மத்திய மின்சார சட்டத்திருத்தம் விவசாயிகளின் இலவச மின்சார உரிமையைப் பறிக்கும்: காங்கிரஸ் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

மத்திய மின்சார சட்டத் திருத்தத்தின் மூலம் தமிழக விவசாயிகள் கடந்த 30 ஆண்டுகளாக அனுபவித்து வருகிற இலவச மின்சார உரிமையைப் பறிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“விவசாயிகள் கட்டணத்தைச் செலுத்திய பிறகு அந்தத் தொகையை மானியமாக மாநில அரசுகள் தங்கள் நிதியிலிருந்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தலாம் என்ற முறையை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்தச் சலுகையும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பறிக்கப்படும் என்று மின்சார சட்டத்திருத்தம் கூறுகிறது.

இலவச மின்சாரம் என்பது சலுகை அல்ல. அது ஒரு உரிமை. ஆற்றுப்பாசனத்தில் விவசாயிகள் பெறுகிற உரிமையை கிணற்றுப்பாசன விவசாயிகளுக்கும் வழங்குவதற்கே இலவச மின்சாரம். விவசாயிகள், குடிசை வாசிகள், கைத்தறி நெசவாளர்கள் பெற்றுவருகிற இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய மின்சார சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மீறி அமல்படுத்தினால் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கடுமையான போராட்டம் நடத்தப்படும்.

இந்திய அரசமைப்பு சட்டத்தில் பொதுப்பட்டியலில் உள்ள எரிசக்தி துறையில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களை 2003-ம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில் திருத்தங்களை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்ற முனைகிற மின்சார சட்டத் திருத்த முன்வரைவு நிறைவேற்றப்பட்டால் ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

மத்திய மின்சார சட்டத்தின் பிரிவு 45, 65இன்படி மின் கட்டணத்திற்கு மாநில அரசுகள் மானியங்கள் வழங்குவதை அனுமதிக்கிறது. அதை ரத்து செய்கிற வகையில் திருத்தங்களை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதனால் தமிழகத்தில் 1990 முதல் கடந்த 30 ஆண்டுகளாக விவசாயிகள் அனுபவித்து வருகிற இலவச மின்சாரம் நிச்சயமாக ரத்து செய்கிற சூழல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இதை அனுமதித்தால் விவசாயிகளுக்கு பேரழிவு ஏற்படும் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

மத்திய மின்சார சட்டத் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியிருக்கிறார். முதல்வரின் பல கடிதங்களுக்கு என்ன கதி ஏற்பட்டதோ, அதுதான் இதற்கும் ஏற்படப் போகிறது. இதை எதிர்க்கவோ, தடுத்து நிறுத்தவோ தமிழக அரசுக்கு துணிவு நிச்சயமாக கிடையாது.

கடந்த காலங்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசின் மீது பழியைப் போட்டு இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கு பல உத்திகளை கையாண்டார். பெரிய விவசாயி, சிறிய விவசாயி என்கிற பேதம் கற்பித்து மீட்டர் பொருத்துவதற்கு முயற்சி செய்தார். மணியார்டர் முறையை கொண்டுவந்து குழப்பம் ஏற்படுத்தினார்.

மக்கள் எதிர்ப்பு காரணமாக பிறகு கைவிடப்படவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதேபோல இன்றைக்கும் மத்திய அரசின்மீது பழியைப் போட்டு இலவச மின்சாரத்தை ரத்து செய்ய எடப்பாடி பழனிசாமி முயலக்கூடும். இதில் தமிழக விவசாயிகள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்.

தமிழகத்தில் விவசாயிகள் பயன்படுத்துகிற 21.4 லட்சம் பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல 2.1 கோடி ஏழை எளிய மக்கள் பயன்படுத்துகிற முதல் 100 யூனிட்டுகளுக்கு கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல 11 லட்சம் குடிசைகளுக்கும், 77,100 கைத்தறி நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இவற்றை எல்லாம் ரத்து செய்வதற்காகத்தான் மத்திய அரசின் மின்சாரத் திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இத்திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் விவசாயிகள் பயன்படுத்துகிற மின்சாரத்திற்கு மீட்டர் பொருத்தப்பட்டு கணக்கெடுக்கப்பட்டு, அதற்கான தொகையை மாதம்தோறும் செலுத்தவேண்டிய நிலை ஏற்படும்.

அப்படி விவசாயிகள் செலுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மாநில அரசு விரும்பினால் அந்தக் கட்டணத்தை மானியமாக நேரடி பயன் மாற்றத்தின் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு சட்டத்திருத்தம் வகை செய்கிறது. இந்த சலுகையும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ரத்து செய்யப்படும் என்று திருத்த சட்டம் கூறுகிறது.

விவசாயிகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் புதிய கட்டண விகிதப்படி ஒரு யூனிட் ரூ8 என்று கணக்கிட்டால் ரூ. 20 ஆயிரம் கோடி தமிழக மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்படுவதாக தமிழக அரசு சார்பில் ஒரு செய்தியை ஊடகங்களில் பரப்பியுள்ளனர். ஆனால் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி விவசாயிகள் உற்பத்தி செய்கிற விளைபொருளின் மதிப்பு குறித்து எவரும் பேசுவதற்கு முன்வருவதில்லை.

கடந்த 30 ஆண்டுகளாக விவசாயிகள் பெற்றுவருகிற இலவச மின்சாரம் என்பது சலுகையல்ல, அது ஒரு உரிமை . இந்த உரிமையை எவராலும் பறிக்க முடியாது. ஆற்றுப்பாசனத்தை பயன்படுத்தி விவசாயிகள் இலவசமாக நீர்ப்பாசனம் பெறுகிறார்கள்.

ஆனால் ஆற்றுப்பாசனம் இல்லாத பகுதிகளில் மிகுந்த பொருட்செலவில் கிணறு வெட்டி பம்ப்செட் அமைத்து, மாதம் தோறும் மின்கட்டணம் செலுத்தி, விவசாயிகள் அனுபவித்த கொடுமையில் இருந்து மீட்டு சமநிலைத்தன்மை கொண்டுவர 1990-ல் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டதுதான் இலவச மின்சாரம். இதைப் பறிப்பதை விவசாயப் பெருங்குடி மக்கள் எந்த நிலையிலும் அனுமதிக்க மாட்டார்கள்.

விவசாயிகள் அனுபவித்து வருகிற இலவச மின்சாரம் என்கிற உரிமையைப் பறிக்க முயல்கின்ற மத்திய மின்சார சட்டத்திருத்தத்தின் முன்வரைவை திரும்ப பெறுவதற்கு அதிமுக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

அந்த முயற்சிகள் பயனளிக்காமல் மத்திய மின்சாரச் சட்டத்திருத்த முன்வரைவு நடைமுறைக்கு வந்தால் அதை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் பொது ஊரடங்குக்கு கட்டுப்பட்டு போராட்டம் நடத்தவேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கை விரும்புகிறேன்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்