கரோனா கால ஊழலையும், தனது நிர்வாகத் தோல்வியையும் திசை திருப்ப, குரோத எண்ணத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆர்.எஸ்.பாரதியை அதிகாலையில் கைது செய்ய வைத்துள்ளதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மே 23) வெளியிட்ட அறிக்கை:
"மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு புகாரை அதிகாலையில் தூசு தட்டி எடுத்து திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைது செய்திருப்பதற்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை, அன்பகம் உள்ளரங்கத்தில் பேசியதாக ஒரு சர்ச்சையை எழுப்பி, அது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி உரிய விளக்கம் அளித்து, மனப்பூர்வமான வருத்தமும் தெரிவித்துள்ள நிலையில், இந்த அராஜக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதே புகார் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட இரு வழக்குகள் உயர் நீதிமன்ற விசாரணையில் இருக்கின்ற நேரத்தில், நீதித்துறையைக்கூட மதிக்காமல் அலட்சியம் செய்து, கைது வெறியாட்டத்தை எடப்பாடி பழனிசாமி நடத்தியிருப்பது வெட்கக் கேடானது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீது ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு பல்வேறு ஊழல் புகார்களை அளித்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியின் நெடுஞ்சாலைத்துறையில் நிகழ்ந்துள்ள கரோனா கால டெண்டர் ஊழல் மீது விரிவான புகாரை ஆதாரங்களுடன் கொடுத்திருக்கிறார். கரோனா கால ஊழல், கரோனா தோல்வி ஆகியவற்றை மூடிமறைக்க குறிப்பாக முதல்வர் என்ற நிலையில் தனது ஊழலையும், தனது நிர்வாகத் தோல்வியையும் திசை திருப்ப வேறு வழி தெரியாமல், குரோத எண்ணத்துடன், ஆர்.எஸ்.பாரதியை அதிகாலையில் கைது செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் சமத்துவ சமூகநீதிக்காகவும் காலம் காலமாக அயராது பாடுபட்டு வரும் திமுகவின் சீர்மிகு பணிகளை, இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான, அரைவேக்காட்டு, அதிகார துஷ்பிரயோகம் மூலம் எடப்பாடி பழனிசாமியோ, அல்லது அவரை தொலைதூரத்தில் இருந்து இயக்கும் ரிங் மாஸ்டர்களோ களங்கம் கற்பித்து விடவோ, திசை திருப்பி விடவோ நிச்சயமாக முடியாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிகாரம் மற்றும் அராஜகத்தின் துணையோடு நடத்தப்படும் இதுபோன்ற நள்ளிரவு கைது நாடகங்களைப் பார்த்தெல்லாம் திமுக, மிரளாது; நடுங்காது. தமிழக மக்களும் அஞ்சமாட்டார்கள்.
இந்த மாபெரும் மக்கள் இயக்கம்; பனங்காட்டு நரி. எடப்பாடி பழனிசாமி போன்றவர்களின் சலசலப்புகளுக்கோ, பொய் வழக்குகளின் மிரட்டலுக்கோ என்றைக்கும் அஞ்சாது.
கரோனா கால ஊழல்களையும், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கரோனாவை தடுக்க முடியாமல் முற்றிலும் தோல்வியடைந்து, அதோகதியாக நிற்பதையும் மக்கள் மன்றத்திலிருந்து எடப்பாடி பழனிசாமியால் ஒருபோதும் மறைத்திடவும் முடியாது, அதற்கான தார்மீகப் பொறுப்புகளிலிருந்து எக்காலத்திலும் தப்பித்து விடவும் முடியாது என்று எச்சரிக்கை விடுக்கிறேன்!
மேலும், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இருப்பவர்கள் உள்ளிட்ட திமுகவினர் மீது முதல்வர் மற்றும் அதிமுக அமைச்சர்களின் தூண்டுதலில் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பொய் வழக்குகள் புனைவது, சட்டவிரோத, ஜனநாயக விரோத காவல்துறை கைதுகள் போன்ற அராஜக நடவடிக்கைகளை திமுக கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கரோனா என்ற கொடிய வைரஸின் தாக்கத்தால் நாடே சிக்கி அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், எடப்பாடி பழனிசாமியின் அரசு அதிகாலை கைது போன்ற கீழ்த்தரமான அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருவது வெட்கக்கேடானது; கண்டனத்திற்குரியது"
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago