திமுக எம்.பி.க்களை அவமதிக்கும் எண்ணம் எள்ளளவும் எனக்கு இல்லை; திரித்துப் பேசுவது மனவேதனை அளிக்கிறது: தலைமைச் செயலாளர் விளக்கம்

By செய்திப்பிரிவு

தலைமைச் செயலாளர் அறையில் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக திமுக எம்.பி.க்கள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி.க்களை தலைமைச் செயலாளர் அவமதித்துவிட்டதாக அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டி நேற்று அறிக்கை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் உள்ளிட்ட திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தலைமைச் செயலாளரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரையோ, திமுக எம்.பி.க்களையோ அவமதிக்கும் எண்ணம் எள்ளளவும் எனக்கு இல்லை என்றும் திரித்துப் பேசுவது மன வேதனை அளிப்பதாகவும் தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று (மே 14) வெளியிட்ட அறிக்கை:

"டி.ஆர்.பாலு எம்.பி., என்னைச் சந்திக்க வேண்டும் என கூறியதாக, கடந்த மே 12 அன்று மாலை எனது செயலாளர் தெரிவித்தார். மறுநாள், மாவட்ட ஆட்சியர்களின் ஆய்வுக்கூட்டம் உள்ளதால் அவர் சந்திக்க விரும்புவதற்கான காரணத்தைத் தெரிவித்து ஒரு கடிதத்தைப் பெற்று வையுங்கள், உரிய நேரத்தை நான் தெரிவிக்கிறேன் என்று கூறினேன்.

அதன்படி நேற்று (மே 13) எதிர்க்கட்சித் தலைவரின் உதவியாளர் ஆதிசேசனிடமிருந்து பெறப்பட்ட கடிதத்தில் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களை வழங்க டி.ஆர். பாலு தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு சந்திக்க வருவதாக கடிதம் பெறப்பட்டது.

எதிர்கட்சித் தலைவர் மீது நான் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளவன். அவரை அவமதிக்கும் எண்ணம் எனக்கு எள்ளளவும் இல்லை என்பதால்தான் கடுமையான கரோனா தடுப்புப் பணிக்கு இடையிலும், மாவட்ட ஆட்சியர் கூட்டம் முடிந்து 2.30 மணிக்கு என் அறைக்கு வந்தவுடன், மாலை 5 மணிக்கு அவர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கினேன்.

மாலை மத்திய நிதி அமைச்சரின் கரோனா பாதிப்புக்கான நிவாரண திட்ட அறிவிப்புகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அதை நானும் நிதித்துறை செயலாளரும் பார்த்து குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தபோது, டி.ஆர்.பாலு எம்.பி.யும் மற்றவர்களும் நுழைவுவாயிலுக்கு வந்துவிட்டனர் என்ற செய்தி கிடைத்தவுடன் நான் நிதித்துறை செயலாளரைத் தொடர்ந்து குறிப்பு எடுக்கக் கூறிவிட்டு, எனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து இவர்களுக்காகக் காத்திருந்தேன்.

இவர்கள் வந்தவுடன் அவர்களை வரவேற்று சோபாவில் அமர வைத்தேன். அதே சமயம் சுமார் 15, 20 நபர்கள் பெரிய பெரிய மனுக்கள் அடங்கிய கட்டுகளை எனது அறைக்குள் கொண்டு வந்தனர். பலர் புகைப்படமும் வீடியோவும் எடுத்தனர்.

கரோனா பாதிப்புக்கு தமிழ்நாடு உள்ளாகி நோய்த்தொற்று தீவிரமாகப் பரவிவரும் உள்ள நிலையில், இத்தனை நபர்கள் திடீரென என் அறைக்கு உள்ளே வந்தது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தாலும், மனு கட்டுகளை அப்படியே வையுங்கள் என்றும் போட்டோ எடுப்பதை தவிர்க்கவும் கூறினேன்.

தேவைப்பட்டால் செய்தியாளர்களுக்கு செய்தியை மட்டும் தெரிவித்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன். எனினும் சிலர் போட்டோவும் வீடியோவும் எடுத்தனர்.

அனைவரும் சோபாவில் அமர்ந்த பின்னர், டி ஆர். பாலு எம்.பி, எதிர்க்கட்சித் தலைவரின், 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தில் ஒரு லட்சம் மனுக்களுக்கு மேலாகப் பெற்றதாகவும் அவர்கள் நடவடிக்கை எடுத்தது போக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய லட்சம் மனுக்களை ஒப்படைப்பதாகவும் தெரிவித்து, உங்களின் பதிலைச் சொல்லுங்கள், எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவிக்கிறேன் என்றார்.

நான் இவற்றின் மீது முறையான நடவடிக்கையை விரைவாக எடுப்பதாகக் கூறினேன் என்று தெரிவியுங்கள் என்றேன். அதற்கு எத்தனை நாட்களுக்குள் மனுக்களை அலுவலர்களுக்கு அனுப்புவீர்கள் எனக் கேட்டார்.

நான் அதற்கு, ஒரு லட்சம் மனுக்கள் உள்ளன, அவற்றை அலுவலர் வாரியாகப் பிரிக்க வேண்டும், தற்போது கரோனா பாதிப்பால் குறைந்தபட்ச அலுவலர்கள்தான் பணி செய்கின்றனர். அதனால் உறுதியாக தேதியைக் கூற இயலாது எனத் தெரிவித்தேன்.

ஆனால், அவர் மீண்டும் மீண்டும் தேதியைக் குறிப்பிடுங்கள் என வலியுறுத்தினார். அதேசமயம் தயாநிதி மாறன் எம்.பியும் 'எத்தனை நாட்களில் அனுப்புவீர்கள் என்பதை தெரிவியுங்கள்' என்றார்..

நான் 'நீங்கள் என் நிலையில் இருந்தால் அவ்வாறு கூற இயலுமா? எனக் கேட்டேன். அவர் 'அவ்வாறு தெரிவிக்க முடியும்' என்றார்.

நான், 'என்னால் இயலாது, ஆனால் விரைவாக நடவடிக்கை எடுக்க உறுதியளிக்கிறேன்' என்றேன்.

அவர், 'நாங்கள் மக்களின் பிரதிநிதிகள் என்பதால் அந்தப் பொறுப்பு எங்களுக்கு உள்ளது' என்றார். நானும் அரசு அலுவலர்தான் என்றும் நாங்களும் கடமை உணர்வோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும் பணியாற்றி வருகிறோம் எனத் தெரிவித்தேன்.

இந்நிலையில், டி.ஆர்.பாலு, 'பணியாளர் குறைவாக உள்ளதால் தேதியை உறுதியாகக் கூற முடியாது என சொல்லவா?' என்றார். 'அப்படி கூறவேண்டாம், மனுக்களைக் கொடுத்தோம், நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார் எனக் கூறுங்கள்' என நான் தெரிவித்தேன்.

உடனே, அவர் 'அலுவலர் இல்லை என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கிறோம்' என்றார். நான் 'இதுதான் உங்களிடம் உள்ள பிரச்சினை. எங்களின் சங்கடங்களைப் புரிந்து கொள்வதில்லை' என ஆங்கிலத்தில் கூறி 'நீங்கள் எதை வேண்டுமானாலும் பத்திரிகையிடம் கூறிக்கொள்ளுங்கள், எனக்கு ஆட்சேபனை இல்லை' எனத் தெரிவித்தேன்.

மற்றபடி அவர்களை அவமதிக்கும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. அவர்கள் கூறுவது போல் என் அறையில் நான் அமரும் சோபாவிலிருந்து தொலைக்காட்சியைப் பார்க்க முடியாது.

எனவே, நான் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது தொலைக்காட்சியைப் பார்த்தேன் என்பதில் எந்த உண்மையும் இல்லை. நான் இருக்கையிலிருந்து எழுந்து வந்தபோதே, தொலைக்காட்சியின் ஒலியைக் குறைத்துவிட்டுதான் வந்தேன்.

நிதிச்செயலாளர் தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்த்து மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகளை குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அதனால் எங்கள் பேச்சுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை.

நான் அவர்களை வரவேற்று அமர வைப்பதில் எந்த அவமதிப்பும் செய்யவில்லை என்பதற்கு அனைவரும் சோபாவில் அமர்ந்துள்ள, தினகரனில் வெளியான படமே சாட்சி. ஆனால், தலைமைச் செயலாளருக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லாதது போல தயாநிதிமாறன், எம்.பி., கருத்து தெரிவித்து டி.ஆர்.பாலுவும் ஒரு அறிக்கையையும் வெளியிட்டு பத்திரிகைகளிலும் வெளியிட்டுள்ளது வருந்தத்தக்கது.

இதில் எதிர்க்கட்சித் தலைவரையோ, என்னை சந்திக்க வந்த தலைவர்களையோ, திமுகவையோ அவமதிக்கும் எண்ணம் எள்ளளவும் எனக்கு இல்லை.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், பல்வேறு பணிகளை ஒருங்கிணைத்து வரும் நிலையில் தொடர்ந்து ஒரு மாத காலமாக ஓய்வின்றி பதற்றத்துடன் நானும் அலுவலர்களும் செயல்படுவது உண்மைதான்.

ஆனால், இந்த நெருக்கடியிலும், இவர்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கையைக் கேட்டேன். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்களைப் பிரித்து அனுப்ப வேண்டிய நிலையில் கால அவகாசத்தைக் குறிப்பிட இயலாது என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தினேன்.

இந்தச் சந்திப்பு முடிந்தபின், உடனடியாக இந்த மனுக்களை முதல்வரின் தனிப்பிரிவுக்கு நேற்றே அனுப்பி, மனுக்களை அலுவலர் வாரியாகவும், துறை வாரியாகவும் பிரித்து ஸ்கேன் செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு நடவடிக்கை எடுக்க அனுப்ப உத்தரவிட்டுள்ளேன்.

நான் ஒரு சாதாரணமான அரசு ஊழியன். அரசியல்வாதியல்ல. மக்களுக்காகப் பணியாற்றுவதுதான் என் வேலை. எனவே எனக்கு யாரையும் உதாசீனப்படுத்த வேண்டும் என்றோ, அவமதிக்க வேண்டும் என்றோ எந்த காலத்திலும் நினைத்தது இல்லை.

என் பணியை அர்ப்பணிப்போடு செய்கிறேன். மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும் என்பதில் எனக்கு பெரும் பொறுப்பு உள்ளது என்பதை உணர்ந்து செயல்படுவதால்தான் உடனடியாக இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க அயராது நாங்கள் பணியாற்றி வரும் நாங்கள் இப்படிப்பட்ட சோதனையான நேரத்தில் கூட, கொடுத்த மனுக்களை நான் பெற்றுக்கொண்டேன். இத்தகைய சூழ்நிலையில், தற்போது உள்ள நிலையை நன்கு அறிந்தவர்கள், இப்படி பத்திரிகையில் திரித்து பேசுவது, உண்மையில் மனவேதனையை அளிக்கிறது.

யார் உண்மையைப் பேசுகிறார்கள்? யார் திரித்து பேசுகிறார்கள்? என்பதை எதிர்க்கட்சித் தலைவரும் மக்களுமே புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்".

இவ்வாறு தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்