மத்திய நிதியமைச்சரின் 20 லட்சம் கோடி ரூபாய்க்கான சிறப்புப் பொருளாதாரச் சலுகை அறிவிப்புகள் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தருவதாகச் சொல்லி திருச்சியில் அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய விவசாயிகள், அதே நிலையில் ஆட்சியரிடம் மனுவும் அளித்தனர்.
மத்திய நிதியமைச்சரின் 20 லட்சம் கோடிக்கான சிறப்புப் பொருளாதாரச் சலுகை அறிவிப்பில் விவசாயிகளுக்கு பெரிதாக எந்தப் பலனும் இல்லை என்கிறார்கள் விவசாயிகள். இதைச் சுட்டிக்காட்டி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திரண்ட விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினர்.
அதன் பின்னர் ஆட்சியரைச் சந்தித்து ஆட்சியர் வழியாக மத்திய நிதி அமைச்சருக்கும் மனு ஒன்றையும் அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது:
‘’இந்திய மக்கள்தொகையான 130 கோடியில் 85 கோடி பேர் விவசாயத்தை நம்பி இருப்பவர்கள். பிரதமர் மோடி கரோனாவால் பாதித்த மக்களுக்கு 20 லட்சம் கோடி ரூபாய்க்கான நிவாரணங்களை அறிவித்தவுடன் இந்திய விவசாயிகள் எல்லோரும் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கும் என்று நம்பினோம்.
ஆனால், கரோனாவுக்கு முன்பு 400 ரூபாய்க்கு விற்ற வாழைத்தார், இப்பொழுது 50 ரூபாய்க்கு விலை போகிறது. விசேஷங்கள், ஹோட்டல்கள் இல்லாததால் ஏக்கருக்கு 3 லட்ச ரூபாய் செலவு செய்து சாகுபடி செய்த வெற்றிலை வயலிலேயே காய்ந்துவிட்டது. வாழை இலைகள் அறுக்காமல் வயலிலேயே காய்ந்துவிட்டன. தர்பூசணி, குச்சிவள்ளிக் கிழங்கு, வெள்ளரி, மலர்கள், காய்கனிகள், ஜூஸ் கரும்புகள், எலுமிச்சை, மக்காச்சோளம், பருத்தி மற்றும் தானியப் பயிர்களை விற்பனை செய்ய முடியாததால் வயலிலேயே அழிந்துவிட்டன; வெள்ளரியை மாடு சாப்பிடுகிறது.
40 கிலோ நெல்லுக்கு 60 முதல் 80 ரூபாய் வரை லஞ்சம் கொடுத்துதான் விற்றோம். சூறாவளியால் அழிந்த வாழை மற்றும் விவசாய விளை பொருட்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம், கடன் தள்ளுபடி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம், ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால், நிதியமைச்சரின் அறிக்கையில் இது எதுவுமே இல்லாமல் ஏமாற்றமே மிஞ்சியது. மக்கள்தொகை விகிதாசாரத்தின்படி பார்த்தால் விவசாயத்தைச் சார்ந்தவர்களுக்கு சுமார் 14 லட்சம் கோடி ரூபாயை நிவாரணமாகக் கொடுத்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக விவசாயிகளை மேலும் கடன்காரர்களாக ஆக்குவதற்குத்தான் அறிவிப்புகள் வெளியிடப் பட்டிருக்கின்றன. வங்கி மேலாளர்களைக் கண்டு, விவசாயிகளை அடிமைகளாக மாற்ற கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அறிவித்திருக்கிறார்கள்.
விவசாயிகள் கடனிலேயே பிறக்க வேண்டும், கடனோடு வாழ வேண்டும் என்றுதான் அரசாங்கம் நினைக்கிறது. விவசாயிகளை அழிவில் இருந்து காப்பாற்றுவது சம்பந்தமாக நிதியமைச்சரின் அறிக்கையில் எதுவும் இல்லை.
எனவே, அனைத்து விவசாயிகளின் கடன்களையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு நிபந்தனை எதுவுமின்றி அரசு ஊழியருக்குப் பென்ஷன் கொடுப்பதுபோல் மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமும், தனிநபர் இன்சூரன்ஸும் கொடுத்து விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும்.’’
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago