பிரித்து வைத்த ‘மது’பழக்கம்; குடும்பத்துடன் சேர்த்த ‘கரோனா’: 85 ஆதரவற்றவர்கள் அடையாளத்தை மீட்டுக் கொடுத்த மதுரை இளைஞர்கள் 

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

கரோனா ஊரடங்கால் சாலைகளில் சுற்றித்திரிந்த 352 ஆதரவற்றவர்களை மீட்ட மதுரையைச் சேர்ந்த இளைஞர்கள், தற்போது அவர்களில் 85 பேரை 5 முதல் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுடைய குடும்பத்துடன் சேர்த்து வைத்து அவர்கள் அடையாளத்தை மீட்டுக் கொடுத்துள்ளனர்.

‘கரோனா’ ஊரடங்கு தொடங்கியபோது பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். வாகனப்போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடின. மனநிலை பாதித்தவர்கள், ஆதரவற்றவர்கள் மட்டுமே சாலைகளில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு உதவ யாரும் முன் வராதநிலையில் மதுரையைச் சேர்ந்த தன்னார்வலர்கள், சாலைகளில் சுற்றிதிரிந்த ஆதரவற்றவர்கள், மனநிலை பாதித்தவர்களை மீட்டு அவர்கள் தலை முடியை வெட்டி, குளிப்பாட்டி சுத்தப்படுத்தி காப்பகங்களில் தங்க வைத்தனர்.

தினமும் சாப்பாடும் வழங்கி அவர்களை கடந்த ஒன்றரை மாதமாக குழந்தைகளை போல் பராமரித்து அரவணைத்தனர். இதில், சாலைகளில் சுற்றித்திரிந்த 352 பேரை மதுரை இதயம் ட்ரஸ்ட் அமைப்பு நிர்வாகி சிவக்குமார் தலைமையில் இளைஞர்கள், பெண்கள் அடங்கிய குழுவினர் மீட்டனர். அவர்களில் 46 பேர் மனநிலை பாதித்தவர்கள்.

அவர்களை மற்றவர்களுடன் தங்க வைக்க முடியாது என்பதால் மாநகராட்சி உதவியுடன் பழங்காநத்தம் மனநல காப்பகத்தில் சேர்த்து அவர்களுக்கு மனநல சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தனர்.

மற்றவர்களிடம் கனிவாக பேசி அவர்கள் வீட்டு முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பெற்றனர். அவர்கள் கூறிய முகவரிக்கு சென்று குடும்பத்தினரிடம் பேசி 85 பேரை மீண்டும் அவர்களுடன் சேர்த்து வைத்து அவர்கள் அடையாளங்களை மீட்டுக் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து சிவக்குமார் கூறுகையில், ‘‘இந்த ‘கரோனா’ ஊரடங்கில் மதுரையை சேர்ந்தவர்கள் மட்டுமே 65 பேரை மீட்டோம். மீதி பேர் திருப்பூர், கோவை, விழுப்புரம், திருண்வணாமலை காளையார் கோயில், நாகர்கோவில், தூத்துக்கடி, மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.இவர்கள் பல்வேறு காரணங்களால் குடும்பத்துடன் மனகசப்பு ஏற்பட்டு சிலர் அவர்களாகவே பிரிந்து வெளியே வந்தனர்.

பலர், இவர்கள் நடவடிக்கை பிடிக்காமல் அவர்கள் குடும்பத்தினரே துரத்தி விட்டுள்ளனர். ஒவ்வொருவரிடம் தினமும் தனியாக உட்கார்ந்து பேசி கவுன்சிலிங் கொடுத்தோம்.

ஆரம்பத்தில் தகவல் தெரிவிக்க மறுத்த அவர்கள், அதன்பிறகு எதனால் வீட்டை விட்டு வெளியே வந்தோம் என மனம்விட்டு பேச ஆரம்பித்தனர். அதில் நிறையபேர் அவர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து 5 முதல் 20 வருடங்களாகிவிட்டது என்றனர்.

இவர்களில் பலர், தினமும் ஏதாவது வேலைக்குச் செல்வது கிடைக்கிற பணத்தில் மது குடிப்பது, ரோட்டோர நடைபாதையில் தூங்கவதுமாக வாழ்க்கையை ஓட்டி வந்தனர்.

சிலர், வயது முதிர்வு, உடல் நலகுறைவால் வேலைக்குச் செல்ல முடியாமல் அரசு மருத்துவமனை, காந்திமியூசியம், மாசி வீதிகள், பெரியார் பஸ்நிலையம், ரயில்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பிச்சையெடுத்து வந்தனர்.

அவர்கள் கொடுத்த முகவரியில் நேரடியாக சென்று விசாரித்து இவர்களை பற்றிய விவரங்களை தெரிவித்தோம். அவர்களில் பலர், இவர்களை சேர்க்க விருப்பப்படவில்லை. இவர்கள் வீட்டை விட்டு வெளியே போனதை பற்றி அவர்கள் பெரிதாக கவலைப்படவும் இல்லை. அதற்கு இவர்களில் பெரும்பாலானவர்களுடையகுடிப்பழக்கமே முக்கிய காரணமாக அவர்கள் கூறினர்.

கணவர்களை பிரிந்த பல பெண்கள், ‘வேலைக்கு போனா ஒரு பைசா கூட வீட்டிற்கு கொடுப்பதே இல்லை. குடும்பத்தையும் கவனிக்கவில்லை, ’ என்றனர். அதன்பிறகு இவங்களையும், அவங்களையும் ஒன்றாக வைத்து பேசினோம்.

இவர்கள் ரோட்டோரத்தில்வசித்த பரிதாபத்தை எடுத்து கூறினோம். இவர்களும், ‘கடந்த ஒன்றரை மாதமாக குடிக்கல, தற்போது குடிக்கனும் என்ற எண்ணமே வரவில்லை, ’ என்றனர்.

மனம் திருந்திய அவர்களை அவர்களும் ஏற்றுக் கொண்டனர். இவர்களில் பலர், ரோட்டோரமாக சாப்பாடு கிடைக்காமல் பட்ட கஷ்டங்களை சொல்லி மீண்டும் எப்படியாவது குடும்பத்தோடு சேர்த்து விடுங்கள் என்றனர்.

வாடிப்பட்டி, அலங்காநல்லூர், மதுரை, திருப்பூர், கோவை, விழுப்புரம், சிவகங்கை, திருண்வணாமலை, நாகர்கோவில், தூத்துக்குடி போன்ற ஊர்களை சேர்ந்த 85 பேரை இதுவரை மீண்டும் அவர்கள் குடும்பத்தோடு சேர்த்து வைத்துள்ளோம்.

மற்றவர்களுடைய குடும்பத்தையும் தேடிக் கொண்டிருக்கிறோம். விரைவில் அவர்களையும் குடும்பத்தோடு சேர்த்துவிடுவோம், ’’ என்றனர்.

ஆட்சியர் டிஜி வினயுடன் ‘கரானா’ ஊரடங்கு தன்னார்வ பணியில் ஈடுபட்ட சிவக்குமார் மற்றும் அவரது குழுவினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்