இலவச மின்சார உரிமையை மத்திய அரசு பறிக்க முயல்வதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (மே 18) வெளியிட்ட அறிக்கை:
"1. விவசாயிகள், நெசவாளர்கள், குடிசைவாசிகளுக்கு வழங்கப்படுகிற இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு நிபந்தனை விதித்திருக்கிறது. பயனாளிகளிடம் மின்கட்டணத்தை வசூலித்து அதை மாநில அரசு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் திரும்ப செலுத்திக்கொள்ளலாம்.
2. மத்திய நிதியமைச்சகத்தின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ளவில்லை எனில் மாநில அரசுக்கான கடன் வரம்பு குறைக்கப்படும்.
3. பொதுப்பட்டியலில் உள்ள மின்சாரத்தை மாநில அரசை கலக்காமல் மத்திய அரசு மின்சார சட்டத்திருத்தம் கொண்டு வருவது மாநில உரிமைகளை பறிக்கிற முயற்சியாகும். இது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கும் செயல்.
4. இலவச மின்சாரம் என்பது சலுகை அல்ல. அது ஒரு உரிமை. அதை மத்திய அரசு பறிக்க முயல்கிறது. அதை தடுத்து நிறுத்துகிற துணிவு எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இருக்கிறதா?
5. விவசாயிகள், நெசவாளர்கள் ஆகியோர் வாழ்வாதாரத்தை பாதிக்கிற வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டால் அதை எதிர்த்து தமிழகத்தில் கடுமையான போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.
மத்திய பாஜக அரசின் நிதித்துறை தமிழக அரசுக்கு அனுப்பியிருக்கிற சுற்றறிக்கையினால் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழக விவசாயிகள், நெசவாளர்கள் அனுபவித்து வருகிற இலவச மின்சாரத்திற்கு பேராபத்து ஏற்பட்டிருக்கிறது.
இந்த சுற்றறிக்கையின் மூலம் இலவச மின்சாரத்திற்காக மாநில அரசு ஒதுக்குகிற மானியம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி பயன்மாற்ற திட்டத்தின் மூலம் செலுத்தலாம். ஆனால், இலவசமாக மின்சாரத்தை வழங்கக்கூடாது. அப்படி தொடர்ந்து வழங்கப்படுமேயானால் தமிழக அரசுக்கு மத்திய அரசு அதிக நிதி வழங்குவதற்காக இருக்கும் சலுகைகள் பெருமளவில் குறைக்கப்படும் என்று நிபந்தனைகளை விதித்திருக்கிறது.
சமீபத்தில் நிதியமைச்சரின் அறிவிப்பின்படி மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் திரட்டுவதற்கான வரம்பு 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மாநில அரசின் கடன் வரம்பு ரூ. 62 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் கோடியாக உயர்த்திக்கொள்ள முடியும்.
அப்படி உயர்த்துவதற்கு மத்திய பாஜக அரசு சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது. அந்த நிபந்தனைகளில் முக்கியமானது விவசாயிகள், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கக்கூடாது. அப்படி வழங்கப்படுமேயானால் மத்திய அரசின் உயர்த்தப்பட்ட கடன் வரம்பு குறைக்கப்படும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
இது அரசமைப்பு சட்டத்தில் எரிசக்தித்துறை என்பது பொதுப்பட்டியலில் இருந்தாலும் மாநில உரிமைகளை பறிப்பதற்கு மத்திய அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. பொதுப்பட்டியல் என்பது மத்திய, மாநில அரசுகளுக்கு பொதுவானது. மாநில அரசுகளை கலக்காமல் மத்திய அரசு உரிமைகளை பறிப்பது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கும் செயலாகும்.
விவசாயிகள், குடிசைவாசிகள், கைத்தறி நெசவாளர்கள் பெற்றுவருகிற இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய மின்சார சட்டதிருத்தத்தை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு பிறகு தற்போது மத்திய நிதியமைச்சகம் இத்தகைய சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறது. இதன்மூலம் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு உதாசீனப்படுத்தியிருக்கிறது. மத்திய அரசிடம் நிதிக்காக கையேந்தி நிற்கும் அதிமுக அரசு இத்தகைய அதிகார அத்துமீறலை எதிர்த்து குரல் கொடுக்கும் துணிவு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா?
11 லட்சம் குடிசைகளுக்கும், 77 ஆயிரத்து 100 கைத்தறி நெசவாளர்களுக்கும், 22 லட்சம் பம்ப் செட்டுகள் மூலமாக விவசாயிகளுக்கும் 2.1 கோடி ஏழை எளிய மக்களுக்கு சலுகை கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆற்றுப்பாசனத்தில் விவசாயிகள் இலவசமாக நீர்ப்பாசனம் பெறுகிற உரிமையை கிணற்றுப்பாசன விவசாயிகளுக்கும் வழங்கி சமநிலை தன்மை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டதே இலவச மின்சாரம்.
எனவே இலவச மின்சாரம் என்பது சலுகையல்ல. அது ஒரு உரிமை. அதை பறிக்க முயல்கின்ற மத்திய அரசின் முயற்சியை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி தடுத்து நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டால் ஏற்கெனவே பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிற லட்சக்கணக்கான விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்க விரும்புகிறேன்"
இவ்வாறு கே,எஸ்,அழகிரி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago