கபசுரக் குடிநீர் மற்றும் மூலிகை கசாயம் ஆகியவற்றைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோடம்பாக்கம் மண்டலத்தில் இன்று (மே 16) கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இருவரும் பொதுமக்களுக்கு மூலிகை கசாயத்தினை வழங்கினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு ஆட்டோக்கள் மூலம் கபசுரக் குடிநீர் மற்றும் மூலிகை கசாயம் வழங்கும் பணியினையும் தொடங்கிவைத்தனர்.
பின்னர், ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
"முதல்வரின் ஆலோசனையின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பகுதிவாரியாக திட்டமிடப்பட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பகுதிவாரி திட்டமிடலின் காரணமாக வைரஸ் தொற்று பாதித்த பகுதிகளில் நல்ல பலன் கிடைத்துள்ளது. ஏற்கெனவே சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள கண்ணகி நகர், எழில் நகர் மற்றும் சுனாமி நகர், ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட வைரஸ் தொற்று பாதித்த பகுதிகளில் பகுதிவாரி திட்டமிடல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாநகராட்சி ஆணையாளருடன் இணைந்து நேற்றைய தினம் ஆய்வு செய்யப்பட்டது.
இந்தப் பகுதிவாரி திட்டமிடலில் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு முகக்கவசம் அணிதல், இடைவெளியுடன் இருத்தல் மற்றும் அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுதல் போன்ற எளிய நடைமுறைகளின் மூலம் இந்த வைரஸ் தொற்றைத் தடுக்க முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மேலும், பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்திய மருத்துவத் துறையினருடன் இணைந்து கபசுரக் குடிநீர், மூலிகை கசாயம் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டுள்ள சுமார் 34 ஆயிரம் பணியாளர்களுக்கு ஏற்கெனவே கபசுரக் குடிநீர் தொடர்ந்து 10 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, வைரஸ் தொற்று அதிகம் பாதித்துள்ள கோடம்பாக்கம் மண்டலத்தில் பகுதிவாரி திட்டமிடல் பணி தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இம்மண்டலத்தில் உள்ள வார்டு-127 இல் மட்டும் 152 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இந்தப் பகுதியில் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தவும், 100 சதவீதம் தொற்றில்லாத பகுதியாக மாற்றவும், பகுதிவாரி திட்டமிடலில் இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு, கபசுரக் குடிநீர் மற்றும் மூலிகை கசாயங்கள் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.
கபசுரக் குடிநீர் மற்றும் மூலிகை கசாயம் தொடர்ந்து 10 நாட்களுக்கு அனைவருக்கும் வழங்கப்படும்.
இந்த மூலிகை கசாயத்தில் சித்த மருத்துவத் துறை வல்லுநர்களின் அறிவுரைப்படி, சுக்கு 100 கிராம், மிளகு 5 கிராம், திப்பிலி 5 கிராம், சிற்றரத்தை 30 கிராம், அதிமதுரம் 100 கிராம், ஓமம் 5 கிராம், கிராம்பு 5 கிராம், கடுக்காய் தோல் 50 கிராம், மஞ்சள் 10 கிராம் சேர்த்து அரைத்து, அதில் 10 கிராம் அளவு பொடியை 400 மி.லி. தண்ணீரில் கொதிக்க வைத்து 100 மி.லி. அளவுக்கு கொதித்த பின்னர் வெதுவெதுப்பான நிலையில் பருக வேண்டும்.
இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வைரஸ் தொற்றின் வீரியம் பெருமளவு குறைக்கப்படும் என சித்த மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது.
கோடம்பாக்கம் மண்டலத்தில் இந்திய மருத்துவத் துறையின் சார்பில் 15 மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிகளின் முக்கிய நோக்கம் அடுத்த 10 நாட்களில் புதியதாக யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படாத நிலையைக் கொண்டு வந்து முற்றிலும் கரோனா வைரஸ் தொற்று இல்லாத மண்டலமாக மாற்றுவதேயாகும்.
கபசுரக் குடிநீர் மற்றும் மூலிகை கசாயம் ஆகியவற்றைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்யும் நபர்கள் மீது இந்திய மருத்துவத் துறையின் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அரசின் இந்த முயற்சிகளுக்கு பொதுமக்கள் தங்களின் முழு பங்களிப்பை அளிக்க வேண்டும்"
இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
22 hours ago