தமிழகத்தில் இருந்து வேலைக் காகச் சென்று மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதி களில் மாட்டிக்கொண்ட 1328 தொழிலாளர்கள் பெயர் பதிவு செய்து ரயிலுக்காக 7 நாட்களாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் ஒப்புதல் கிடைக்காத நிலையில், ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் வேதனைப் படுவதை ஊடகங்கள் வாயிலாகப் பார்த்துப் பரிதாபப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதே சூழலில் நம்முடைய தமிழ்நாட்டுத் தொழிலாளர்களும் இருக் கிறார்கள் என்பது கவலைக்குரிய செய்தி. மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நெட்ஒர்க்கிங், கட்டுமான ஒப்பந்தம் உள்ளிட்ட பணிகளுக்காகச் சென்றிருந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஊரடங்கு காரணமாக ஆங்காங்கே சிக்கிக் கொண்டார்கள்.
ஒவ்வொருவரும் தனித்தனி குழு என்பதால் இவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்தது. லெமூரியா அறக்கட்டளை,மும்பை விழித்தெழு இயக்கம் மற்றும் சில தமிழ் தன்னார்வலர்கள் அவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உணவு வழங்கியது. கூடவே, மொத்தம் எவ்வளவு பேர் இவ்வாறு மாட்டியிருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பும் செய்தது. இந்தச் சூழலில் தமிழ்நாடு அரசின் அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், வெளி மாநிலங்களில் மாட்டிக்கொண்ட தமிழர்கள் ஆகியோர் தங்களது முழு விவரங்களைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்தது. இதனை நல்வாய்ப்பாகக் கருதி, அந்த அமைப்புகள் உதிரியாக இருந்த தமிழர்களை எல்லாம் அதில் பதிவு செய்தார்கள். மகாராஷ்டிர அரசும் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியது. ஆனால், பதிவு செய்து 7 நாட்களாகியும் அவர்களை அழைத்துக்கொள்வது பற்றி தமிழ்நாடு அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இதுகுறித்து லெமூரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன் 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியபோது, "காத்திருக்கிற தமிழர்கள் வேறு, தாராவி தமிழர்கள் வேறு. அவர்களில் ஒருவர்கூட மராட்டியத்தில் நிரந்தரமாக வசிப்பவர்கள் அல்ல. எதிர்பாராத ஊரடங்கால் மாட்டிக்கொண்டவர்கள். இருமாநில அரசுகளும் ஒப்புக்கொண்டால் தொழிலாளர்களை ரயில் மூலம் அனுப்பி வைக்கலாம் என்று 29.4.20 அன்றே மத்திய அரசு அறிவித்துவிட்டது. உடனடியாக நாங்கள் அத்தனை தமிழர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களில் அருகருகே உள்ள காவல்நிலையங்களில் பதிவு செய்தோம். பிறகு தமிழ்நாடு அரசு இணையதளம் தொடங்கியதும் அதிலும் பதிவு செய்தோம்.
ஊருக்குச் செல்ல தயாராக இருக்கும் 1,328 தொழிலாளர்கள் குறித்த முழு விவரத்தையும் ரயில்வேயிடம் அளித்து ஒப்புதலும் பெற்றுவிட்டோம். ஆனால், தமிழ்நாடு அரசிடம் இருந்து முழு முகவரி இல்லை, செல்போன் நம்பர் இல்லை, அவர்கள் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்துக்கு வருகிறார்கள் என்ற விவரம் இல்லை என்று நிறைய திருத்தம் சொன்னார்கள். அனைத்தையும் இங்குள்ள தமிழ் ஐஏஎஸ் அதிகாரிகளான அன்பழகன், சொக்கலிங்கம் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் செய்து முடித்தோம். ஆனாலும், அரசு ஒப்புதல் தராமல் இருக்கிறது. மும்பையிலும், தாராவிலும் அதிகமாக கரோனா தொற்று இருப்பதால் அரசு தயங்குகிறது என்பதைப் புரிந்துகொண்டு, இவர்களுக்கும் மும்பைக்கும் சம்பந்தம் இல்லை, இவர்கள் புனே உள்ளிட்ட மராட்டியத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இருப்பவர்கள் என்ற விவரத்தையும் மகாராஷ்டிர அரசின் சான்றுடன் தமிழக அரசுக்கு அனுப்பிவிட்டோம்.
ஆனாலும் பதில் இல்லை. மொத்தமாக 1,328 பேர் ஒரே இடத்தில் போய் இறங்கினால் அவர்களைப் பரிசோதிப்பது, தனிமைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் திருச்சி, மதுரை, திருநெல்வேலி என்று மூன்று ரயில் நிலையங்களில் இறங்க வேண்டியவர்கள் என்று தனித்தனி பட்டியலும் கொடுத்து, அந்த மாவட்ட ஆட்சியர்களிடமும் பேசிவிட்டோம். இதன் பிறகும் தமிழ்நாடு அரசு தாமதம் செய்கிறது. தொடர்ந்து 50 நாட்களாக அரசு வழங்குகிற பச்சரிசி சாதத்தை சாப்பிட்டு பலர் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பலவீனமடைந்துவருகிறார்கள். தவுன் என்ற ஊரில் தமிழ் இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டிருக்கிறார்.
மத்திய அரசின் வழிகாட்டுதல் இருக்கிறது, மகாராஷ்டிர அரசும் முழு ஒத்துழைப்பு தருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு பாராமுகமாக இருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago