எரித்துக் கொல்லப்பட்ட விழுப்புரம் சிறுமி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 10-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் ஏசகன் (எ) கலியமூர்த்தி மற்றும் முன்னாள் கவுன்சிலர் கணபதி மகன் முருகன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் பெட்ரோல் ஊற்றி ஜெயஸ்ரீயை உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்றுள்ளனர். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வரவே குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.

இந்நிலையில், தீயில் கருகிய படுகாயமடைந்த மாணவி ஜெயஸ்ரீயை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அந்த மாணவி தன்னை ஏசகனும், முருகனும் பெட்ரோல் ஊற்றி எரித்ததை நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் கொடுத்தார்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அந்த மாணவி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்தக் கொடூரக் குற்றச் செயலில் ஈடுபட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர். மாணவியின் கொலையை அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கண்டித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.10 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்க கோரிக்கை வைத்தது.

இந்நிலையில் இன்று முதல்வர் இழப்பீடு வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
“விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் சிறுமி ஜெயஸ்ரீ என்பவர் 10.5.2020 அன்று முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரால் தீ வைத்ததில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று (11.5.2020) உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் குற்றவாளிகள் மீது திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இக்கொடூரச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும். உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்