பத்தாம் வகுப்புத் தேர்வை ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடத்த முயல்வது மாணவர்களை ஆபத்தை நோக்கி அழைத்துச் செல்லும் வழியாகும் என, முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தங்கம் தென்னரசு இன்று (மே 15) வெளியிட்ட அறிக்கை:
"இந்தியா கரோனா நோய்த் தொற்றின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் அவலக் குரல் எங்கும் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் செயலற்ற தன்மையாலும், தவறான முடிவுகளாலும் இந்த நோய்த்தொற்று தமிழகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி இன்று தமிழகம் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்திற்கு முன்னேறி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கின்றது.
அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடங்கி இன்று தமிழகம் முழுமையும் சமூகப் பரவலாகவே மாறியுள்ள இந்த கொடிய நோய்த் தொற்றைத் தடுத்திட உரிய வழிவகைகளை உடனே காணாமல் தன் பொறுப்பை எளிதாகத் துறந்து பழியை மக்களின் மீது போட்டுத் தப்பித்துக் கொள்ள முதல்வரே முயலும்போது, அவருக்குக் கீழே இருக்கின்ற அமைச்சர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?.
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தொடப்போகும் நிலையில் வரும் நாட்களில் அந்த எண்ணிக்கை எல்லா மாவட்டங்களிலும் 'கிடுகிடு' உயர்வைச் சந்திக்கக்கூடும் என்ற அச்ச உணர்வு அனைவரின் மனதிலும் ஆழப் பதிந்துள்ள நிலையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு செய்துள்ளார்.
'கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் திண்ணையில் இருப்பதை தூக்கி மனையில் வை' என்பதைப் போல கரோனா நோய்த் தொற்று சிறிதும் தணியாத சூழலில் குறிப்பாக, வரக்கூடிய ஓரிரு மாதங்களில் நோய்த் தொற்றின் விகிதம் பெருமளவு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பள்ளிகளை இப்போது அவசரமாகத் திறந்து மாணவர்களையும், ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் சார்புடைய பணியாளர்களையும் தெரிந்தே அபாயத்திற்கு உள்ளாக்கும் வகையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
அப்படி அமைக்கப்படும் குழுவில் கூட, ஒவ்வொரு நாளும் பள்ளிகளில் கண்ணுக்குத் தெரியாத நோய்க் கிருமியை எதிர்நோக்க வேண்டிய மாணவர்களின் சார்பாக அவர் தம் பெற்றோர்களையோ, ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளையோ, நாடறிந்த நல்ல கல்வியாளர்களையோ, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களையோ இடம் பெறச் செய்யாது பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரிகளையும், உயர்கல்விக் கூட தொழில்நுட்ப நிபுணர்களையும் மட்டுமே இடம்பெறச் செய்திருப்பது எந்த வகையில் நியாயம் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
உண்மையையும் உள்ள நிலைமைகளையும் உரத்துச் சொல்வதற்கான உரிய வழிகளை அடைத்துவிட்டு, அமைச்சரின் எண்ணத்திற்கு வெறுமனே தலையசைக்கும் அதிகாரிகளை மட்டும் கொண்ட குழுவினை அவசரமாக அமைத்துள்ளது ஏன்?
ஊரடங்கு நான்காம் கட்டமாக நீடிக்கப்படக் கூடும் என்று நம்பத்தகுந்த வகையில் செய்திகள் வந்து கொண்டிருக்கும் போது அவசரமாகப் பள்ளிகளைத் திறக்கும் அமைச்சரின் முயற்சிகளுக்குப் பின்னால் இருக்கும் நிர்பந்தம் என்ன?
அண்மையில் முதல்வரைச் சந்தித்துள்ள மருத்துவர் குழு பள்ளிகளைத் திறப்பது குறித்து ஏதேனும் இது குறித்த ஆலோசனைகளை அரசுக்கு வழங்கி இருக்கின்றதா?
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் ஆதர்ஷ புருஷர்களாக விளங்கும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில் கீழ் இயங்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியமே பத்தாம் வகுப்புத் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்த உத்தேசித்திருக்கும் போது, தமிழ்நாட்டில் மட்டுமே அவசரம் அவசரமாகத் தேர்வுகளை ஜூன் முதல் நாளே தொடங்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது?
ஜூன் மாதம் மூன்றாம் வாரத்தில் நிபுணர்களுடன் ஆலோசித்து பின்னர் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்படும் என்று சொன்ன பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், திடீரென தன் முடிவை மாற்றி ஜூன் முதல் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்க வேண்டிய அழுத்தம் எங்கே இருந்து வந்தது?
பொதுப் போக்குவரத்துத் தொடங்கப்படுவதற்கான எந்த அறிவிப்பும் முன்னேற்பாடுகளும் இல்லாதபோது பல லட்சக்கணக்கான மாணவர்களைத் தேர்வு மையங்களுக்கு இன்றைய ஊரடங்கு சூழலில் எவ்வாறு அழைத்து வர முடியும்?
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் கடந்த இரு மாதங்களாக மாணவர்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் ஆங்காங்கே இருந்து குறிப்பாக மலைக் கிராமங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு அவர்கள் எப்படி வந்து தங்கி தேர்வு எழுத முடியும்?
விடுதிகள் திறக்கப்பட்டு தங்குமிடமும், உணவு வழங்கலும் உறுதிப்படுத்தப்படுவதற்கான ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
கரோனா அச்சத்தில் உறைந்து கிடக்கும் மாணவர்கள் உளவியல் ரீதியாகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மனநிலையில் இப்போது உள்ளார்களா?.
மேற்கண்ட கேள்விகளுக்கு மட்டுமல்ல, எந்தக் கேள்விக்கும் உருப்படியான பதில் பள்ளிக் கல்வித்துறையிடம் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை!
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, திமுக தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கரோனா ஓரளவு கட்டுக்குள் வந்து, மருத்துவ ரீதியான இயல்பு வாழ்க்கை திரும்பியதாக உறுதிப்படுத்திய பின்னரே தேர்வு நடத்துவது சரியானது முறையானது என அறிக்கை வாயிலாகத் தெரிவித்து இருந்தார். அவரது கோரிக்கையை அரசு ஏற்பதே அறிவுடைய செயலாக இருக்கும்.
ஆனால், இப்போது எரிகின்ற தீயில் எண்ணெய் வார்ப்பது போன்று, நிலைமையின் தீவிரத்தை உணராது பத்தாம் வகுப்புத் தேர்வை ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடத்த முயல்வதும் பள்ளிகளை அவசர அவசரமாகத் திறக்க முயற்சிப்பதும் தமிழ்நாட்டு மாணவர்களை ஆபத்தை நோக்கி அழைத்துச் செல்லும் வழிகளாகும்.
'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்' என்ற குறளின் பொருளை உணர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் பள்ளிக் கல்வித்துறைக்கு தனது அறிக்கை வாயிலாக வழங்கியுள்ள ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலனையும் ஏனையோரின் நலனையும் காக்க பள்ளிக் கல்வித்துறை உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், கரோனா தொற்றிலிருந்து தமிழகம் விடுபட்டு நல்ல சூழல் உருவாகும்போது தேர்வுகளை நடத்துவது குறித்தும் பள்ளிகளைத் திறப்பது குறித்தும் ஆலோசிக்கலாம் எனவும் கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago