தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை விதித்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

By ஆர்.பாலசரவணக்குமார்

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுக்கடைகள் மே 7-ம் தேதி திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து, ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என, வழக்கறிஞர்கள் ராம்குமார் ஆதித்தன், ராஜேஷ், பாமக வழக்கறிஞர் கே.பாலு, மகளிர் ஆயம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினர் உட்படப் பலரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை கடந்த மே 6-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, மது வாங்க வருவோருக்கு ஆதார் கட்டாயம் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் மதுபானக் கடைகளைத் திறக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த மே 7-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்த நிலையில், பெரும்பாலான மதுக்கடைகளில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படாமல் நீண்ட கூட்டத்தில் மதுப்பிரியர்கள் நின்று மது பாட்டில்களை வாங்கிச்சென்றனர்.

இதனால், மனுதாரர்கள் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். தவிர, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பிலும் மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை மே 8-ம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மதுக்கடைகளை மூடவும், ஆன்லைன் மூலம் மதுவகைகளை விற்பனை செய்யவும் உத்தரவிட்டது.

நிபந்தனைகளுடன் மது வகைகளை விற்க வேண்டும் என்ற மே 6-ம் தேதி உத்தரவையும், மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்ற மே 8-ம் தேதி உத்தரவையும் எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இதனிடையே மதுக்கடைகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்துத் தொடரப்பட்ட வழக்கை கடந்த 11-ம் தேதி விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, மே 8-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இதற்கும் பொருந்தும் என உத்தரவிட்டது. எனவே, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவையும் எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இதனிடையே, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையில் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக உட்பட 18 பேர் சார்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று (மே 15) தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுக்கள் எல்.நாகேஸ்வர ராவ், எஸ்.கே.கவுல், பி.ஆர்.கவாய் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, வைத்தியநாதன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். எதிர்மனுதாரர்கள் தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நிபந்தனைகளுக்குட்பட்டு மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கும், மதுக்கடைகளை மூட வேண்டும் என மே 8-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், எதிர்மனுதாரர்கள் பதில் மனுத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்