75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்திருப்பது தொடர்பாக தி.மு.க இளைஞரணியினருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்
கரோனா ஊரடங்கினால் தத்தளிப்போருக்கு பல்வேறு கட்சியினர் உதவிகள் செய்து வருகிறார்கள். இதில் திமுக இளைஞரணி சார்பில் உதவி தேவை என அழைப்போருக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“இவை, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்களின் அலைபேசி எண்கள். ஊரடங்கில் உதவி தேவைப்படுவோர் அந்தந்த மாவட்ட அமைப்பாளரை அழைக்கவும். அத்தியாவசிய பொருட்களைக் கொண்டுவந்து சேர்க்க முயல்கிறோம்!’- கழகத் தலைவர் உத்தரவின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறு முயற்சி, அழகான பல நினைவுகளுடன், ஏழை எளியோர், மாற்றுத்திறனாளிகளின் மாறா அன்புடன், இளைஞர்களின் உத்வேகத்துடன் இன்றும் தொடர்கிறது.
இந்த முயற்சியை தங்களுடைய இளைஞர் படையை ஒருங்கிணைத்து களத்தில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர்களையும் அவர்களை ஒருங்கிணைக்கும் மாநில துணை செயலாளர்களையும் சமீபத்தில் காணொலி காட்சி மூலம் நேரலையில் சந்தித்து உரையாடினேன்.
உதவி செய்யும் இந்த பயணத்தில் அவர்கள் சந்தித்த சவால்கள், சுவையான சம்பவங்கள், அடுத்தகட்ட உதவிப் பணிகள் உள்ளிட்ட விஷயங்களை அவர்களுடன் விவாதித்தேன். அப்போது பகிரப்பட்டவை மட்டும்தான் உதவிகளாகச் செய்யப்பட்டன என எண்ணவேண்டாம். செய்யப்பட்ட உதவிகளில் இவை ஒரு சோறு பதம்தான். ஒவ்வொன்றையும் அடுக்கினால் பேச நேரம் போதாது, எழுதப் பக்கங்கள் போதாது என்பதால் அமைப்பாளர்கள் சொன்ன சுவாரஸ்யங்களில் சிலவற்றை மட்டும் அவர்களின் வார்த்தைகளிலேயே தொகுத்துள்ளேன்.
“தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இங்குக் கொண்டுவந்து விட்டுவிடுவார்கள். அப்படிப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து மதிய உணவு வழங்குகிறோம். ‘இவர்கள் யார், எவர், எந்தக் கட்சி, எந்த மாநிலம்னு யாருக்கும் தெரியாது. இவங்களுக்கு உதவி பண்றதன் மூலம் திமுக ஒரு மனிதாபிமான இயக்கம்னு நிறுபிச்சிட்டீங்க’என்று இங்குள்ளவர்கள் பாராட்டுகிறார்கள் அண்ணா!” - உணர்ச்சி மிகுதியில் பேசினார் இராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளர் இன்பா என்.ரகு.
“தன் 12 வயது மகனுக்கு இரத்தப் புற்றுநோய். மகனை எழும்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தார் அவர். ஒருபக்கம் தீவிரமடைந்த நோய், மறுபக்கம் கரோனா பரவல். அதனால் சொந்த ஊரான தஞ்சைக்கே போக நினைத்தார். ஆனால் கையில் பணமில்லை. ஊரடங்கிலும் பயணிக்க முடியாத சூழல். உதவி கேட்டு இளைஞரணியை அழைத்தார்.
எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் அவர்கள் மூலம் மருத்துவரின் பரிந்துரையின்படி டிஸ்சார்ஜ் சம்மரி பெற்று, ஊரடங்கில் பயணிக்க பாஸ் வாங்கி, வண்டி வாடகைக்கு 8 ஆயிரம் ரூபாயையும் கொடுத்து அவரை தஞ்சைக்கு அனுப்பிவைத்தோம். இந்த கரோனா காலத்தில் உதவி கேட்டு அழைத்த அரைமணி நேரத்தில் நாம் போய் நிற்பதே அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது அண்ணா.” சென்னை மேற்கு மாவட்ட அமைப்பாளர் சிற்றரசுவின் முகத்தில் அப்படி ஓர் ஆத்ம திருப்தி.
