ஊரடங்குத் தளர்வை எவ்வாறு செயல்படுத்துவது, நிறுவனங்களை செயல்பட அனுமதிப்பது, தொற்றுப் பரவலை எதிர்கொள்வது, நிபந்தனைகளைச் செயல்படுத்துவது, பருவகால மழையை எதிர்கொள்வது எப்படி என்பன போன்ற அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் இன்று ஆலோசனை நடத்தினார். ஆட்சியர்கள் தங்கள் மாவட்டங்களில் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.
அதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆய்வு மேற்கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
» வந்தே பாரத் மிஷன் திட்டத்தில் தமிழகத்துக்கான விமானச் சேவை வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்
“அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்கள் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இன்னும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசினுடைய கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றீர்கள். அதையெல்லாம் அரசு தீரப் பரிசீலித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இன்றைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சில ஆலோசனைகளை நாங்கள் வழங்கி இருக்கின்றோம். அதையும் பின்பற்றி இந்த கரோனா வைரஸ் தடுப்புப் பணியிலே நீங்கள் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
வேளாண்மைத் தொழிலைப் பொறுத்தவரைக்கும், ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டு, அந்தப் பணிகள் அனைத்தும் சிறப்பான முறையிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களைக் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு எந்தவிதத் தடையும் இல்லாமல் இன்றைக்கு நடவடிக்கை எடுத்ததன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியோடு இருக்கின்றார்கள். தாங்கள் விளைவித்த விளைபொருட்களை உரிய முறையிலே விற்க அரசு ஏற்பாடு செய்திருக்கின்றது. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் துணை நின்று அந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைகின்ற அளவிற்கு அந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அதேபோல, விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகளை சந்தைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு வேளாண் துறை அதிகாரிகளுக்கு இந்த நேரத்திலே பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அரசினுடைய ஆலோசனையின்படி அத்தியாவசியப் பொருட்கள் உரிய நேரத்திலே அனைத்து மாவட்டங்களிலும் தங்கு தடையில்லாமல் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இதனால் எந்த இடத்திலும் மக்களுக்கு உணவுப் பிரச்சனை இல்லை என்ற நிலையையும் நாம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்.
மருத்துவ சிகிச்சை அளிப்பதிலே இந்தியாவிலேயே நாம் முதன்மையாக விளங்கிக் கொண்டிருக்கின்றோம். நான் ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல, நோய் அறிகுறி தென்பட்ட உடனேயே அவர்களாக மருத்துவமனையிலே சேர்ந்து சிகிச்சை பெற்றால் பூரண குணமடைந்து விடுகிறார்கள். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் வந்தவர்கள் மூலமாகத் தான் இந்த நோய்த்தொற்றுப் பரவல் அதிகமாக ஏற்பட்டுள்ளது.
அந்த நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு அரசு எடுத்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தது. இன்றைக்கு படிப்படியாக மருத்துவமனையிலே சேர்க்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றார்கள். இருந்தாலும் இன்றைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பலர் குறிப்பிட்டது என்னவென்றால், தங்கள் மாவட்டத்தில் எந்த வைரஸ் பரவலும் இல்லை. அதேவேளையிலே தங்கள் மாவட்டத்திலிருந்து வாழ்வாதாரப் பிரச்சினை காரணமாக வேறு மாவட்டத்திற்குச் சென்று தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். அப்படிப் பணிபுரிகின்றபோது அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டு அவர்கள் சொந்த மாவட்டத்திற்குத் திரும்புகின்றபோது தொற்று எண்ணிக்கை உயர்ந்திருக்கின்றது என்பதாகும்.
ஆகவே, நம்முடைய தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி இன்னும் பல மாவட்டங்களிலிருந்து பெரும்பாலான தொழிலாளர்கள் தொழில் செய்வதற்காகவும், தொழிலாளர்களாகப் பணிபுரிவதற்காகவும் சென்னைக்கு வருகின்றார்கள். அவர்கள் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தினாலே சொந்த மாவட்டங்களுக்குத் திரும்பிய காரணத்தினாலே, அங்கே அவர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்ட போது, பரிசோதனையிலே பெரும்பாலானவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.
அதனால் நான் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களிலும், மற்ற மாவட்டங்களிலும் இந்தத் தொற்று ஏற்பட்டிருக்கின்ற செய்தியை நாம் அறிந்திருக்கின்றோம். அவர்கள் எல்லாம் குணமடையச் செய்வதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் மூன்று நான்கு நாட்களில் சென்னையிலிருந்து தங்களுடைய சொந்த மாவட்டங்களுக்குச் சென்ற அனைவருக்குமே பரிசோதனை செய்யப்பட்டு அதன்மூலமாக அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடையச் செய்வோம்.
இன்றைக்கு வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதிகமாக தமிழகத்திலே பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த மாநிலத்திற்குச் செல்வதற்காக விருப்பம் தெரிவித்தார்கள். அவர்களை அவர்களுடைய சொந்த மாநிலத்திற்கு அனுப்புவதற்கு முழு ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கின்றன. அவர்கள் செல்கின்ற பயணச் செலவு முழுவதும் அரசே ஏற்றுக் கொள்கிறது, ரயில்வே கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்கிறது.
ஆனாலும். பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்கள், அவர்களுக்கு முழுமையான அனுமதி கிடைக்காத காரணத்தினாலே காலதாமதம் ஏற்படுகிறது. அதோடு அவர்கள் செல்கின்ற ரயில் போக்குவரத்து மிகவும் முக்கியம். அவர்கள் குறிப்பிட்ட ரயில் தான் நமக்கு ஒதுக்கித் தருகின்றார்கள். ஆகவே, ஒரு நாளைக்கு 8, 10 ரயில்களைத்தான் நமக்கு ஒதுக்கிக் கொடுக்கின்றார்கள். ஆகவே, காலதாமதம் ஏற்படுகின்றது. ஆகவே, வெளிமாநிலத் தொழிலாளர்கள் படிப்படியாக அவர்கள் விருப்பப்படி தங்களுடைய சொந்த மாநிலத்திற்குச் செல்வதற்கு அரசு ஏற்பாடு செய்து கொடுக்கும். அதுவரை, அவர்கள் பொறுமை காக்க வேண்டும்.
வெளி மாநிலத்தில் தங்கிப் பணிபுரிகின்ற தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளிகளும் படிப்படியாக தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பொருட்டு, மகாராஷ்டிராவிலிருந்து நாம் அழைத்து வந்திருக்கின்றோம். பிற மாநிலத்திலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்திருக்கின்றோம். அனைவரையும் படிப்படியாக நம்முடைய மாநிலத்திற்கு அழைத்து வருவதற்கு உண்டான நடவடிக்கையையும் மேற்கொள்ளப்படும்.
ஆகவே, அரசைப் பொறுத்தவரைக்கும் மக்களுக்கு என்னென்ன வழியிலே நன்மை செய்ய முடியுமோ அனைத்து வகைகளிலும் நன்மை செய்து கொண்டிருக்கின்றோம். அவர்களுக்கு எந்தெந்த வகையிலே உதவி செய்ய முடியுமோ அனைத்து வகையிலும் உதவி செய்யப்பட்டு வருகிறது. 24.3.2020 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டத்திலிருந்து இதுநாள்வரை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களும், அவருக்கு கீழ் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும் சிறப்பான முறையிலே பணியாற்றிய காரணத்தினாலே, தமிழகத்திலே இந்த வைரஸ் பரவல் இன்றைக்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது.
அதேபோல நம்முடைய தலைமைச் செயலாளர் , நம்முடைய டிஜிபி மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த செயலாளர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அவர்களுக்குத் துணையாக இருந்த அனைத்துத் துறை அலுவலர்களும் அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்ட காரணத்தினாலே இன்றைக்கு நோய்ப் பரவல் தடுக்கப்பட்டிருக்கின்றது. அரசைப் பொறுத்தவரைக்கும், ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்பான முறையிலே பணியாற்றிய காரணத்தினாலே இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன, அதிகமான நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
அதனால் தான், பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கை உயர்ந்திருக்கிறதேயொழிய, மற்ற மாநிலத்தைப் போல் அல்ல. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிய சிசிக்சை அளிக்கப்பட்டு, குணமடையச் செய்ய வேண்டும் என்பதுதான் அரசினுடைய நோக்கம். ஆகவே, இன்றைக்குப் படிப்படியாக நாம் ஊரடங்கைத் தளர்த்திக் கொண்டிருக்கிறோம். இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு உண்டான முயற்சியை அரசு எடுத்து வருகின்றது.
தொழிற்சாலைகள் இன்றைக்கு திறக்கப்படுகின்றன, வேளாண் பணிகள் முழுமையாக நடைபெற்று வருகின்றன, தொழிலாளர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புகள் கிடைக்கின்ற சூழ்நிலைகளை இன்றைக்கு நாங்கள் உருவாக்கி இருக்கின்றோம், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உரிய நேரத்திலே அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. ஆகவே, எவ்வித குறைபாடும் இல்லாமல், அரசு மக்களைக் காத்து வருகின்றது.
அதேபோல, நம்முடைய மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்கள். ஆகவே, என்னுடைய கருத்துகளையெல்லாம் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சிறப்பாகச் செயல்படுத்தியதன் விளைவு, இன்றைக்கு இந்தியாவிலேயே கரோனா நோய் தடுப்பில் தமிழ்நாடு ஒரு சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இன்றைக்கு மக்களுக்கு நாம் சொல்வதெல்லாம் விழிப்புணர்வு, அந்த விழிப்புணர்வை அனைத்து மாவட்ட அட்சித் தலைவர்களும், காவல் துறை அதிகாரிகளும், உள்ளாட்சித்துறையைச் சேர்ந்தவர்களும், வருவாய்த்துறையைச் சேர்ந்த்தவர்களும் ஒருங்கிணைந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இன்றைக்கு ஒவ்வொரு வீதியாக நாம் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
இதன்மூலமாகத் தான் நோய்ப் பரவலை நாம் கட்டுப்படுத்த முடியும். ஆகவே, வெளியில் செல்கின்ற போது கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும். அதேபோல, பொருட்கள் வாங்குகின்ற போது சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அநாவசியமாக வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வெளியிலே சென்று வீடு திரும்புகின்றபோது கை,கால்களை சுத்தமாக சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.
இதைப் பின்பற்றினாலே வைரஸ் பவுதலைத் தடுக்க முடியும். இதைத்தான் மருத்துவ நிபுணர்கள், மருத்துவ வல்லுநர்கள் சொல்கின்றார்கள். இதைக் கடைப்பிடித்தால் போதும், நோய்ப் பரவலைத் தமிழகத்திலே தடுக்கலாம். ஆகவே நம்முடைய மாவட்ட ஆட்சித் தலைவர்களும், நம்முடைய காவல் துறை அதிகாரிகளும் மற்றும் பிற துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் தினந்தோறும் கிருமிநாசினி தொடர்ந்து தெளிக்க வேண்டும்.
அதேபோல, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் இருக்கின்ற பொதுக் கழிப்பறைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஏனென்றால் பலர் பயன்படுத்துகின்றார்கள், அதனால் தொற்று ஏற்பட்டுவிடும். அதேபோல, தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து எவரும் வெளியேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதியில் இருக்கின்ற மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எடுக்க வேண்டும். அரசு அறிவிக்கின்ற நலத்திட்ட உதவிகள் உரிய நேரத்திலே மக்களுக்கு போய் சேர மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பிற மாநிலத்திலிருந்து வருகின்ற சரக்கு வாகனங்களை ஓட்டி வருகின்ற டிரைவர்களை, கிளீனர்களை அந்தந்த மாவட்டத்தில் சரக்குகளை இறக்குகின்றபோது, டிரைவர்களுக்கும் கிளீனர்களுக்கும் நோய்த்தொற்று உள்ளதா எனக் கண்காணிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மூலமாக தொற்று ஏற்பட்டு விடும். பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சொன்னீர்கள், வெளி மாநிலத்திலிருந்து வருகின்ற இந்த தொழிலாளர்கள் மூலமாகவும், அதேபோல லாரி டிரைவர்கள், கிளீனர்கள் மூலமாகவும் நோய் தொற்று அதிகமாக வருகின்றது என்கிறீர்கள். ஆகவே, அவர்களையும் நீங்கள் தனிமைப்படுத்தி வைத்துக் கொண்டால் நோய் தொற்று பரவுவதை தடுக்க முடியும்.
அதேபோல கோடை காலமாக இருக்கின்ற காரணத்தால் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜூன் 1 ஆம் தேதி 10-ம் வகுப்புத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுகின்ற மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி, அந்த மாணவர்கள் எந்தவித தங்கு தடையும் இல்லாமல் தேர்வு எழுதுவதற்குண்டான வசதியை செய்து கொடுக்க வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கின்ற மாவட்டங்களில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும். ஏனென்றால் பருவ மழை தொடங்க உள்ளது. சாரல் மழை துவங்க உள்ளது. அது தொடங்கி விட்டால் அந்தப்பணி தடைபட்டு போய்விடும். ஆகவே மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கின்ற மாவட்டங்களில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும்.
டெல்டா மாவட்டத்தில் இருக்கின்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதேபோல அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் குடிமராமத்து பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும்.
இன்றைக்கு தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாக இருக்கின்றது. சிறு தொழில்கள், தொழிற்சாலைகள் அதிகமாக இருக்கின்ற மாநிலம். ஆகவே, பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகள் இருக்கின்ற தொழிற்சாலைகள் 50 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்கலாம். அதற்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எந்தெந்த தொழில் தொடங்க முடியுமோ அந்தந்த தொழில் தொடங்க நீங்கள் அனுமதி அளிக்கலாம். அதற்கு எந்தத் தடையும் கிடையாது.
ஏனென்றால் சென்னை தவிர்த்து, தடை செய்யப்பட்ட பகுதி தவிர்த்து, மற்ற பகுதியிலே தொழில் தொடங்கலாம். அதோடு அரசு அறிவிக்கின்ற அந்தக் கடைகளை எல்லாம் தொடங்கலாம். ஏற்கெனவே, விதிமீறல்கள் மீறப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்குப் பிறகு அந்தக் கடைகள் திறக்கப்பட்டு விடலாம். விதிமீறல்கள் மீறப்பட்டால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, தெளிவுபடுத்தி, அரசு விதிமுறைகளின்படி அவர்கள் பணிபுரிய அனுமதிக்கலாம்.
இன்றைக்கு அரசு அறிவிக்கின்ற விதிமுறைகளைப் பின்பற்றி தொழில்களைத் தொடங்கலாம் என அறிவுறுத்துங்கள். அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்றித்தான் தொழிற்சாலை இயங்க வேண்டும். மிகமிக முக்கியம். தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அதோடு, அடிக்கடி கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பயன்படுத்துகின்ற கழிப்பறைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அதிகமான தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலைகளாக இருந்தால் அங்கேயே மருத்துவர்களை தற்காலிகமாக நியமித்துக் கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளுக்கு வருகின்ற தொழிலாளர்கள் பரிசோதனை செய்த பிறகுதான் அவர்களை அனுமதிக்க வேண்டும். இதையெல்லாம் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று நீங்கள் அந்தந்த தொழில் நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும்.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து அரசின் ஆலோசனைகளைக் கேட்டு சிறப்பான முறையில் பணியாற்றிய அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், காவல் துறை கண்காணிப்பாளர்களுக்கும், அதோடு, அவர்களுக்கு கீழ் பணிபுரிகின்ற அனைத்து துறையைச் சேர்ந்த அலுவலர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 secs ago
தமிழகம்
4 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago