இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் 88-வது பிறந்த நாள் இன்று. அவரது ஒட்டுமொத்த வாழ்வையும் விவரித்தால் புத்தகமாக விரியும் என்பதால், சுருக்கமாகச் சொல்லும் முயற்சி இது.
ஆசிரியர்களின் வாரிசு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் தாவீது (டேவிட்) - நவமணி தம்பதிக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் தா.பாண்டியன் (18.5.1932). அந்தக் காலத்தில் கல்விச் சேவை செய்வதற்காக கிறிஸ்தவ மிஷனரி தொடங்கிய பள்ளியில் ஆசிரியர்களாக இருந்தனர் பாண்டியனின் பெற்றோர். காமக்காபட்டி கள்ளர் சீரமைப்புத் துறைப் பள்ளியில் ஆரம்பக்கல்வி. பின்னர், உசிலம்பட்டி போர்டு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் பாண்டியன்.
மேடையில் கன்னிப்பேச்சு
சிறந்த பேச்சாளர். உசிலம்பட்டியில் 8-ம் வகுப்பு படித்தபோது அவரைக் கேட்காமலேயே பேச்சுப் போட்டியில் சேர்த்துவிட்ட ஆசிரியர், “உன் அப்பா வாத்தியார்தானே, அவரை எழுதித் தரச் சொல்லிப் பேசு” என்று சொல்லிவிட்டார். தந்தையோ, “படிக்கிற வயசுல மேடையேறுன யாரும் உருப்பட்டதில்லை” என்று சொல்லிவிட்டார். உரை எழுதிக் கொடுத்து பயிற்சியும் தந்தவர் அண்ணன் தா.செல்லப்பா. பிற்காலத்தில் கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர் இவர். ஒருகட்டத்தில் “நீயே போட்டிக்குத் தயாராகு” என்று அண்ணன் தந்த ஊக்கத்தில் சிறந்த பேச்சாளராக உருவானார் பாண்டியன். காரைக்குடி கம்பன் கழகத்துக்கும் இதில் பெரும் பங்குண்டு.
துடிப்பான மாணவர்
காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இன்டர்மீடியட் சேர்ந்தபோதே (1953) கட்சியிலும் சேர்ந்துவிட்டார். மாணவர் பேரவைத் தேர்தலிலும் வெற்றி. பின்னர், அதே கல்லூரியில் ஆங்கில ஆசிரியரான பிறகு, கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டினார். 1957 தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் புனைப்பெயரில் அவர் பேச, ஒரு பத்திரிகையில் உண்மையான பெயர் வந்துவிட்டது. வேலையை ராஜினாமா செய்யச் சொன்னார் கல்லூரி முதல்வர்.
» மகாராஷ்டிராவிலிருந்து பள்ளபட்டி திரும்பிய மேலும் 1 பெண் உள்ளிட்ட 7 பேருக்கு கரோனா
» மே 18-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை
அந்நேரம் பார்த்து பாண்டியனை அழைத்த அழகப்பா கல்லூரி நிறுவனரான அழகப்பச் செட்டியார், “தலைமறைவாக இருந்துகொண்டே போலீஸிடம் சிக்காமல் அரசியல் நடத்துகிற சாமர்த்தியசாலிகள் அல்லவா கம்யூனிஸ்ட்டுகள்... நீ இப்படி மாட்டிக்கொண்டாயே?” என்றார். கூடவே, லண்டனில் தான் சட்டம் படித்த போது வாங்கிய மார்க்ஸ் எழுதிய புத்தகங்களை தா.பா.விடம் கொடுத்தார் செட்டியார். “நம் கல்லூரியில் மாணவர் பேரவைத் தலைவராக வென்ற எந்த மாணவனும், ‘அரியர்’ வைக்காமல் தேர்ச்சி பெற்றதில்லை. நீ இரண்டிலும் வென்றாயல்லவா... அதற்குத்தான் இந்தப் பரிசு!” என்று ஆச்சரியப்பட வைத்தார்.
