கரோனா பரவும் அபாயம் உள்ளதால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என கோரி தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், அதை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் ஜூன் 1 முதல் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என கோரி சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதி்கரித்து வருகிறது. 200 குழந்தைகளுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்தும் இன்னும் சீராகவில்லை. கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மாணவர்களால் தேர்வுக்கு தயாராக முடியாது. கரோனா மன அழுத்தத்தால் அவர்களால் நிம்மதியாக தேர்வு எழுத முடியாது. அத்துடன் கரோனா தொற்று மாணவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. சிபிஎஸ்இ தேர்வுகள் ஜூலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் கரோனா தொற்று இல்லை எனும் சூழல் வரும் வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும், என அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரரான வழக்கறிஞர் ஸ்டாலின்ராஜா ஆஜராகி, கரோனா பீதி காரணமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் பயப்படுகின்றனர். பள்ளி மாணவர்களும் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுவர் எனக்கூற முடியாது. எனவே தமிழகத்திலும் 10-ம் வகுப்பு தேர்வுகளை ஜூலைக்கு தள்ளி வைக்க வேண்டும், என வாதிட்டார்.
» மே 15-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்
» நாளை தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறப்பு; சென்னை, திருவள்ளூரில் கிடையாது: அரசு அறிவிப்பு
அதற்கு மறுப்பு தெரிவித்து அரசு ப்ளீடர் வி.ஜெயப்பிரகாஷ் நாராயணன், சிறப்பு அரசு வழக்கறிஞர் சி.முனுசாமி ஆஜராகி, கரோனா ஊரடங்கால் தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இன்னும் பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் அந்த மாணவர்கள் மனஉளைச்சலில் உள்ளனர். தற்போது ஜூன் 1-ம் தேதி தொடங்கவுள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசும், கல்வித்துறையும் முன்னெச்சரிக்கையுடன் சிறப்பாக செய்துள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் பேருந்து வசதியும் செய்து தரப்படவுள்ளது. என தெரிவித்தனர்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘ ஏற்கெனவே கல்வியாண்டு தள்ளிப்போய் விட்டது. தற்போது 10-ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என கோரி மாணவர்கள் அல்லது பெற்றோர் தரப்பிலோ, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் தரப்பிலோ நீதிமன்றத்தை நாடவில்லை. அரசின் இந்த அறிவிப்பால் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வழக்கறிஞர் இதை பொதுநல வழக்காக தாக்கல் செய்துள்ளார்.
இவ்வாறு வழக்கு தொடர அவருக்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. பொதுவாக பொதுநல வழக்குகள் எந்த நோக்கத்தின் அடிப்படையில் தொடரப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு வழிகாட்டுதல் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது, என்றனர். அதையடுத்து மனுதாரர் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். அதையேற்ற நீதிபதிகள் வழக்கை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago