கரோனா பரிசோதனை முடிவு 24 மணி நேரத்துக்குள் கிடைக்கும்- செங்கல்பட்டில் சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் 58 இடங்களில் மருத்துவபரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன, இதன்மூலம் கரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்துக்குள் தெரிந்துகொள்ள முடியும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றுசெங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் பகுதியில் இயங்கிவரும் சித்த மருந்து தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். இங்கு கபசுர குடிநீருக்கு தேவையான மூலப்பொருட்கள் தயாரிப்பு குறித்து ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் சிறந்த மருத்துவ சேவையை அளித்து வருகின்றனர்; அவர்களுக்கு எனது பாராட்டுகள். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. முதல்வரின் கடுமையான முயற்சியால் தமிழகத்தில் 58 இடங்களில் மருத்துவபரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் கரோனா பரிசோதைனை முடிவுகளை 24 மணிநேரத்தில் தெரிந்து கொள்ள முடியும்.

தேசிய அளவில் கரோனா உயிரிழப்புகுறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. பாதிக்கப்பட்டோரை முறையாக அடையாளப்படுத்தி, கண்காணித்ததால் இது சாத்தியமானது. டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் 4 பேர் கூடகரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

தற்போது, நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக் குடிநீர் பாக்கெட்டுகள்பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சியில் மட்டும் 4.5 லட்சம் கபசுர குடிநீர் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்றார்.

இந்த ஆய்வுகளின்போது செங்கல்பட்டு ஆட்சியர் ஜான்லூயிஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்திமலர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக மண்டல கண்காணிப்பு அலுவலர்களான தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன், காவல்துறை தலைவர் (சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு) டி.எஸ்.அன்பு ஆகியோர் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. காவல்துறை துணை தலைவர் (கடலோர பாதுகாப்பு) பவானீஸ்வரி, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், கரோனா தடுப்பு பணிகளை இன்னும் தீவிரமாக மேற்கொள்ள அதிகாரிகளை அறிவுறுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE