பேரிடர் காலத்தில் பள்ளி திறந்த உடனே தேர்வு வைப்பது மாணவர்கள் உளவியலுக்கும் உரிமைக்கும் எதிரானது: குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன் கண்டனம் 

By மு.அப்துல் முத்தலீஃப்

தொடர்ந்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை, யாரிடமும் கலந்தாலோசிக்காமல் சர்வாதிகாரப் போக்கில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடுவது என்பது குழந்தைகள் மீது நடத்தப்படும் மிகப் பெரும் வன்முறை என்று குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர் தேவநேயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பு பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு விலகாத நிலையில் மாணவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கும் பொதுத்தேர்வு முடிவைக் கைவிட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.

கல்வியாளர்கள், குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், ஆசிரியர் சங்கங்கள் இம்முடிவை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர் தேவநேயனிடம் ’இந்து தமிழ் திசை’ இணையதளம் சார்பில் பேசியபோது அவர் கூறியதாவது:

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு குறித்த உங்கள் கருத்து என்ன?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, விடுபட்ட பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தொடங்கும் என்று ஊடகவியலாளர் சந்திப்பில் கூறுகிறார் கல்வி அமைச்சர். என்ன மோசமான செய்தி, மே 31 வரை போக்குவரத்து இயங்கக் கூடாது என்று நேற்று முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் முன் கோரிக்கை வைக்கிறார் தமிழக முதல்வர்.

அப்படியெனில் எப்படி ஜூன் ஒன்றாம் தேதி பல்வேறு ஊர்களில் உள்ள குழந்தைகள் எப்படி தங்களுடைய பள்ளிக்குச் சென்று தேர்வு எழுத முடியும்? இரண்டாவது கேள்வி ஒரு பேரிடர் காலத்தில் பள்ளி திறந்த உடனே தேர்வு வைப்பதென்பது குழந்தை உளவியலுக்கும் உரிமைக்கும் எதிரானது.

தொடர்ந்து தமிழகக் கல்வி அமைச்சர் மற்றும் கல்வித்துறை, யாரிடமும் கலந்தாலோசிக்காமல் சர்வாதிகாரப் போக்கில் , எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அறிக்கைகள் வெளியிடுவது என்பது குழந்தை மீது நடத்தப்படும் மிகப் பெரும் வன்முறை ஆகும்.

ஏனெனில் பேரிடருக்குப் பின் வறுமை காரணமாக குழந்தை உழைப்பாளர்கள், குழந்தை கடத்தல், குழந்தை திருமணம் மற்றும் பள்ளியை விட்டு இடைவிலகல் போன்றவை அதிகமாகும் என்பது இதற்கு முன் நடந்த பேரிடர்களில் நாம் கண்ட வரலாறாகும்.

கல்வித்துறையில் செய்கிற மாற்றம் என்பது இப்போதைக்கு பாதிப்பு தெரியாது. ஒரு தலைமுறைக்குப் பின் தான் பாதிப்பு தரும். இதுபோன்ற அறிவிப்புகள் அல்லது முடிவுகள் எடுக்கும்போது கல்வியாளர்கள், ஆசிரியர்கள்,குழந்தை உளவியலாளர்கள், மருத்துவர்கள், குழந்தை பாதுகாப்பு நிபுணர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னாள் கல்வித்துறையைச் சார்ந்தவர்களோடு கலந்தாலோசித்து முடிவுகளை எடுத்து வெளியிட வேண்டும்.

அமைச்சருக்கு பள்ளித் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட உரிமை இல்லையா?

இது லட்சக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலத்திற்கான பணி. கல்வித்துறையில் எடுக்கப்படுகிற ஒவ்வொரு முயற்சியும் மற்றும் மாற்றமும் பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட வேண்டும். ஆலோசிக்கப்படவும் வேண்டும்.

குறிப்பாக கல்வித் துறையில் பல்வேறு துறைகள் உள்ளன. தொடக்கக் கல்வித்துறை RMSA, SCERT, மேல்நிலைக் கல்வித் துறை மற்றும் தேர்வுத்துறை போன்ற துறைகளின் இயக்குனர்களிடம் இது தொடர்பாக ஆலோசனை மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டம் எப்போது நடைபெற்றது? என்னென்ன முடிவெடுத்தார்கள்? இந்த முடிவின் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறை செயலாளரின் மூலம் அமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டும். இதுதான் நடைமுறை.

ஆனால், அமைச்சரே எந்தவிதக் கருத்தும் கேட்காமல் தன்னிச்சையாக அறிக்கை வெளியிடுவது ஜனநாயகப் போக்கல்ல. ஆரோக்கியமானதும் அல்ல”.

இவ்வாறு தேவநேயன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்