியாக செலுத்த வேண்டும். வங்கிகளில் கடன் பெற்றால் ஆண்டுக்கு ரூ.35,000 வரை சேமிக்க முடியும். இதுதான் கடன்தாரர்களை கசக்கிப் பிழியாத கடனாகும்; இது தான் மக்களுக்கு உதவியாக இருக்கும்.

ஆனால், பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறுவது வானத்தை வில்லாக வளைப்பதற்கு ஒப்பானது ஆகும். பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறுவதற்கான நடைமுறைகள் மிகவும் கடுமையானவை ஆகும். அதன் காரணமாகவே பெரும்பான்மையான மக்கள் தனியார் அடகுக்கடைகளை தேடிச் சென்று அதிக வட்டிக்கு கடன் வாங்கி மீள முடியாத கடன் சுமையில் சிக்கிக் கொள்கின்றனர். பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறுவதற்கான நடைமுறையை எளிமையாக்குவதன் மூலம் இந்நிலையை மாற்றலாம்.

கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். அரசு சார்பில் பெரிய அளவில் நிதியுதவி வழங்க முடியாத சூழலில் மக்களுக்கு குறைந்த வட்டியில் கடனாவது கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மற்றொருபுறம் கடன் வாங்க ஆளில்லாத நிலையில் பொதுத்துறை வங்கிகள் தங்களிடம் இருந்த பணத்தில் ரூ.10 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கியில் வைப்பீடு செய்துள்ளன. இது வங்கிகளுக்கு இழப்பையே ஏற்படுத்தும். கடன் விதிகளை சற்று தளர்த்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வங்கிகள் அதிக அளவில் கடன் கொடுத்தால் அனைத்துத் தரப்பினரும் பயனடைவார்கள்.

பொதுத்துறை வங்கிகளில் நகைக்கடன் பெற விரும்புவோருக்கு வங்கிக் கணக்கு இல்லை என்றால் உடனடியாக புதியக் கணக்கு தொடங்கி, சில மணி நேரங்களில் நகைக்கடன் வழங்க வேண்டும். அதேபோல், வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு ஓராண்டில் திருப்பி செலுத்தும் வகையில், அதிகபட்சமாக ரூ.10,000 சிறு கடனை குறைந்த வட்டியில் வழங்க வேண்டும்.

இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் ஊக்குவிப்பாக அமையும் என்பதால் இதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் செயல்படுத்த வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்