தாமதமாக உணர்ந்த பேரன்பு!
தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக, இரண்டு வயதில் தந்தையை இழந்த ஜாய்சி என்ற பெண்ணை தா.பா.வுக்குத் திருமணம் செய்துவைத்தார் அப்பா தாவீது. பாண்டியனுக்கு டேவிட் ஜவஹர் என்ற மகனும், அருணா, பிரேமா ஆகிய மகள்களும் உள்ளனர். வெகுசீக்கிரமே, கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளரானதால் வேலையை விட்டுவிட்டு சென்னைக்குப் போய்விட்டார் தா.பா. அரசியலுக்காக சென்னையில் சட்டம் படித்தவர், நீதிமன்றத்துக்குச் செல்லாமல் ‘ஜனசக்தி’யில் கட்டுரை எழுதுவது, பொதுக்கூட்டம் என்று இயங்கிவந்தார். காரைக்குடியில் பள்ளி ஆசிரியையாக இருந்த தனது மனைவி அனுப்பிவைத்த சம்பளத்திலேயே இவரது ஜீவனம் நடந்தது. “திருமணமான புதிதில் அவளது சின்ன எதிர்பார்ப்பான பூவைக் கூட நான் வாங்கிக் கொடுத்ததில்லை. பட்டது போதும் என்று 2012-ல் மறைந்துவிட்டாள். இப்போது அவளது படத்துக்குப் பூச்சூடி கடனைத் தீர்க்கிறேன்” என்கிறார் பாண்டியன்.
தலைசிறந்த ஜனநாயகவாதி!
இந்த உலகத்தை மீட்க ஒரே ஒரு கட்சியால்தான் முடியும் என்றெல்லாம் கருத மாட்டார். மாற்றுக் கட்சிகள், தலைவர்களின் கொள்கைகளையும் மதிப்பவர். ஆரம்பகால கம்யூனிஸ்ட் கட்சியினர், திகவை ‘திராவிடர் கலகம்’ என்று இழிவுபடுத்தி வந்த காலத்திலேயே பெரியாரைப் புகழ்ந்துபேசி கட்சியின் கண்டனத்துக்கு உள்ளானவர். எந்தக் கட்சி எங்கே பொதுக்கூட்டம் போட்டாலும் முதல் ஆளாகப்போய்விடுவார். அண்ணாவை அவரது மேடையிலேயே எதிர்த்துப் பேசியிருந்தாலும், 1967-ல் திமுக வெற்றிவிழா சென்னை கடற்கரையில் நடந்தபோது, பார்வையாளர் வரிசையில் போய் உட்கார்ந்து கவனித்தவர். இப்போதும்கூட திராவிடக் கட்சிகளின் ஆட்சியை விமர்சிக்கிறபோது, அவற்றின் சாதனைகளைச் சொல்லாமல் மறைப்பதில்லை.
கைகொடுத்த ‘கை’!
கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோது, தோழர் டாங்கே, கல்யாணசுந்தரம் போன்றோர்களோடு சேர்ந்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கிய பாண்டியன், 1983 முதல் 2000-ம் வரையில் அதன் மாநிலச் செயலாளராக இருந்தார். சட்டமன்றத்துக்கு 6 முறை, நாடாளுமன்றத்துக்கு 3 முறை என்று மொத்தம் 9 தேர்தல்களில் போட்டியிட்ட தா.பாண்டியன் ஒருமுறைகூட தன் கட்சி சின்னத்தில் வென்றதில்லை. ஆனால், தனிக்கட்சி நடத்திவந்த காலகட்டத்தில் வடசென்னையில் கை சின்னத்தில் போட்டியிட்டு இருமுறை எம்.பி.யாகியிருக்கிறார்.
மும்முறை செயலாளர்!
2000-ல், ஐககவைக் கலைத்துவிட்டு தாய்க்கட்சியில் மீண்டும் இணைந்தார். 2005-ல், கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மும்முறை அப்பொறுப்புக்குத் தேர்வுசெய்யப்பட்டவர், 2015 வரையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார். இளம் வயதிலேயே கட்சியின் தேசியக்குழு உறுப்பினரான அவர், இப்போதும் அப்பொறுப்பில் தொடர்கிறார்.
செத்துப் பிழைத்தவர்!
சிறந்த மொழிபெயர்ப்பாளர். இந்திரா காந்தி தொடங்கி ராஜீவ் காந்தி வரையில் பலரது பேச்சுக்களை மேடையில் மொழிபெயர்த்திருக்கிறார். 1991 மே 21-ல் குண்டுவெடிப்பில் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தின்போது அவருக்குப் பின்னால் இருந்த தா.பா.வும் தூக்கிவீசப்பட்டார். பத்திரிகையில் வெளியான இறந்த 19 பேர் பட்டியலில் முதலில் இவரது பெயரும் இடம்பெற்றது. போலீஸ் அதிகாரிகளும் வீட்டுக்கு போன் செய்து பாண்டியன் இறந்ததாகச் சொல்லிவிட்டார்கள். ஆனால், சென்னை அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டு அதிசயமாக உயிர்பிழைத்தார் தா.பா. அங்கேதான் ராஜீவின் உடல் வைக்கப்பட்டிருந்தது என்பதால், அந்த மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தியின் பெயரைச் சூட்டக் காரணமாக இருந்தார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு விடுதலைப் புலிகளைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால், ஈழத்தமிழர்களின் உரிமைக்காக நெடுமாறனுடன் சேர்ந்து தொடர்ந்து குரல் கொடுத்தார்.
பிடிவாதக்காரர்!
சென்னை துறைமுகத்தில் தினக்கூலித் தொழிலாளர்கள் 58 பேர் நீதிமன்றத்தை நாடி, 1992-ல் பணி நிரந்தர உத்தரவு பெற்றனர். அதை ஏற்காமல் அப்போதைய இயக்குநர் மேல்முறையீடு செய்ததால், அதைக் கண்டித்து காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருந்தார் தா.பா. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த, இவரது கூட்டணியில் இருந்த அதிமுகவும், காங்கிரசும் கேட்டுக்கொண்டும் தன் பிடிவாதத்தைக் கைவிடவில்லை. கடைசியில், வழக்கை வாபஸ் பெற்று 58 பேரையும் பணிநிரந்தரம் செய்தது துறைமுகக் கழகம். எளிமையிலும் பிடிவாதம். இப்போதும்கூட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.
எழுத்தாளர் தா.பா.!
1962-ல் ‘ஜனசக்தி’யில் எழுத ஆரம்பித்தவர், இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறார். ஆரம்ப காலத்தில் ‘சவுக்கடி' என்ற புனைப்பெயரில் இவர் எழுதிய கட்டுரைகளுக்குக் கட்சி எல்லையைத் தாண்டியும் வாசகர்களுண்டு. சுய கட்சி விமர்சனத்தில் இவரை மிஞ்சிய சமகாலப் பொதுவுடமைவாதி யாருமில்லை. 16 ஆண்டு காலம் 'ஜனசக்தி' ஆசிரியராக இருந்த இவர் இதுவரையில் 13 சிறு வெளியீடுகள், 8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். அதில் ‘மேடைப்பேச்சு’, ‘பொதுவுடமையரின் வருங்காலம்’ நூல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றவை!
தனிநபர் வரலாறு!
தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவருக்கு (ஜீவா) சிலை வைத்தபோது, அந்தக்கு ழுவின் தலைவராக இருந்தவர் தா.பா. “தனிநபர்களைவிட இயக்கமே பெரிது” என்று சொல்லும் கம்யூனிஸ்ட் கட்சியில், “தனிநபருக்கும் வரலாற்றில் இடமுண்டு” என்று வாதிடும் துணிச்சலுக்கு மறுபெயர்தான் தா.பா.!
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago