திருமணம் சார்ந்த தொழில்களைச் செய்பவர்களுக்கும், முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கும் சிறப்பு நிதியுதவி வழங்குக; ராமதாஸ்

By செய்திப்பிரிவு

திருமணம் சார்ந்த தொழில்களைச் செய்பவர்களுக்கும், முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கும் சிறப்பு நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மே 14) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு நேற்றுடன் 50 நாட்கள் நிறைவடைந்த விட்டன. ஊரடங்கு ஆணை எப்போது நிறைவுக்கு வரும்? அடித்தட்டு மக்களுக்கு எப்போது வாழ்வாதாரம் கிடைக்கும்? என்பவையெல்லாம் பதில் தெரியாத கேள்விகளாக நீடிக்கும் நிலையில், சில வகை தொழிலாளர்களின் வறுமை முடிவின்றி நீடிப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

கரோனா பரவலைத் தடுப்பதற்காக உலகின் பல நாடுகளைப் போலவே இந்தியாவிலும் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு, அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரின் வாழ்வாதாரங்களையும் பறித்திருக்கிறது.

அமைப்புசாரா தொழிலாளர்களில் தமிழக அரசால் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களில் ஒரு பிரிவினருக்கு தமிழக அரசின் சார்பில் மாதம் ரூ.1,000 வீதம் இரு முறை நிதி உதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், வேறு சிலருக்கு அத்தகைய உதவிகள் கூட கிடைக்கவில்லை. அவர்களில் திருமணம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

திருமண நிகழ்வுகள் இல்லற வாழ்க்கையின் தொடக்க நிகழ்வு மட்டுமல்ல... கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் நிகழ்வும் ஆகும். ஒரு திருமணம் என்றால், அதில், உணவு தயாரிக்கும் சமையல்காரர்களில் தொடங்கி, அவற்றை மக்களுக்குப் பரிமாறும் பணியாளர்கள் வரையிலான குழுவினர், அலங்காரம் செய்யும் பணியாளர்கள், இசை நிகழ்ச்சி நடத்தும் குழுவினர், நாதஸ்வரக் குழுவினர், வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் பணியாளர்கள், ஒலி-ஒளி அமைப்பாளர்கள் வரை பல தரப்பினருக்கும் வேலை கிடைக்கும்; அதன் மூலம் கணிசமான அளவில் வருவாயும் கிடைக்கும்.

இவர்களுக்கு மாதம் 30 நாட்களோ, ஆண்டுக்கு 365 நாட்களோ வேலை கிடைப்பதில்லை. காலச் சூழலைப் பொறுத்து சில மாதங்களில் அதிகபட்சமாக 10 நாட்கள் வரை வேலை கிடைக்கும்; வேறு சில மாதங்களில் 3 நாட்களுக்கு மேல் வேலை கிடைக்காது.

வேலை நாட்களில் கிடைக்கும் வருவாயைக் கொண்ட தான், வேலை இல்லாத நாட்களைச் சமாளிக்க வேண்டும். இவர்களுக்கு உச்சவரம்பில்லாமலும் ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஒரு நாளைக்குக் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு அதிகபட்சமாக 3 நாட்களுக்குச் சமாளிக்க முடியும். ஆனால், கடந்த 50 நாட்களாக பணியின்றித் தவித்து வரும் இவர்கள் கடுமையான வறுமையில் வாடுகின்றனர்; பலரது குடும்பங்களில் உணவுக்குக் கூட வழியில்லை.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக தமிழக அரசின் சார்பில் 17 வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 73 லட்சம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருந்தாலும் முறையாகப் பதிவு செய்யாமை, பதிவைப் புதுப்பிக்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலரது பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டன.

அவர்களில் 15 சங்கங்களைச் சேர்ந்த 14.70 லட்சம் தொழிலாளர்களுக்கு மட்டும்தான் தமிழக அரசின் சார்பில் தலா ரூ.1,000 நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. திருமணம் சார்ந்த பணிகளை செய்யும் எந்தத் தொழிலாளர்களுக்கும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்படவில்லை என்பதால் அவர்களுக்கு அரசிடமிருந்து எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை.

அதேபோல், முடிதிருத்தும் தொழிலாளர்களும் ஊரடங்கால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கென தொழிலாளர் நல வாரியம் இருப்பதால் அவர்களுக்கு இருமுறை தலா ரூ.1,000 வீதம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 50 நாட்களுக்கும் மேலாக வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு இது எந்த வகையிலும் போதுமானது அல்ல.

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீக்கப்பட்டாலும் கூட தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியைப் போன்று இன்னும் சில மாதங்களுக்கு பின்பற்றப்படக்கூடும். அதுவரை திருமணம் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளும் குறைந்த எண்ணிக்கையிலானவர்களுடன் மிகவும் எளிமையாகவே நடத்தப்படும்.

அதேபோல், முடி திருத்தகங்கள் செயல்படுவதற்கு உடனடியாக அனுமதி அளிக்கப்படாது. அதனால், திருமணம் சார்ந்த தொழில்களைச் செய்பவர்களுக்கும், முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கும் உடனடியாக வாழ்வாதாரம் கிடைப்பதற்கு சிறிதும் வாய்ப்பில்லை என்பதே உண்மை.

எனவே, திருமணம் சார்ந்த தொழில்களைச் செய்பவர்களுக்கும், முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கும் அவர்களின் சூழலைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்