'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் ஒரு கார்ப்பரேட் கம்பெனி அரசியல் செயல் திட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னின்று நடத்திக்கொண்டிருக்கிறார் என, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, அமைச்சர் பாண்டியராஜன் இன்று (மே 16) வெளியிட்ட அறிக்கை:
"மக்கள் மீது அக்கறை உள்ளது போல் நாடகமாடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கரோனா நோய் தொற்றின் வழியாகவாவது ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து விட மாட்டோமா என்று ஒவ்வொரு நாளும் எடுக்கும் முயற்சிகளை பார்த்து ஊர் சிரிக்கிறது.
உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைக்கிறது கரோனா என்னும் கொடிய நோய். வல்லரசு நாடுகள் முதல் சின்னஞ்சிறிய நாடுகள் வரை இதற்கு விதிவிலக்கல்ல. இந்த நோயின் கோரப்பிடியில் எல்லோரும் எப்படி அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி எட்டு திசையிலும் இருந்து வரும் செய்திகளை ஒவ்வொரு மணிநேரமும் தொலைக்காட்சிகளில், மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அந்தக் காட்சிகளையும், நோயுற்றோர் எண்ணிக்கைகளையும் தமிழ்நாட்டின் நிலவரத்தோடு ஒப்பிடும்போது, தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளால் கரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதைக் கண்டும், இறந்தோர் எண்ணிக்கை மிகக்குறைவாக, கட்டுக்குள் இருப்பதைக் கண்டும் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறார் மு.க. ஸ்டாலின்.
மருத்துவ வசதிகளை மாநிலம் முழுவதும் செய்து தருவதிலும், மக்களின் தேவைகளை இயன்ற வகைகளில் எல்லாம் பூர்த்தி செய்வதிலும் அதிமுக அரசு திறம்பட செய்து வருவதால் கரோனா வழியாக ஆட்சிக்கட்டிலை நெருங்கும் ஆசை தகர்ந்து போனதால் பொருளற்ற, பொருத்தமற்ற, பொய் அறிக்கைகளை நாள்தோறும் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
மாத்திரை, மருந்துகள், மருத்துவ வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்கின்றன. பசியென்று வந்தோருக்கு மூன்று வேளையும் விலையின்றி உணவு வழங்குகின்றன அம்மா உணவகங்கள். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நிவாரணத் தொகைகளும், ரேஷன் பொருட்களும் எந்த தட்டுப்பாடும் இன்றி தேவையான உணவுப் பொருட்கள் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் இலவசமாக கிடைத்து வருகிறது.
தன்னலம் கருதாது மருத்துவப் பணியாளர்களும், அரசின் இன்ன பிற துறைகளும், முதல்வரின் ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் பெற்று போற்றுதற்குரிய பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
மக்களின் தேவைகளை அறிந்து, காலத்தாற் செய்து முடிக்க, கண்துஞ்சாது பணியாற்றுகிறது அதிமுக அரசு. இவற்றையெல்லாம் மக்கள் அனைவரும் பார்த்து, அரசுக்கு ஒத்துழைப்பும், பாராட்டும் வழங்கிவரும் நேரத்தில், மு.க.ஸ்டாலின் நடத்தும் நாடகங்களை ஊரே, உலகமே எள்ளி நகையாடுகிறது.
'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் ஒரு கார்ப்பரேட் கம்பெனி அரசியல் செயல் திட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னின்று நடத்திக்கொண்டிருக்கிறார்.
கரோனா வைரஸ் தொற்று பேரிடர் காலத்தில் மக்களின் குறைகளை போக்குவதாக, அவர்களிடம் வாங்கிய மனுக்கள் என்ற பெயரில், அவற்றை அரசிடம் கொண்டு வந்து கொடுத்திருப்பது, பேரிடர் காலத்திலும், அவர் மேற்கொண்டிருக்கும் தேர்தல் பிரச்சார வேலைதானே தவிர, வேறொன்றும் இல்லை.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திலிருந்து மக்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெற்று, அவற்றுக்கு உடனடி தீர்வு கண்டு வரும், அரசு தான், அதிமுக அரசு. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் குறைகளை களைய 'முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்', தமிழ்நாடு முதலமைச்சரால் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் 18.7.2019 அன்று அறிவிக்கப்பட்டு, 19.8.2019 அன்று சேலம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் இதுவரை 9 லட்சத்து 77 ஆயிரத்து 637 மனுக்கள் பெறப்பட்டு, பெரும்பாலான மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. மக்களின் அனைத்து வகையான தேவைகளையும் தீர்த்து வைத்து, பேரன்பைப் பெற்றிருக்கும் இந்த அரசின் செயல்களை மு.க.ஸ்டாலின் காப்பியடிக்கத் தொடங்கியிருக்கிறார். இப்படிப்பட்ட வேலை அவருக்குத் தேவையா? அவரது நாடகம் மக்களிடம் எடுபடாது.
கரோனா போன்ற பெருந்தொற்று உள்ள நேரத்திலும் மக்களை பாதுகாக்கும் ஒரே நோக்கத்தோடு, கட்டுக்கோப்புடன் நடைபெறும் ஆட்சியாக தமிழக அரசு திகழ்கிறது".
இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago