கூடுதல் குதிரைத் திறன் மின் மோட்டார் பயன்பாட்டுக்குக் கட்டணம் நிர்ணயித்துள்ள அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, வைகோ இன்று (மே 19) வெளியிட்ட அறிக்கை:
"மத்திய பாஜக அரசு மின்சாரச் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து, மின் உற்பத்தி, விநியோகம் மற்றும் கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட அனைத்தையும் தனியார் பெருநிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதற்கு முனைந்துள்ளது.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும், கைத்தறி நெசவுத் தொழில் உள்ளிட்டவற்றுக்கும், ஏழை எளியவர்களின் குடிசைகளுக்கும் அளிக்கப்படும் இலவச மின்சாரமும் இனி வழங்கப்பட மாட்டாது என்று மின்சாரச் சட்டத் திருத்த வரைவு முன்வடிவில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.
மத்திய அரசின் மின்சாரத்துறை சட்டத் திருத்தங்கள் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றது என்றால், தமிழக அரசின் மின் கட்டணம் தொடர்பான அரசு ஆணை, விவசாயிகளின் தலையில் கல்லைப் போட்டு ஒரேயடியாக ஒழிப்பதற்கு வழி செய்கிறது.
இயற்கைப் பேரிடர், நீர் பற்றாக்குறை, காலநிலை மாற்றங்கள், உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு குறைந்தபட்ச ஆதார விலையின்றி தவிக்கும் சூழல் இவை அனைத்தையும் எதிர்கொண்டுதான் விவசாயிகள் விவசாயத் தொழிலைக் கைவிடாமல் இன்றும் போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.
பருவமழை பொய்த்துப் போவதால், ஆழ்துளைக் கிணறுகளை நம்பித்தான் நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் நிலத்தடி நீர் பெரும்பாலான மாவட்டங்களில் ஆயிரம் அடிக்குக் கீழே போய்விட்டது. கிணற்றுப் பாசனம், ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தும் விவசாயிகள், மின் மோட்டார் வைத்து நீர் இரைத்து பயிர் சாகுபடி செய்யும் நிலைதான் இருக்கின்றது.
கிணற்றுப் பாசனத்தை நம்பி இருக்கும் விவசாயிகள், தமிழக அரசு ஏற்கெனவே அனுமதித்துள்ள 5 மற்றும் 7.5 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
1,000 அடிக்கு மேல் 1,800 அடி வரை உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் 12 முதல் 15 குதிரைத் திறன் மோட்டார்களைப் பயன்படுத்தி நீர் இரைத்தால்தான் பயிர் சாகுபடி செய்ய முடியும்.
மத்திய அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்து இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசு தன் பங்குக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் குதிரைத் திறன் மின் மோட்டார்களைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு குதிரைத் திறன் ஒன்றிற்கு ரூ.20 ஆயிரம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. அதற்கு 'தட்கல் திட்டம்' என்று கூறி அரசாணை எண் 19 என்பதை 11.05.2020 அன்று வெளியிட்டுள்ளது. இது மிகவும் அநியாயமாகும்.
இதனால் விவசாயிகள் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை அதிகமாகக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமை உருவாகும்.
விவசாயிகள் வேளாண் தொழிலை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் கருதுகின்றனவா என்ற ஐயம் ஏற்படுகிறது.
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் மேல் பேரிடியாக இறக்கி உள்ள அரசாணை 19-ஐ திரும்பப் பெற வேண்டும். கரோனா பேரிடரால் முடங்கியுள்ள வேளாண்மைத் தொழிலை மேலும் சீரழிக்க முனையக் கூடாது.
வேளாண்மையைப் பாதுகாக்க இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்குவதும், கூடுதல் குதிரைத் திறன் மோட்டார் பயன்பாட்டுக்குக் கட்டணம் இல்லாமல் மின் விநியோகம் செய்வதும் தமிழக அரசின் கடமை".
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago