தமிழகம்

உயிரைப் பணயம் வைத்து கரோனா பணி: தூய்மைப் பணியாளர்களுக்கு பாதபூஜை செய்த முன்னாள் மத்திய அமைச்சர்- நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்ட பணியாளர்கள்

எல்.மோகன்

உயிரை பணயம் வைத்து கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களின் காலை சுத்தம் செய்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பாதபூஜை செய்தார். இதைப்பார்த்து நெகிழ்ச்சியடைந்த பணியாளர்கள் கண்ணீர் விட்டனர்.

கரோனா தடுப்பு பணியில் இரவு, பகல் பாராமல் தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலிர்கள், காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய பணியை பாராட்டி தற்போது நாடெங்கிலும் மக்கள் மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் பரவலாக நடந்து வருகிறது.

சமீபத்தில் நாகர்கோவில் மாநகராட்சியில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு பரிவட்டம் கட்டி பழத்தட்டுடன் மரியாதை செய்தனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையும் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று குமரி மாவட்டம் தக்கலை பகுதியில் பத்மநாபபுரம் நகராட்சியை சேர்ந்த 20 தூய்மை பணியாளர்களின் கால்களை சுத்தம் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மலர்தூவி பாதபூஜை செய்தார்.

தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக தக்கலை, புலியூர்குறிச்சி, தர்மபுரம், குமாரகோயில் ஆகிய இடங்களில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

தூய்மை பணியாளர்களை இருக்கையில் அமரவைத்து அவர்களின் கால்களை தண்ணீரால் சுத்தம் செய்து வெற்றி திலகமிட்டு, மலர்களால் பாதபூஜை செய்தார். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி நிவாரண பொருட்களையும் வழங்கினார். பாதபூஜை நடந்தபோது, நெகிழ்ச்சியடைந்தப் பணியாளர்கள் கண்ணீர் விட்டனர். அப்போது அவர்கள், பொதுஇடங்கள், வீதிகள் என குப்பைகளையும், அழுக்குகளையும் அப்புறப்படுத்தும் தங்களின் பணியின் பெருமையை மக்கள் போற்றி வருவது தங்களை நெகிழ்ச்சியடைய செய்திருப்பதாகவும், முன்னாள் மத்திய அமைச்சர் பாதபூஜை செய்து மரியாதை செய்ததை தங்களால் மறக்கமுடியாது என தெரிவித்தனர்.

பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில்; கரோனா தடுப்பு பணியில் தூய்மை பணியாளர்களின் பங்கு முதன்மையான அர்ப்பணிப்பு உணர்வுடன் உள்ளது. அவர்களின் பணி தெய்வ பணிக்கு நிகரானது என்றார்.

SCROLL FOR NEXT