சிவகங்கை தொகுதி மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் கார்த்தி சிதம்பரம் எம்பி.
இன்று (திங்கட்கிழமை) மதுரையில் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் முன்னிலையில் ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் அவர். பின்னர் போன் வாயிலாக 'இந்து தமிழ்' இணையத்துக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி இது:
நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்கிறீர்கள். மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது?
கரோனாவைக் கண்டு எல்லோரும் அஞ்சுகிறார்கள். அதைவிட, லாக்டவுன் காரணமாக அவர்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அதற்காக லாக்டவுன் செய்திருக்கக் கூடாது என்று சொல்லவில்லை. இதன் விளைவுகளை உத்தேசித்து, அரசாங்கம் மக்களுக்கு நிறைய நிவாரணம் வழங்கியிருக்க வேண்டும். வறுமைக்கோட்டிற்குக் கீழே இருக்கிற ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 7,500 ரூபாய் பணம் கொடுங்கள், சிறு,குறு தொழில் செய்வோருக்கான கடன்களைத் தள்ளுபடி செய்யுங்கள், வருமான வரி செலுத்தியவர்களுக்கு அதில் ஒரு பகுதியைத் திரும்பக் கொடுங்கள்.
மக்கள் மத்தியில் பணப்புழக்கம் இருப்பதற்கு ஏதாவது செய்யுங்கள் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் நிறைய யோசனைகளைச் சொன்னோம். அதைச் செய்திருந்தால், மக்கள் கையில் பணம் போய்ச் சேர்ந்திருக்கும். இவர்கள் எதையுமே செய்யவில்லை. பொது முடக்கத்தை மட்டும் விலக்குகிறார்கள். இது என்ன டிவியா... ஆஃப் பண்ணிவிட்டு மீண்டும் சுவிட்சைப் போட்டால் உடனே படம் தெரிவதற்கு? இந்த விஷயத்தில் மக்கள் மத்தியில் நிறைய ஏமாற்றமும், விரக்தியும் தெரிகிறது.
நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் கேட்கிறேன். பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து பிரதமர் யாருக்காவது நிவாரணம் வழங்கியிருக்கிறாரா?
முதல்ல இந்த பிஎம் கேர் நிதி எதற்கு? ஏற்கெனவே பிரதமர் நிவாரண நிதி, முதலமைச்சர் நிவாரண நிதி என்று இருக்கிறதே? அந்தக் கணக்கு எதற்காகத் தொடங்கப்பட்டது? இதுவரையில் அதற்கு எவ்வளவு பணம் வந்திருக்கிறது, யாருக்காவது உதவினார்களா? என்று எதுவுமே எங்களுக்குத் தெரியாது. இவர்களிடம் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. தனிநபர் விளம்பரத்துக்காக கணக்குத் தொடங்குகிற நேரமா இது?
ஊழியர்களின் சம்பளத்தை வெட்டாதீர்கள் என்று பிரதமர் சொல்லியும், பெரும்பாலான நிறுவனங்கள் சம்பளத்தில் கை வைத்துவிட்டனவே?
வெட்டத்தாங்க செய்வாங்க. நானே ஒரு பிஸினஸ்மேன். எனக்குத் தெரியும் அந்த வலி. ஒன்றரை மாசமா வருமானமே இல்லாம, "நீ சம்பளம் கொடு"ன்னு சொன்னா எப்படி கொடுக்க முடியும்?
சிறு நிறுவனங்களுக்காவது அரசு ஏதாவது உத்தரவாதம் கொடுத்திருக்கணும். "ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுத்திடுங்க. அந்தத் தொகையில் ஒரு பங்கை நாங்கள் கொடுத்துவிடுகிறோம். நீங்கள் கட்டிய வருமான வரியில் 25 சதவிகிதத்தை ரிபேட்டாகத் திரும்பத் தருகிறோம்" என்று ஏதோ ஒரு ஃபார்முலாவை அறிவித்திருக்க வேண்டும். எதுவுமே செய்யாம, கைதட்டுங்க, விளக்கேத்துங்கன்னு மட்டும் சொன்னா எப்படி? அரசாங்கமே ஊழியர்களின் அகவிலைப்படியில் கை வைக்கிறபோது, சின்னத் தொழில் பண்ணுகிறவர்களால் என்ன செய்ய முடியும்?
தமிழக முதல்வர், இந்தியப் பிரதமர். இருவரில் யாருடைய செயல்பாடு சிறப்பாக இருப்பதாக நினைக்கிறீர்கள்?
ரெண்டுமே ஏமாற்றம்தான். தமிழ்நாட்டில் பரிசோதனையே முறையாகப் பண்ணல. கோயம்பேடு பிரச்சினை வந்தபிறகுதான் சோதனையே சூடுபிடித்திருக்கிறது. ரெண்டாவது, ஊரடங்கிற்குள் ஒரு ஊரடங்கு அறிவித்தது முட்டாள்தனமானது. நான்கு நாட்களுக்கு எந்தக் கடையுமே இருக்காதுன்னு சொன்னா, எல்லாருமே இன்னைக்கே சாமான் வாங்கப் போகத்தான் செய்வாங்க. இந்த லாஜிக் தெரியாம எதற்காக ஊரடங்கிற்குள் ஊரடங்கு அறிவித்தார்கள்? அத்தனை நாள் கடைப்பிடிக்கப்பட்ட தனிமனித இடைவெளியை ஒரே நாளில் கெடுத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
ஒட்டுமொத்த இந்தியாவை எடுத்துக்கொண்டால், ஏற்கெனவே பணமதிப்பு இழப்பு நடவடிக்கையாலும், தப்பான ஜிஎஸ்டி நடைமுறையாலும் தொழில் நிறுவனங்கள் எல்லாம் நலிந்துவிட்டன. இப்போது கரோனா பாதிப்பு வேறு. அந்த நிறுவனங்களை அழியாமல் காக்க வேண்டும் என்றால், அரசாங்கம் நிதி உதவிகளைச் செய்து ஆக்ஸிஜன் கொடுத்திருக்க வேண்டும். பிரதமர் மோடி எதையுமே செய்யல. இந்த நேரத்துல, இருக்கிற ஆக்ஸிஜனையும் பிடுங்கி விடும் வேலைதான் நடக்குது.
வெளிமாநிலத் தொழிலாளர்கள் நடந்து செல்லக்கூடாது என்று மத்திய உள்துறை உத்தரவிட்டிருக்கிறதே?
ஊரடங்கு அறிவிக்கும் முன்பே வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு 72 மணி நேர அவகாசம் கொடுத்திருந்தால், எல்லோரும் அவரவர் ஊர்களுக்குச் சென்றிருப்பார்கள். திடீரென்று ரயில் உள்ளிட்ட அனைத்துப் போக்குவரத்தையும் முடக்கியதுதான் இதுவரையில் நடந்த அத்தனை உயிர்ப் பலிகளுக்கும் காரணம். 45 நாட்களாக எந்த வேலையும், வருமானமும் இல்லாமல், உணவுக்கே வழியில்லாமல் ஆக்கிவிட்டு இப்போது ரயில்களில் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும்கூட ரயில் டிக்கெட் இலவசம்தான் என்று சொல்லாமல் அந்தத் தொழிலாளர்களைப் பீதியிலேயே வைத்திருக்கிறார்கள்.
இப்போது கடைகள் திறக்கப்பட்டுவிட்டன. பைக், கார் வைத்திருப்பவர்களுக்குப் பிரச்சினை இல்லை. பொதுப் போக்குவரத்தைத் தொடங்காமல் மற்றவர்கள் எப்படி வேலைக்குச் செல்வார்கள்? இன்றைய சூழலில் பொதுப் போக்குவரத்தை அரசு அனுமதிக்க வேண்டும். ஒரு பேருந்தில் 25 பேர், ரயிலில் இத்தனை பேர் என்ற வழிகாட்டு முறையை அறிவித்து, தனிமனித இடைவெளியுடன் இயக்க அரசு அனுமதிக்க வேண்டும். வேறு வழியில்லை. இதுதான் ரியாலிட்டி. இனியாவது துறை சார்ந்த நிபுணர்கள், எதிர்க்கட்சிகளின் யோசனையும் கேட்டு இந்த அரசுகள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago