வெளிமாநிலத் தொழிலாளர்களின் நிலை: கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை; மத்திய, மாநில அரசுகளுக்கு சரமாரி கேள்விகள் எழுப்பிய உயர் நீதிமன்றம்

By ஆர்.பாலசரவணக்குமார்

கரோனா ஊரடங்கால் பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக, மகாராஷ்டிர மாநிலம், சங்லி மாவட்டத்தில் உள்ள குப்வாட் கிராமத்தில் சிக்கியுள்ள கணேசன் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை இன்று (மே 16) விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, வெளிமாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனவா என்பதை அறிந்துகொள்ள இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தையும், தமிழக தலைமைச் செயலாளரையும் எதிர்மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டது.

வெளிமாநிலத் தொழிலாளர்களின் நிலையை ஊடகங்களில் பார்க்கும் எவராலும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், ஊரடங்கு அறிவித்த நாள் முதல் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே சிக்கித் தவித்து வருவதாகக் கூறியுள்ளனர்.

வேலைவாய்ப்பை இழந்து, உணவு, உறைவிடம் இல்லாததால் குழந்தைகளுடன் நடைபயணமாக சொந்த ஊர்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளதாகவும், வழியில் பட்டினியாலும், விபத்துகளிலும் உயிரிழந்து வருவதாகவும் வேதனை தெரிவித்த நீதிபதிகள், அவர்களை அரசு அதிகாரிகள் புறக்கணித்து விட்டதாகவும் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், "ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்? மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் அவர்களுக்கு என்ன உதவிகள் வழங்கியுள்ளன? புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மாநில எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படுகிறார்களா?

எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படாவிட்டால் அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றனவா? சொந்த ஊர் திரும்பும் வழியில் எத்தனை தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்? அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன?

நாடு முழுவதும் எத்தனை தொழிலாளர்கள் பேருந்து மற்றும் ரயில் மூலம் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியுள்ளனர்? மீதமுள்ள தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதும் கரோனா பரவலுக்கு ஒரு காரணமா? வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு நிதியுதவியும், வேலைவாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனவா?" எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது சம்பந்தமாக மே 22-ம் தேதி விரிவான பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்திற்குத் தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்