கரோனா காலத்தில் எந்த அரசியல் கட்சியும் இந்த அளவுக்கு மக்கள் சேவை செய்ததாகத் தகவல் இல்லை; ஸ்டாலின் பெருமிதம்

By செய்திப்பிரிவு

கரோனா காலத்தில் எந்த அரசியல் கட்சியும் இந்த அளவுக்கு மக்கள் சேவை செய்ததாகத் தகவல் இல்லை என, 'ஒன்றிணைவோம் வா' திட்டம் குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மே 16) வெளியிட்ட அறிக்கை:

"எத்தனை எத்தனையோ சரித்திர ஏடுகளையும், ஏடுகளின் மூலம் மாற்றங்களையும் கண்ட திமுகவின் லட்சியப் பயணத்தில், இதுவரை இப்படி ஒரு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்ததே இல்லை என்று புதுமையாகச் சொல்லக் கூடிய அளவில், இன்றைக்குக் காணொலிக் காட்சி மூலமாகவே விரிவான கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

கரோனா மாதிரியான கொடிய நோய்த் தொற்றும் இதுவரைக்கும் நாம் பார்த்தது இல்லை. அதனால் இதுவரை நடத்தப்படாத வகையில் இன்றைய தினம் காணொலி வாயிலாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினோம்.

கரோனா நோய்த் தொற்று பரவி வருகிறது என்று சொல்லி, வீட்டுக்குள் முடங்கி இருக்கவில்லை திமுக; முன்களத்தில் நின்று முயன்று அயராது பணியாற்றினார்கள் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்ற அண்ணாவின் வழியில்; தமிழ்நாட்டின் ஊர்தோறும், ஊரிலுள்ள தெருக்கள் தோறும், தெருக்களில் உள்ள வீடு வீடாகச் சென்று வெகு சிறப்பாகச் சேவை செய்த மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகளையும், சிந்தனைகளையும், செவியாரக் கேட்பதற்காக இன்றைய தினம் இந்த மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தைக் கூட்டினோம்.

ஊரடங்கை அறிவித்த அரசாங்கம், அப்பாவி மக்களின் வாழ்க்கையைப் பற்றியோ, வாழ்வாதாரத்தைப் பற்றியோ எந்தக் கவலையும் கொள்ளவில்லை. உழலும் தமிழ் மக்களைப் பற்றி உளப்பூர்வமாகக் கவலைப்பட்ட ஒரே இயக்கம் திமுக.

முகக்கவசங்கள், கிருமிநாசினி திரவம், அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், மருந்துப் பொருட்கள், பல்வேறு இடங்களில் நிதி உதவிகள் என மக்கள் அவசியம் தேவையென எதிர்பார்க்கும் அனைத்தையும், குமரி முதல் சென்னை வரை அனைத்து மாவட்டங்களிலும் வழங்கியதாக மாவட்டச் செயலாளர்கள், ஊர் வாரியாக, நகர் வாரியாக புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்தார்கள்.

அவர்களுடைய இந்தப் பணிகளை ஒருங்கிணைக்கவே, 'ஒன்றிணைவோம் வா' என்ற செயல்திட்டத்தை அறிவித்திருந்தோம். இதன் மூலமாக ஒரு பொது தொலைபேசி இணைப்புச் சேவையை அறிவித்தோம். தேவைப்படுபவர்கள், தேவையை நிறைவு செய்பவர்கள் என்ற இரு தரப்பையும் இணைக்கும் இணையற்ற பாலமாகவும் பலமாகவும் 'ஒன்றிணைவோம் வா' திட்டம் அமைந்திருந்தது.

இத்திட்டத்தின் மூலம் வந்த தகவல்களை வைத்து, எவ்வளவு துரிதமாகச் செயல்பட்டோம், எத்தனை லட்சம் மக்களைச் சென்றடைந்தோம் என்பதை மாவட்டச் செயலாளர்கள் ஒவ்வொருவரும் விளக்கினார்கள்.

சாதி, மதம் பார்க்காமல், வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு இல்லாமல், அவர் அந்தக் கட்சி, இவர் இந்தக் கட்சி என்று பேதப்படுத்தாமல், இந்தச் சீரிய தொண்டு செய்யப்பட்டுள்ளது. இதில் சிலர் எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கும், திமுக நிர்வாகிகள் பாரபட்சம் பார்க்காமல் கேட்ட பொருளைக் கொடுத்துள்ளார்கள்.

இன்னும் சொன்னால், 'இந்தத் திட்டம் முறையாகச் செயல்படுகிறதா' என்று நோட்டம் விடுவதற்காக 'போன்' செய்தவர்கள் வீட்டுக்கும் பொருட்கள் முறையாக, ஒழுங்காகப் போய்ச் சேர்ந்துள்ளது. அதைக் கண்டு அவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். இதுதான் திமுகவுக்குப் பெருமை சேர்ப்பது; இந்த இயக்கத்தின் தலைமைத் தொண்டனான எனக்கு மன மகிழ்ச்சியையும் பெருமையையும் தருவது!

இதேபோல், உணவுப் பொருளைத் தயாரித்து, அதனைத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் வழங்கும் 'ஏழைகளுக்கு உணவளிப்போம்', 'நல்லோர் கூடம்' என்ற திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்டச் செயலாளர்கள் விளக்கிச் சொன்னார்கள்.

பசி, பட்டினியால் தவிக்கும் மக்களுக்கு உணவைத் தயாரித்து, அதனைக் காலத்தே கொண்டு போய்க் கொடுத்துப் பசி போக்கிய மகத்தான மக்கள் சேவையைச் செய்த அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் நான் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.

உணவு, மருந்துப் பொருட்களுக்கான தேவையை எங்களால் முடிந்த அளவுக்கு; ஆனால், பெருமளவுக்கு நிறைவேற்றிக் காட்டினோம்.

எங்களுக்கு வந்த அழைப்புகளில் பெரும்பாலானவை அரசாங்கம், மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை ஆகியவற்றால் மட்டுமே செய்ய முடிந்தவை. அரசாங்கம் செய்ய வேண்டிய காரியங்களை மொத்தமாகத் தொகுத்து, சென்னையில் தலைமைச் செயலாளரிடம் கொடுத்துள்ளோம்.

திமுக மாவட்டச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர்களிடம் கொடுத்துள்ளார்கள். இந்தக் கோரிக்கைகளை படிப்படியாக அரசு நிர்வாகம் நிறைவேற்றித் தர வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.

மக்கள் வைக்கின்ற கோரிக்கைகளைப் பார்க்கும்போது, இந்த நாட்டில் ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா? முதல்வர் என்ற ஒருவர் இருக்கிறாரா? அமைச்சர்கள் செயல்படுகிறார்களா? என்ற ஐயப்பாடே எழுகிறது!

அந்த அளவுக்கு மக்கள் எல்லா வகையிலும் துன்ப துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில், மூன்று மாத காலத்திற்குப் பிறகு, தமிழக அரசு இன்னமும் மெத்தனமாகவும் மேம்போக்காகவும் செயல்படுவதை அனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஆதங்கத்துடன் சுட்டிக் காட்டினார்கள்.

நோய்த் தொற்று பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை; நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரோக்கியமான உணவு தரப்படுவதில்லை; மருத்துவமனைகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை; மருத்துவர்களுக்கே நோய்த் தடுப்பு உபகரணங்கள் இல்லை என்று மாவட்டச் செயலாளர்கள் கூறினார்கள்.

கோயம்பேடு சந்தைக்கு மாற்று இடத்தை ஏற்பாடு செய்திருந்தாலோ அல்லது அதனை முறையான கண்காணிப்புடன் நடத்தி இருந்தாலோ கரோனா பரவாமல் தடுத்திருக்கலாம். அரசாங்கத்துக்கு முன்யோசனை இல்லாததே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தார்கள்.

வேலைகளின் பொருட்டு வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் தங்கி இருக்கும் மக்களைத் தாயகம் அழைத்து வருவதற்கான எந்த முயற்சியையும் தமிழக அரசு எடுக்கவில்லை என்றும், அவர்களது குடும்பத்தினர் தினமும் நம்மிடம் இது தொடர்பான கோரிக்கைகளை வைக்கிறார்கள் என்றும் மாவட்டச் செயலாளர்கள் சொன்னார்கள்.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது, நோய்த்தொற்றை அதிகரித்துப் பரவலாக்கிடக் காரணமாகிவிடக்கூடும் என்றும் அச்சம் தெரிவித்தார்கள்.

மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் திட்டமிட்ட முயற்சி எதுவும் எடுக்காத தமிழக அரசு, டாஸ்மாக் கடைத் திறப்புக்கு மட்டும் திருவிழா ஏற்பாடுகளைப் போல எண்ணி, துரிதமாகச் செயல்படுவதைப் போன்ற பொறுப்பற்ற தன்மை வேறு இருக்க முடியாது!

தமிழக அரசின் அக்கறையற்ற அலட்சியமான செயல்பாடுகள் குறித்து இப்பிரச்சினை தொடங்கிய காலம் முதல் திமுக சார்பில் சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், அறிக்கைகள் வெளியிட்டும், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியும், இவை அனைத்துக்கும் மேலாகப் போராட்டம் நடத்தியும் ஒவ்வொரு நாளையும் மக்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தியது திமுக.

இயன்றதைச் செய்தோம் இல்லாதவர்க்கு. அரசாங்கம் செய்ய வேண்டியதை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம்.

இந்த மகத்தான பணி, இனிவரும் நாட்களிலும் தொய்வின்றித் தொடரும்!

இப்பணியைக் களத்தில் நின்று செவ்வனே ஆற்றிய மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கும், அவர்களுக்குத் தோளோடு தோள் கொடுத்து துணை நின்ற நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு மக்கள் சேவையை கரோனா காலத்தில் எந்த அரசியல் கட்சியும் இந்த அளவுக்குச் செய்ததாகத் தகவல் இல்லை என்பதைப் பெருமையோடு பதிவு செய்திட விரும்புகிறேன். ஒரு அரசாங்கமும், பல ஆயிரம் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து செய்ய வேண்டிய அளவிலான பெரிய செயலை, திமுக என்ற அரசியல் அமைப்பு, செய்து காட்டியுள்ளது!

இது சாதாரணமான நேரம் அல்ல; கரோனா நோய்த்தொற்று காலம். இச்சேவையில் ஈடுபடும் நிர்வாகிகளும் இதற்கு ஆளாகக் கூடும். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல், திமுக நிர்வாகிகள் மக்கள் பணியாற்றினார்கள். இவர்கள் அனைவருடைய அரிய தொண்டுள்ளத்துக்கும் நான் தலைவணங்குகிறேன்!

பேராபத்துக் காலத்தில் திமுக எப்படிச் செயல்படும் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டி இருக்கிறோம். திமுக நிர்வாகிகள் எத்தகைய தொண்டுள்ளத்துடன் செயல்படும் வீரர்கள் என்பதைத் தலைமைக்கும் காட்டி இருக்கிறார்கள்.

அண்ணா ஆசைப்படும் அரும்பணியாளர்களாக, தலைவர் கருணாநிதி விரும்பும் களப்பணியாளர்களாக திமுகவினர் அனைவரும் செம்மாந்து நிற்பதைப் பார்த்து, இந்த இயக்கத்தை வழிநடத்திச் செல்லும் தலைமைத் தொண்டன் என்கிற வகையில் மகிழ்கிறேன்.

இன்னும் நம் முன் ஏராளமான பணிகள் எதிர்பார்த்து அணிவகுத்து நிற்கின்றன. அப்பணிகள் குறித்த திட்டமிடுதல்களுடன் இன்றைய மாவட்டச் செயலாளர் கூட்டத்தை நிறைவு செய்துள்ளோம். முன்னெப்போதும் போலவே, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போற்றி, கரோனா காலக் களப்பணிகளும் தொய்வின்றித் தொடரும்! நம் கடன் நாள்தோறும் மக்கள் பணியே".

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்