‘‘உதவிகேட்டு அழைத்த தாம்பரத்தைச் சேர்ந்த திரைப்பட உதவி இயக்குநர் ஒருவர், ‘சரியாகச் சாப்பிட்டு இரண்டு மூன்று நாட்களாகின்றன. சாப்பாடு கிடைக்குமா’ என்றார். அவர் அழைத்த நாளிலிருந்து இந்நாள்வரை நம் இளைஞரணி தம்பி ஒருவரின் வீட்டிலிருந்து அவருக்கு மூன்று வேளையும் உணவு போய்க்கொண்டு இருக்கிறது. ஊரடங்கு முடியும்வரை உணவு தருவதாக அவருக்கு உறுதியளித்துள்ளோம்!” காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக்கின் வார்த்தைகளில் உற்சாகம்.
“அவர் மதுரை அருள்தாஸபுரத்தைச் சேர்ந்த சாலையோர ஜூஸ் வியாபாரி. மூன்று பிள்ளைகள், மனைவி, இவர் என வீட்டில் மொத்தம் ஐந்து பேர். ஊரடங்கால் வேலையில்லை, வீட்டில் பசி, பட்டினி. ரேசனில் வாங்கிய அரிசியில் மேய்ந்த வண்டு, புளுக்களைப் பார்த்தவருக்கு அதிர்ச்சி. அந்த அநியாயத்தைத் தட்டிக்கேட்க முடியாத தன் இயலாமையை ஒரு வீடியோவாக எடுத்து வாட்ஸ் ஆப்பில் தெரிந்தவர்களுக்கு அனுப்பியிருக்கிறார். வைரலான அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு வர, உங்களின் ஆலோசனையின்படி அவருக்கு உதவினோம்!” அமைப்பாளர் மூவேந்திரன் சொல்லச்சொல்ல முடிவடையாமல் நீண்டன மதுரை மாநகர் இளைஞரணியினரின் உதவிகள்.
கோவை மாநகர் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் கோட்டை அப்பாஸிடம் ஒரு சிறப்புண்டு. அவர் பேசப்பேச அவரின் உற்சாகம் எதிரிலிருப்பவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும். அன்றும் அதுவே நிகழ்ந்தது. “தினமும் 800 பேருக்கு கடந்த 35 நாட்களுக்கும் மேலாக மதிய உணவு வழங்கி வருகிறோம். நம் உபசரிப்பைப் பார்த்ததும், சொந்த வீட்டில் சாப்பிடுவதுபோல் அவ்வளவு உரிமையுடன் வாங்கிச் செல்கின்றனர்!” அப்பாஸின் வார்த்தைகளில் அவ்வளவு அன்பு.
அதிக உதவி செய்வதால் அதிக உபத்திரத்துக்கு ஆளானவர் நெல்லை கிழக்கு மாவட்ட அமைப்பாளர் செல்லதுரை. ‘உங்க இஷ்டத்துக்கெல்லாம் பொருட்களை கொடுக்கக்கூடாது. எதுவா இருந்தாலும் கலெக்டர் ஆபீஸ்ல கொண்டுவந்து ஒப்படைக்கணும். இல்லையினா பொருட்களை சீஸ் பண்ணிடுவோம்’ என்று காவல்துறை அதிகாரிகள் தினம் ஒருவராக இவரின் வீட்டுக்குப் படையெடுத்துள்ளனர். அந்த மிரட்டல் உருட்டலையெல்லாம் கடந்துதான் மனிதர் மக்களுக்கு உதவிப்பொருட்களை கொண்டுபோய் சேர்த்து வருகிறார். ‘நாம சொந்தக் காசுல வாங்கின பொருள்களை நாமளே நேரடியாக கொடுக்கிறதுதானே நமக்குத் திருப்தி’என்று வெள்ளந்தியாக சிரிக்கிறார் செல்லதுரை.
தஞ்சை வடக்கு மாவட்ட அமைப்பாளர் குட்டி தெட்சிணாமூர்த்தி களத்தில் கண்ட காட்சிகளை விளக்கும்போது அவரையறியாமல் கண்கலங்கிவிட்டார். “மருத்துவ உதவிகள் கேட்டவங்க, அந்த மருந்து மாத்திரைகளை வாங்கிக்கொண்டு கண்கலங்குகிறார்கள். ‘மாத்திரை மருந்துகள் வாங்கித் தாங்கனு கேட்டா, ‘கரோனாவா இருக்குமோ’னு உறவுகளே விலகி ஓடும்போது, நீங்க வந்து நின்னீங்க பாருங்க, உங்களை வழிநடத்தும் தலைவரும், உதயநிதியும், இந்த இயக்கமும் இன்னும் பல நூற்றாண்டு கடந்தும் வாழும், ஆளும்’னு வாழ்த்துறாங்கண்ணா’என்கிறார் குட்டி.
‘‘காவேரிப்பாக்கம் அருகிலுள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 80 பேருக்கு உணவுப் பொருட்களும் நிதியுதவியும் அளித்தோம். அவர்கள் அனைவரும் மின்சார ரயில்களில் பொருட்கள் விற்றுப் பிழைப்பு நடத்துபவர்கள். ரயில் போக்குவரத்து இல்லாததால், வருமானம் இன்றி தவித்த அவர்களுக்கு உதவினோம். இவர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், வெளி மாநிலத் தொழிலாளர்கள் கழக உதவிப் பணிகளால் பயனடைந்துள்ளனர்’’ - வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரப்பனின் வார்த்தைகளை அனைத்து மாவட்ட அமைப்பாளர்களும் வழிமொழிந்தனர்.
தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் சண்.ராமநாதனும் அப்படி ஒரு நெகிழ்வான தருணத்தைப் பகிர்ந்துகொண்டார். “தஞ்சையைச் சேர்ந்தவர் இருதயராஜ், மாற்றுத்திறனாளி. கடந்த 15 ஆண்டுகளாக வழக்கமான உணவுகள் ஏதுமின்றி தானியங்களால் செய்யப்பட்ட சத்துப் பவுடர்களையே உணவாக அருந்தி உயிர்வாழ்கிறார்.
‘கரோனா காலத்தில் இந்த ஆடம்பரம் தேவையா’னு தப்பா நினைக்காதீங்க. இதுதான் என் ஆகாரமே. சிரமம் பார்க்காமல் வாங்கித்தரவும்’என்றார். வாங்கித்தந்ததும் அவருக்கு அவ்வளவு சந்தோஷம் அண்ணா” என்று அந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்தார் சண்.ராமநாதன்.
“பீகார் தொழிலாளர்கள் திருப்பூரில் உணவின்றி சிரமப்படுவதாக நம் தலைவர் அவர்களுக்கு அம்மாநில முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி டிவிட்டர் மூலம் தகவல் தெரிவித்திருந்தார். அது உங்கள் மூலம் எங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அம்மாநில தொழிலாளர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினோம். தேஜஸ்வியும் நம் தலைவருக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.” இது திருப்பூர் வடக்கு மாவட்ட அமைப்பாளர் தங்கராஜ்.
கேரளாவில் சிகிச்சைக்குச் செல்ல ஒருவருக்கு அனுமதிச் சான்று பெற்றுத்தந்ததையும், உதவிக்கு ஆளுமின்றி, உணவுமின்றி தவித்த பாட்டி பற்றி நாளிதழில் வந்த செய்தியைப் பார்த்து அவருக்கு உதவிபுரிந்த அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் இளையராஜா.
அலைபேசியில் அழைத்து உதவி கேட்டவர்கள் மட்டுமில்லாமல், ஒரு பகுதிக்குப் போனால் அங்குள்ளவர்கள் அனைவருக்கும் பொருட்களைக் கொடுப்பது என்பதைக் கொள்கையாகவே வைத்திருக்கும் சென்னை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பிரபாகர்ராஜா, நிறைமாத கர்ப்பிணி ஒருவர் கேட்டுக்கொண்டதன் பேரில் பிறக்கவுள்ள அவரின் குழந்தைக்குத் தேவையான சோப்பு, பவுடர், துண்டு அடங்கிய பேபி கிட்டை உடனடியாக நேரில் வழங்கியதையும் நெகிழ்வும் மகிழ்வுமாகப் பகிர்ந்துகொண்டார்.
துணை செயலாளர்களும் மாவட்ட அமைப்பாளர்கள் செய்யும் உதவிப் பணிகளை ஒருங்கிணைப்பது மட்டுமில்லாமல் அவர்கள் தனிப்பட்ட முறையிலும் நலத்திட்ட உதவிகளைச் செய்வது பாராட்டுக்குரியது.
சட்டமன்ற உறுப்பினர்களும் இளைஞரணி துணை செயலாளர்களுமான அண்ணன்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி இருவரும் தங்களுடைய தொகுதிகளில் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறார்கள்.
இதேபோல் துணை செயலாளர்கள் அசன் முகமது ஜின்னா, பைந்தமிழ் பாரி இருவரும் கரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனிப்பட்ட முறையிலும் உதவி வருகிறார்கள். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நம் கழகத்தினருக்கு பகிர்ந்தளிக்கக்கோரி தலா ஐந்து கிலோ எடைகொண்ட 5000 அரிசி பைகளை என்னிடம் ஒப்படைத்த துணை செயலாளர் சகோதரர் ஜோயலும் பாராட்டுக்குரியவர்.
துணை செயலாளர் வழக்கறிஞர் துரை அவர்களும் தான் சார்ந்த நெல்லை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில்கூட, நெல்லை கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த தவசி என்ற பெண்மணி மூன்று பெண் குழந்தைகளுடன் சிரமப்படுவதாகச் வந்த செய்தியின் அடிப்படையில் அந்தப் பெண்ணுக்கு உதவிகளை நேரில் சென்று வழங்கிய அவருக்கும் நன்றி.
இவர்கள் மட்டும்தான் உதவினார்களா, மற்ற மாவட்ட அமைப்பாளர்கள் செய்யவில்லையா என்று கொளுத்திப்போட்டுக் குளிர்காய எவரும் நினைக்கவேண்டாம். ஒருவர் மற்றவருக்குச் சளைத்தவரில்லை என்று வியக்கும் அளவுக்கு அனைவரும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உணவுப் பொருட்களை கொண்டுபோய் சேர்த்துள்ளனர்.
இப்படி 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தி.மு.க இளைஞரணியினரால் பயனடைந்துள்ளனர். அவர்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் அலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் எங்களிடம் உள்ளன. அனைத்தையும் ஒவ்வொன்றாக எழுத முடியாது என்பதால் ஒன்றிரண்டை மட்டுமே இங்கே பதிவுசெய்துள்ளேன். உதவிகளும், உரையாடல்களும், இதுபோன்ற பதிவுகளும் தொடரும்.
நேரலையில் பேசிய அமைப்பாளர்கள் பலரும், ‘பயனாளிகள், தலைவரையும் உங்களையும் பாராட்டுகிறார்கள்’என்றனர். ஆனால் இந்தப் பாராட்டு, வாழ்த்து அனைத்தும் களத்தில் நின்ற இளைஞரணியினரையே போய்ச் சேரும். ஏனெனில், கஜா, வர்தா புயல்.. எனப் பல பேரிடர் காலங்களில் நாம் செய்த உதவிகளோடு கரோனா கால உதவிகளை ஒப்பிடுகையில் முந்தியன பெரிய விஷயங்களே அல்ல. காரணம் கரோனா உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய வைரஸ் தொற்று. நான் சொன்னேன் என்பதற்காக உங்களது உயிரை துச்சமென மதித்து உதவி செய்து வருகிறீர்கள். அதனால் அனைத்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் உங்களையே போய்ச் சேரும். நீங்கள் தந்த உத்வேகத்தில்தான், நானும் சென்னைக்குள் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு யார் அழைத்தாலும் மறுக்காமல் சென்று வருகிறேன்.
இந்த சமயத்தில் தலைவர் அவர்கள் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும், இளைஞரணியுடன் இணைந்து பயணித்த கழகத்தினர் அனைவருக்கும் நன்றி. மக்களின் துயர் துடைக்கும் இந்த உதவிப் பணிகள் தொடரட்டும்"
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago