தொழிலாளர் உரிமைகள் பறிப்பு; மே 22-ல் அனைத்து தொழிற்சங்கங்களின் போராட்டம்: மார்க்சிஸ்ட் ஆதரவு

By செய்திப்பிரிவு

கடுமையான கரோனா காலத்திலும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு உதவும் வகையில் தொழிலாளர்கள் 200 ஆண்டுகள் போராடிப் பெற்ற உரிமைகளை முடக்க நினைக்கும் மத்திய அரசுக்கு எதிராகக் களம் காணுவது என்று மத்தியத் தொழிற்சங்கங்களின் மேடை எடுத்துள்ள முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“இந்தியாவில் மிகப் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய அணி திரட்டப்படாத தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அணி திரட்டப்பட்ட தொழிலாளர்கள் என்று அனைவருடைய நலனுக்கும் இந்தக் காலத்தில் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

ஒருபுறம் கரோனா தொற்றை எதிர்த்து அனைவரும் போராடிக் கொண்டிருக்கும்போது அவர்களின் உரிமைகளின் மீது மத்திய- மாநில அரசுகள் கடுமையான தாக்குதலை நடத்தியிருக்கின்றன. இதை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்களின் மேடை மே 22 -ம் தேதி அன்று இயக்கம் நடத்துகிறார்கள்.

மத்திய அரசு அணி திரட்டப்படாத தொழிலாளர்கள், அணி திரட்டப்பட்ட தொழிலாளர்கள் என்று அனைவருடைய வேலை நேரத்தையும் 8 மணி நேரம் என்பதிலிருந்து 12 மணி நேரம் ஆக உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறது. பாஜக தனது மாநில அரசுகளைப் பயன்படுத்தி தொழிற்சாலை சட்டங்களையும் தொழிலாளர் நலச்சட்டங்களையும் நீர்த்துப் போகச் செய்கிறது.

வேலை நேர அதிகரிப்பு, கூடுதல் வேலை நேரத்திற்கு ஓவர் டைம் கிடையாது, வார விடுமுறை கிடையாது, எந்த தொழிலாளர் நலச் சட்டங்களும் அமல்படுத்தப்படாது என்று சட்டத்தைத் திருத்துகிறார்கள். மொத்தத்தில் இரண்டு நூற்றாண்டுகளாக போராடிப் பெற்ற உரிமைகளைக் காலில் போட்டு நசுக்குகிறது.

பாதிக்கப்பட்ட பெரும் பணம் படைத்தவர்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் நிவாரணம் வழங்கும் அரசு, அதைவிடக் கடுமையாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் பறித்துக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு நிவாரணமாக நேரடியாகப் பணம் வழங்க வேண்டும். கரோனா காலத்திற்குச் சம்பளம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை.

ஊரே அடங்கிப் போய் இருக்கும் நிலையிலும் இடம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மண்ணுக்குப் போய்விட மாட்டோமா என இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய அரசு தயாராக இல்லை.

இதற்கு எதிராகக் களம் காணுவது என்று முடிவெடுத்திருக்கும் மத்திய தொழிற்சங்கங்களின் மேடையின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது, பாராட்டுகிறது. அவர்களது போராட்டத்திற்கு தன்னுடைய ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. அவர்களுடைய கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்