சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தொற்று பாதித்த பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளில் பொதுமக்களை எளிதில் அணுகி விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் 2,500 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு:
“பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 2,000 குடிசைப் பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளில் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சார்பில் 2,500 களப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் கரோனா வைரஸ் தொற்று குறிப்பிட்ட 30 வார்டுகளில் மட்டும் அதிகமாகக் காணப்படுகிறது. மற்ற பகுதிகளில் குறைந்த அளவிலேயே வைரஸ் தொற்று உள்ளது. இந்த வைரஸ் தொற்று பாதித்த பகுதிகளில் நுண் அளவில் கண்காணித்து தடுப்புப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சியுடன் இணைந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பணிகளில் ஈடுபட உள்ளன.
» ரமலான் தொழுகையை வீட்டிலேயே தொழ வேண்டும்: தலைமை காஜி அறிவிப்பு
» கரோனா இறப்பு விகிதத்தைக் குறைத்தது மிகப்பெரிய சாதனை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட சுமார் 100 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தாமாக முன்வந்து விருப்பம் தெரிவித்திருந்தன. சென்னையில் 1,979 குடிசைவாழ் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் சுமார் 25 லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் பொதுமக்களுக்குச் சிகிச்சைகள் வழங்க 135 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன.
இந்தக் குடிசைவாழ் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் தொற்று தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முகக்கவசம் அணிதல், அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவுதல், கூட்டத்தைத் தவிர்த்தல் மற்றும் தன்சுத்தம் ஆகியவற்றைக் குறித்து எடுத்துரைக்க இந்தத் தன்னார்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுவில் ஒரு திட்டத் தலைவர் (Project Head), திட்டப் பணி மேலாளர் (Programme Manager), தகவல் மேலாளர் (Data Manager), கள மேற்பார்வையாளர் (Field Superviser) மற்றும் களப் பணியாளர்கள் (Out Reach Worker) எனப் பிரிக்கப்பட்டு பணிகள் கண்காணிக்கப்படும். இந்தக் குழுக்களில் மொத்தம் 2,500 களப் பணியாளர்களும், 15 களப் பணியாளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் என மொத்தம் 166 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
ஒரு குழுவிற்கு ஒருவர் என 100 குழுவிற்கு 100 திட்டப் பணி மேலாளரும், 100 தகவல் மேலாளரும் நியமிக்கப்படவுள்ளனர். ஒவ்வொரு களப்பணியாளரும் 300 வீடுகளைக் கண்காணிப்பார்கள். களப் பணியாளர்கள் ஒவ்வொரு பகுதியிலும் அடிப்படைத் தேவைகளான உணவு, மளிகைப் பொருட்கள், குடிநீர், பொதுக் கழிப்பிடம் போன்ற காரணங்களுக்காக வெளியே சென்று வருவதைக் கண்காணித்து அந்த இடங்களில் கூட்டம் கூடாமல் இடைவெளி கடைப்பிடிப்பதை பொதுமக்களிடையே அறிவுறுத்துவார்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் நபர்களின் வயது, பாலினம், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றைச் சேகரித்து, எளிதில் நோய்வாய்ப்படக்கூடிய 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள், கர்ப்பிணிப் பெண்கள், உயர் ரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோய் பாதித்த நபர்கள் ஆகியோரைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளுக்கு உதவி புரிதல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள்.
ஒவ்வொரு களப்பணியாளரும் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வைரஸ் தொற்று பாதித்த வீடுகளைக் கண்காணித்து சரியான நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்களா எனக் கண்டறிந்து, பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுரக் குடிநீர், ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் இதர தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள்.
அந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு நன்கு அறிமுகமான நபர்களைக் களப்பணியாளர்கள் தொடர்புகொண்டு அவர்கள் மூலமாக விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்குதல், சிறு குறு படங்களை வீடியோ மூலம் ஒளிபரப்பி அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.
பொதுமக்களோடு களப்பணியாளர்கள் தொடர்பில் இருந்து நோய்த்தொற்று தொடர்பான ஆரம்ப நிலை அறிகுறிகளைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளுக்கு அவர்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லவும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தேவைப்படின் அறிகுறி உள்ள நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை செய்ய மாநகராட்சி மருத்துவ அலுவலர்களுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள். இந்தக் களப்பணியாளர்கள் வருகின்ற சனிக்கிழமை (24.05.2020) முதல் களப்பணிகளில் ஈடுபடுவார்கள்.
மேலும், இந்தப் பணிகளில் ஈடுபடும் தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு கவனமாகப் பணியாற்ற வேண்டும். பொதுமக்களைக் கண்காணித்து கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்”.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago