பேரிடர் காலத்தை மாணவர்களின் விடுமுறை காலமாக நினைக்கக்கூடாது; 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும்: கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தல் 

By மு.அப்துல் முத்தலீஃப்

ஊரடங்கு நடைமுறையில் இருக்கின்ற காலத்தில் பொதுத்தேர்வு கால அட்டவணையை எப்படி வெளியிட முடியும், விதியை மீறி பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட வேண்டிய காரணம் என்ன, மாணவர்கள் ஊரடங்கு காலத்தில் சந்திக்கும் நெருக்கடியை அரசு மனதில் கொள்ளாமல் நடப்பது ஏன் என பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுசெயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிக்கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் அனைத்தும் திறக்கப்படவில்லை. சிபிஎஸ்சிக்கான பொதுத்தேர்வு ஜூலையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு அதற்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் ஊரடங்கு முடியாத நிலையில், பொதுப்போக்குவரத்து தொடங்காத நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, பிளஸ் டூ எஞ்சிய ஒரு நாள் தேர்வுத்தேதியை அமைச்சர் அறிவித்தார். இதற்கு பெற்றோர், கல்வியாளர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மாணவர்களின் மன நலன், உடல் நலன் குறித்த புரிதல் இன்றி தன்னிச்சையாக இப்படி அறிவிப்பதா என்ற விமர்சனம் எழுந்தது.

இதுகுறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலருக்கு மனு ஒன்றை அளித்துள்ளார். அவரது மனு குறித்து பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் இந்துதமிழ் திசை சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

உங்கள் மனுவின் சாராம்சம் என்ன?

பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 3-ம் கட்ட ஊரடங்குக்கு உண்டான மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் உள்ள நிலையில் பள்ளிக்கல்லூரிகள் உள்ளிட்ட கல்விக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதலை மீறி தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடவேண்டிய அவசியம் எங்கிருந்து எழுந்தது? என்ன காரணத்திற்காக தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது என்பதற்கான நியாயத்தை பள்ளிக்கல்வித்துறை இதுவரை வெளியிடவில்லை.

பள்ளிகளை கரோனா நோய்த்தடுப்புப் பணிக்காக எடுக்க உள்ளதாக தகவல் வெளியானதே அப்படியானால் தேர்வு எப்படி நடத்த முடியும்?

பள்ளிகளை எடுப்பதாக கேட்டிருந்தார்கள். ஆனால் எடுக்கவில்லை. எடுப்பதற்கான ஆய்வுக்குக்கூட வரவில்லை. மாவட்ட ஆட்சியரிடமிருந்து ஆய்வுக்கு வருவார்கள் என்று தெரிவித்திருந்தார்கள் ஆனால் ஆய்வுக்குக்கூட வரவில்லை.

இதில் எங்கு அரசு மீறுவதாக சொல்கிறீர்கள்?

பள்ளிக்கூடங்கள் மூடியிருக்கவேண்டும் ஊரடங்கில் மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் பின்பற்றுகின்றன. அதை கடைபிடிக்கவேண்டுமே தவிர மீற முடியாது. அதில் கூடுதல் விதிகளை வேண்டுமானால் வகுத்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு போக்குவரத்து வசதிகள் மாநிலத்தின் சூழலுக்கு ஏற்ப செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தால் அதில் சில நடைமுறைகளை அறிவித்து இயக்கலாமே தவிர கூடாது என்று அறிவித்திருக்கும்போது பேருந்தை இயக்குகிறேன், லாரி இயக்குகிறேன் என்று சொல்ல முடியாது.

மேலும் உதாரணம் சொல்லவேண்டுமென்றால் கேரள அரசு சில தளர்வுகளை அறிவித்தார்கள் மத்திய அரசு வழிகாட்டுதல்களை மீறுகிறீர்கள் என்று சொன்னவுடன் திரும்பப்பெற்றுவிட்டார்கள். மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்களை கொடுத்துள்ள நிலையில் மாநில அரசு அதை மதிக்காமல் அதை மீறி தேர்வுத்துறை அட்டவணை வெளியிட்டுள்ளது எவ்வாறு சரியாக இருக்கும்.

இதில் என்ன பாதிப்பு வருகிறது?

ஊரடங்கு நேரத்தில் யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாது. சிலர் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார்கள். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாத நிலை. சிலர் தமிழ்நாட்டை விட்டு வெளி மாநிலத்திலும் இருப்பதாக தெரிகிறது. ஊரடங்கில் போக்குவரத்து தொடங்காத நிலையில், அவரவர் வாழ்க்கைச் சூழல் எப்படி இருக்குமோ என்கிற புரிதல் இல்லாத நிலையில் இந்த உத்தரவு பாதிக்கும். இது நியாயமற்றது.

இதில் அரசு ஏதாவது நடைமுறையை அறிவித்துள்ளதா?

மே 12-ம் தேதி கால அட்டவணை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மே 15-ம் தேதி முதன்மைச் செயலாளரும், பள்ளிக்கல்வி ஆணையரும், இயக்குனர்களும் காணொலி காட்சி மூலமாக அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு சில அறிவுரைகள் கொடுக்கிறார்கள். 16 -ம் தேதி இதே அறிவுரைகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள் அவர்கள் மாவட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அளிக்கிறார்கள்.

அதில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்னவென்றால் உங்களுடைய மாணவர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்று கண்டுபிடியுங்கள், எந்தெந்த மாவட்டங்களில், மாநிலங்களிலிருந்து இருந்து அவர்கள் வரணும் என்று கண்டுபிடியுங்கள். அப்படி வரவேண்டும் என்றால் அவர்களுக்கான இ பாஸ் கிடைக்க உதவி செய்யுங்கள்.

ஆசிரியர்களுக்கு இ பாஸ் வழங்கி 21 ம் தேதி பள்ளிக்கு வர சொல்லுங்கள். மாணவர்கள் யார் யார் நோய்த்தடுப்பு கண்காணிப்புப் பகுதியில் வசிக்கிறார்கள் என்று கண்டுபிடியுங்கள், இதை 19-ம் தேதிக்குள் செய்து முடியுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர். மாணவர்கள் எங்குள்ளார்கள், எங்கு தங்கியுள்ளனர், கண்காணிப்பு பகுதியில் வசிப்பவர்கள் யார் என்கிற எந்த விபரங்களும் தெரியாத நிலையில் தேர்வை அறிவித்திருப்பது பாராபட்சமானது.

மாணவர்கள் பேரிடர் காலத்தில் ஊரடங்கில் வீட்டில் இருப்பதை விடுமுறை காலமாக அரசு எப்படி கருதுகிறது என்பது புரியவில்லை. இது தவறான புரிதல். விடுமுறைக் காலம் வேறு, பேரிடர் காலம் வேறு. பேரிடர் காலத்தில் சமூகத்தில் ஏற்படும் சிக்கல் மாணவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கும்.

சமூக சிக்கல்களிலிலிருந்து மாணவர்களை பிரித்து பார்க்க முடியாது. குடும்பத்தில் ஏற்படும் சிக்கலில் மாணவர் மட்டும் தனியாக உட்கார்ந்து படிக்க முடியாது.பல்வேறு சமூக நிலையிலிருந்து மாணவர்கள் வருவார்கள். ஒரு சமூக நிலையில் வாழும் மாணவர்களை வைத்து அனைத்து மாணவர்களையும் கணக்கிட முடியாது.

இதில் வேறு என்ன வகையான சிக்கல் உள்ளது?

வெளியூருக்கு சென்றிருக்கும் மாணவர்கள் கையுடன் புத்தகங்களை எடுத்துச் சென்றிருக்க வாய்ப்பில்லை. அதேப்போன்று வெளியூரிலிருந்து மாவட்டம் விட்டு, மாநிலம் விட்டு மாநிலம் வருபவர்களுக்கு இ பாஸ் கொடுத்து வரவழைக்கிறோம் என்கிறார்கள்.

ஆனால் பேரிடர் மேலாண்மை வழிகாட்டுதல்படி இதுபோன்று வருபவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும், அப்படியானால் அவர்கள் எப்படி தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

ஒரு குடும்பமே வெளியூர் சென்றிருக்கும் நிலையில் மாணவருடன் தந்தை அல்லது தாய் மீண்டும் மாவட்டம் திரும்பினால் அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை உள்ளது, அவர்களுக்கான வழிச்செலவு, தங்குமிடம், வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட பல சிக்கல்கள் உள்ளன.

இதேப்போன்று ஹாட்ஸ்பாட் பகுதியில் உள்ள மாணவர்கள் நிலை என்ன?

அவர்கள் அந்தந்தப் பகுதியில் உள்ள இடத்திலேயே எழுதலாம் என்று தெரிவித்துள்ளனர். எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல் அட்டவனையை கொடுத்துவிட்டு அதன்பின்னர் இருக்கும் பிரச்சினைகள் குறித்து பேசுகிறார்கள், சிந்திக்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.

உங்கள் ஆலோசனையாக என்ன சொல்ல வருகிறீர்கள்?

முதலில் அட்டவணையை திரும்பப்பெற வேண்டும். இரண்டாவது ஊரடங்கு முழுமையாக விலக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தப்பின் தேர்வு நடத்தணும். மூன்றாவது ஊரடங்கு விலக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டு அதன் பின்னர் 15 வகுப்பு நாட்கள் அந்த மாணவர்கள் வருவதை அனுமதித்துவிட்டு அதன் பின்னர்தான் தேர்வு நடத்தப்பட வேண்டும். இந்த 3 அம்சங்கள் தான் முக்கியமாக வைக்கிறோம்.

இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்