குறுவை பாசனத்திற்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மேட்டூர் அணையில் தற்போது போதிய நீர் இருப்பதால், ஜூன் மாதம் 12-ம் தேதி குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் திறக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காலதாமதமின்றி அறிவிப்பினை வெளியிட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மே 18) வெளியிட்ட அறிக்கை:

"விவசாயிகள் தங்கள் கடினப்பட்டு உழைத்து உருவாக்கிய தங்களின் விளைபொருட்களை, கரோனா நோய்த்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக, உரிய நியாயமான விலைக்கு விற்பனை செய்ய முடியாமல், வேளாண் வருமானத்தைப் பல வழிகளிலும் பறிகொடுத்து, தமிழக விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

அதிமுக அரசின் ஊரடங்கு கால நிவாரணங்கள் ஏதும் விவசாயிகளுக்கோ, விவசாயத் தொழிலாளர்களுக்கோ முறைப்படி சென்றடையாததால், வேளாண் தொழிலை மட்டுமே நம்பியிருந்த விவசாயிகள் நிம்மதியிழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தருணத்தில் காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடியை முறையாகச் செய்திடவும், அதற்குத் தேவையான நீர்ப்பாசனத்திற்கும், ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, குறிப்பாக, கடந்த 8 ஆண்டுகளாக ஜூன் 12-ம் தேதி வழக்கமாக மேட்டூர் அணை நீர்ப்பாசனத்திற்குத் திறந்து விடப்படுவதில்லை என்ற நிலையே நீடித்து வருகிறது. குறிப்பாக, 2016-ம் ஆண்டு 20.9.2016 அன்றும், 2017-ல் அக்டோபர் 2-ம் தேதியும், 2018-ம் ஆண்டு 19.7.2018 அன்றும், கடந்த ஆண்டு 13.8.2019 அன்றும்தான் மேட்டூர் அணை தாமதமாகவே திறக்கப்பட்டது.

உரிய காலத்தில் குறுவை விவசாயத்திற்கான நீர்ப்பாசனத்திற்கு, அணை திறக்கப்படாததால், விவசாயிகள் நொடித்துப் போயிருக்கிறார்கள்; கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்; பல விவசாயிகள் கடன் சுமை தாளாமல், தற்கொலை செய்துள்ளார்கள்.

இந்த முறை நல்ல வாய்ப்பாக, இயற்கையாகவே மேட்டூர் அணையில் தற்போது போதிய நீர், அதன் முழு கொள்ளளவான 120 அடியில், 100 அடி நீர் இருக்கிறது. தென்மேற்குப் பருவ மழையும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது.

வழக்கமாக, 90 அடி நீர் இருப்பு இருந்தாலே, ஜூன் மாதத்தில் அணை திறக்கப்படும். இப்போது கையிருப்பு நீர் இருந்தும், இதுவரை அதிமுக அரசு அணை திறப்பது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது.

ஆகவே, வருகின்ற ஜூன் மாதம் 12-ம் தேதி குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் திறக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காலதாமதமின்றி அறிவிப்பினை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மேட்டூர் அணை திறப்பு குறித்து இப்போதே அறிவிப்பு வெளியிடுவது, குறுவை விவசாயிகளுக்கு ஊக்கத்தை அளித்து, வேளாண்மைத் தயாரிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு உதவும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உழவு மானியம், டிராக்டர், டீசல் மானியம் அளிப்பதை உறுதி செய்திட வேண்டும். தேவையான விவசாயக் கடன் வசதிகள், வட்டி இல்லாமல், பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் வேண்டும்.

விதைகள், இயற்கை மற்றும் செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகள் போன்றவை எவ்விதத் தடையுமின்றி கிடைக்கவும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய முகக்கவசங்கள், கிருமி நாசினி மருந்துகள் உள்ளிட்ட மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை இலவசமாக அரசே வழங்கிடவும் முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்