கரோனா: அரியலூரில் என்ன நடக்கிறது?

By நந்தினி வெள்ளைச்சாமி

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்புகளில் மே மாதம் தொடங்கும் வரை மிக மிகக் குறைவாக பாதிக்கப்பட்டிருந்த மாவட்டம் அரியலூர். மே ஒன்றாம் தேதி வரை 8 பேர் மட்டும் தான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தமிழகத்தின் மிகப்பெரும் கரோனா ஹாட் ஸ்பாட்டாக கோயம்பேடு சந்தை உருவெடுக்க ஆரம்பித்த சமயத்தில்தான் அரியலூர் மாவட்டத்திலும் அதிகமான கரோனா பாதிப்புகள் தென்படத் தொடங்கின. மே 4-ம் தேதி வரை 34 பேர் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், கடந்த 6-ம் தேதி ஒரே நாளில் 188 பேர் அரியலூர் மாவட்டத்தில் தொற்றுக்கு ஆளாகினர்.

கோயம்பேடு சந்தையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் படிப்படியாக சொந்த ஊர்களுக்கு வந்ததே இத்தகைய திடீர் உயர்வுக்குக் காரணம் எனக் கூறியது அரியலூர் மாவட்ட நிர்வாகம். ஆனால், 8-ம் தேதி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், அரியலூர் மாவட்டத்தில் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையே குறிப்பிடப்படாமல் இருந்தது. மே 9-ம்தேதி 16 பேரும், 10-ம் தேதி 4 பேரும், 11-ம் தேதி 33 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் நேற்று (மே 11) வரை மொத்தமாக, 8,002 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 308 பேர் பாதிக்கப்பட்டுள்ள அரியலூர் மாவட்டம், தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஒன்றாக 5-வது இடத்தை வகிக்கிறது.

இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் கோயம்பேடு சந்தையிலிருந்து வரும் தொழிலாளர்கள் பலருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுவதில்லை என்றும், தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதால் வீடுகளில் போதுமான வசதிகளின்றி பலரும் சிரமப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரியலூர் மாவட்டம் கொலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். கோயம்பேடு சந்தையில் கூலி வேலை செய்து வந்த சேகர், தனக்கு கரோனா பரிசோதனை செய்யவில்லை என்று கூறுகிறார்.

"அரியலூர் மாவட்டத்தில் பலரும் கோயம்பேடு சந்தையில் சுமை தூக்கும் தொழில் உள்ளிட்ட கூலி வேலைகளில் ஈடுபடுகின்றனர். எனக்கு ரூ.500 தான் ஒரு நாள் சம்பளம். அங்குள்ள கடைகளில்தான் பெரும்பாலும் தங்குவோம். கடந்த 4-ம் தேதி இரவு கோயம்பேடு சந்தையில் யாரும் தங்கக்கூடாது என காவல்துறையினர் எங்களைத் தாக்கினர்.

அதனால், அன்றைய நாள், நாங்கள் கிட்டத்தட்ட 31 பேர் லாரியில் செங்கல்பட்டு வரை வந்தோம். அங்கு போலீஸார்,லாரி மூலம் செல்ல அனுமதிக்காததால் அங்கிருந்து நடந்தே அரியலூர் வந்து சேர்ந்தோம். முதலில் கல்லூரியொன்றில் தங்க வைத்தனர். அங்கு ஒழுங்கான சாப்பாடு இல்லை. உப்புமா, பொங்கல் போன்றவற்றைக் கொடுப்பார்கள். உப்பு கூட இல்லாமல் அந்த உணவு மோசமான நிலையில் இருக்கும். அதைக்கூட போதிய அளவு தர மாட்டார்கள்.

அந்தக் கல்லூரியில் எங்களின் உடல் வெப்பநிலையை மட்டுமே பரிசோதித்தனர். கரோனா பரிசோதனை செய்யவில்லை. கரோனா பரிசோதனை செய்யாமலேயே வீடுகளிலேயே எங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினர். அறிகுறி இருந்தால் போன் செய்யச் சொல்லியிருக்கிறார்கள்.

கோயம்பேடு சந்தையில் இருந்து வரும் பலருக்கும் கரோனா இருக்கும்போது, எங்களைப் பரிசோதித்தால் தானே நாங்களும் எங்கள் குடும்பமும் பயமின்றி இருக்க முடியும். வீட்டிலேயே தனிமைப்படுத்துவதற்கான வசதியும் இல்லை" என்றார் சேகர்.

நமங்குணம் கிராமத்தைச் சேந்த சாமிவேல் என்பவர், தன் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதற்கான வசதி இல்லாததால், வீட்டின் தாழ்வாரத்தில் தங்கியிருப்பதாகக் கூறுகிறார்.

"கோயம்பேடு சந்தையில் மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறேன். அரியலூருக்கு லோடு வண்டியிலேயே 46 பேர் வந்தோம். செந்துறையில் உள்ள ஒரு பள்ளியில் 3 நாட்கள் தங்க வைத்திருந்தனர். காலை 9 மணியளவில் அங்கு சென்ற எங்களை இரவு 8 மணிக்குத்தான் வகுப்பறைகளைத் திறந்துவிட்டு தங்க வைத்தனர். அதுவரை இருட்டிலேயே அங்கு கிடந்தோம்.

உடல் வெப்பநிலையை மட்டுமே பரிசோதித்தனர். வேறு எந்த பரிசோதனையும் செய்யவில்லை. 'உங்களுக்கு எதுவும் இல்லை, வீட்டுக்குப் போகலாம்' எனச் சொல்லிவிட்டனர். எங்களுக்குப் பரிசோதனை செய்ய எந்த நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை. எங்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

மே 2-ம் தேதிக்கு முன்பு பரிசோதனை செய்தவர்களின் முடிவுகளைத்தான் மாவட்ட நிர்வாகம் இப்போது வெளியிடுகிறது. கோயம்பேடு சந்தையில் இருந்து வந்த பலருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் சரியாகச் செயல்படவில்லை.

கோயம்பேடு சந்தையில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக எங்களுக்குத் தெரிவித்தார். எங்களுக்கு இன்னும் எதுவும் செய்யவில்லை.

எங்களுடையது சிறிய வீடுதான். வீட்டின் தாழ்வாரத்தில்தான் நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கரோனா பரிசோதனை செய்தால் எங்களுக்கு திருப்தியாக இருக்கும். இப்போது பரிசோதிக்கும் அனைவருக்கும் பாசிட்டிவாக இருப்பதால் சோதனை செய்யாமல் இருக்கிறார்கள்" எனக் கூறினார்.

இது இருவரின் குரல் மட்டுமல்ல. நம்மிடம் பேசிய பல தொழிலாளர்களின் குரலும் இதுவே. அரசின் மீது பல விமர்சனங்களை வைக்கும் இத்தொழிலாளர்கள், கோயம்பேடு சந்தையிலிருந்து சொந்த ஊர் திரும்புவதற்கு வழியில் உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்து திமுக முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ்.சிவசங்கர் உதவியதாக நம்மிடம் பகிர்ந்துகொண்டனர். அரியலூர் மாவட்ட திமுக செயலாளராக உள்ள சிவசங்கரிடம் பேசினோம்.

எஸ்.எஸ்.சிவசங்கர், மாவட்டச் செயலாளர், திமுக

"கடந்த 6-ம் தேதி கோயம்பேடு சந்தையால் அரியலூர் மாவட்டத்தில் 188 பேருக்கு கரோனா வந்துள்ளது. 8-ம் தேதி எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டனர் என்பதே பட்டியலில் இல்லை. அதற்கடுத்த நாட்களில் மிகக்குறைவான எண்ணிக்கையே உள்ளது. மாவட்டத்தில் எத்தனை பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை, மறைக்கின்றனர்.

கடந்த 6-ம் தேதி பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்காமல் அன்றைய நாள் இரவே வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். பலகட்ட வலியுறுத்தல்களுக்குப் பின்னர்தான் மறுநாள் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். இன்னும் சிலரை கல்லூரியில் தங்க வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு சப்பாடு சரியில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. மிகத் தாமதமாக உணவு வழங்குவதாகப் புகார் உள்ளது.

கோயம்பேட்டிலிருந்து திரும்பியவர்களை கரோனா பரிசோதனை செய்யாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளச் சொல்கின்றனர்.

அரியலூர் மாவட்டம் வானம் பார்த்த பூமி. கொள்ளிடம் ஆற்றோரம் இருக்கும் பகுதிகள் மட்டுமே கொஞ்சம் செழிப்பானதாக இருக்கும். முந்திரி தான் பிரதான விவசாயம். கோயம்பேட்டில் 3,000-4,000 பேர் வரை அடிமட்டத் தொழிலாளர்களாகப் பணிபுரிகின்றனர். கூலித் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுபவர்களாக உள்ளனர். இயல்பு வாழ்க்கை திரும்பினால் தான் அவர்களுக்கு மீண்டும் வாழ்வாதாரம் கிடைக்கும்.

பலரது வீடுகளில் கழிவறை வசதி இல்லை. இயற்கை உபாதைகளுக்காக வெளியே செல்லும்போது அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு கரோனா பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. பல தொழிலாளர்களின் வீடுகள் மிகச்சிறிய வீடு. ஒரு அறைதான் மொத்த வீடே. அப்படியிருக்கையில் அவர்கள் எப்படி வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்வார்கள்? பலரும் வீட்டுக்குப் பின்பு மரத்தடியில் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.

பரிசோதனை முடிவுகளை வெளியில் விடாமல் தாமதிக்கின்றனர். இதுவரை கோயம்பேடு சந்தையிலிருந்து அரியலூர் மாவட்டத்திற்கு 2,600 பேர் வந்திருப்பதாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், 400-500 பேருக்குத்தான் கரோனா பரிசோதனை செய்துள்ளனர். போதுமான பரிசோதனைகளைச் செய்வதில்லை.

அரியலூர் மருத்துவமனையில் 100 பேருக்குத்தான் சிகிச்சை அளிக்கின்றனர். 33 மருத்துவர்கள்தான் அந்த மருத்துவமனைகளில் இருக்கின்றனர். மற்ற வேலைகள் பார்க்கும் மருத்துவர்களைத் தவிர்த்து 11 பேர் தான் கரோனா வார்டில் சிகிச்சை அளிக்கின்றனர். அதிலும் ஒரு மருத்துவருக்கு கரோனா உள்ளது.

சுகாதாரப் பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யக்கூடாது என உத்தரவும் இடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரோனா பாதிப்புடன் அவர்கள் பணி செய்வதாகக் குற்றச்சாட்டு உள்ளது. மருத்துவமனையே கரோனா கேந்திரமாக மாறும் அவலம் நிகழ்ந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மாவட்ட நிர்வாகம் எந்த பதிலும் சொல்வதில்லை" என குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னாவிடம் கேட்டோம்.

மாவட்ட ஆட்சியர் ரத்னா

"கோயம்பேட்டில் இருந்து வருபவர்களை செக்போஸ்ட்டில் இருந்து அழைத்து வந்து சிறப்பு தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கிறோம். நல்ல சாப்பாடு, வைட்டமின் மாத்திரைகள், கபசுரக் குடிநீர் கொடுக்கிறோம். திருமணங்களுக்குச் சமைக்கும் சமையல் கலைஞர்களை வைத்து உணவு சமைக்கிறோம். தினமும் 2 பழங்கள் கொடுக்கிறோம். பேரிச்சம்பழம், முந்திரி உள்ளிட்ட உலர் பழங்கள் கொடுக்கிறோம். என்னிடம் யாரும் உணவு தொடர்பாகப் புகார் கொடுக்கவில்லை. நானும் ஆய்வுக்குச் சென்று பார்க்கிறேன்.

கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துகிறோம். மாவட்டத்தின் 14 பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அவர்களைத் தனிமைப்படுத்தியுள்ளோம். 'வீட்டில் வசதிகள் இருக்கிறது' என்று சொல்பவர்களை மட்டுமே விருப்பத்தின் பேரில் வீட்டுக்கு அனுப்புகிறோம். வசதி இல்லாதவர்களை நாங்கள் தனிமைப்படுத்துகிறோம்.

இதுவரை 525 பேருக்கு கரோனா பரிசோதனை செய்துள்ளோம். அறிகுறிகள் எல்லோருக்கும் இல்லை. யாரெல்லாம் தங்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என கேட்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் எடுக்கிறோம். ஸ்வாப் டெஸ்ட் எடுக்கிறோம். ரிசல்ட்டை உடனுக்குடன் அறிவித்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதில் ஒளிவுமறைவில்லை, வெளிப்படையாகத்தான் இருக்கிறோம்.

தொற்று இருப்பவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில்தான் இருக்கின்றனர். அவர்களை நாங்கள் வெளியில் விடுவதில்லை.

அரியலூர் அரசு மருத்துவமனையில் 200 படுக்கைகள் உள்ளன. அரியலூர் குடிசை மாற்று வாரியத்தில் கரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 250 படுக்கைகள் உள்ளன. திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே போதிய படுக்கை வசதிகள் உட்பட அனைத்து வித வசதிகளும் மாவட்டத்தில் உள்ளன.

அரியலூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு மட்டும்தான் கரோனா உள்ளது. மருத்துவர் உள்ளிட்ட வேறு எந்த சுகாதாரப் பணியாளர்களுக்கும் கரோனா இல்லை. அறிகுறிகள் உள்ள மருத்துவர்களுக்கு பரிசோதிக்கிறோம். மருத்துவர்களை 14 நாட்கள் விடுப்பு கொடுத்து தனிமைப்படுத்துகிறோம்" என்றார்.

சர்ச்சைகளுக்கும், விளக்கங்களுக்கும் மத்தியில் தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான அரியலூர் மாவட்டம் கரோனா அச்சத்தில் உறைந்திருக்கிறது.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்