மஸ்கட்டிலிருந்து மருத்துவ சேவை: குமரி மருத்துவர் ஜாக்சனின் மனிதநேயம்

By என்.சுவாமிநாதன்

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜாக்சன். கரோனா களேபரங்களுக்கு முன்னதாக, மஸ்கட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணி தொடர்பான நேர்காணலுக்குச் சென்றிருந்தார் ஜாக்சன். திடீரென பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு விமானச் சேவைகள் ரத்தானதால் அங்கேயே தங்கவேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது.

எதிர்பாராத இந்தத் தடங்கலால் அப்படியே முடங்கிவிடாத ஜாக்சன், மஸ்கட்டில் இருந்தபடியே சமூக வலைதளங்களில் கரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்களையும், இதர நோய்களைப் பற்றிய விழிப்புணர்வையும் வழங்கி வருகிறார். சமயம் கிடைக்கும் போதெல்லாம் அலைபேசி வழியாக இலவச மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கிவருகிறார்.

‘ஜனநாயக ஊழல் விடுதலை முன்னணி’ என்னும் பெயரில் சொந்தக் கட்சி நடத்திவரும் ஜாக்சன், குமரி மாவட்டத்தில் தொடர்ந்து தேர்தல் களத்திலும் இருப்பவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு சொற்பமான வாக்குகளைப் பெற்றவர். வாக்குகள் குறைவானாலும் தேர்தலுக்குத் தேர்தல் போட்டியிட அவர் தயங்கியது இல்லை.

குமரி மாவட்டம், வில்லுக்குறி பகுதியில் மருத்துவமனை வைத்திருக்கும் ஜாக்சனுக்கு, மஸ்கட்டில் உள்ள பிரபல மருத்துவமனையில் பணிசெய்யும் வாய்ப்பு வந்தது. அதற்கான நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தவர் மஸ்கட் சென்றார். நேர்காணலில் தேர்வான நிலையில், குமரிக்குத் திரும்பி மீண்டும் குடும்பத்தோடு மஸ்கட்டிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் பொதுமுடக்கத்தால் விமானச் சேவைகள் ரத்தாகின. அதில் இருந்து தனது மருத்துவ சேவையை சமூக வலைதளங்கள் வழியாக இலவசமாக்கினார் ஜாக்சன்.

இதுகுறித்து மருத்துவர் ஜாக்சன் 'இந்து தமிழ்' இணையத்திடம் கூறுகையில், “இது கரோனா பொதுமுடக்கக் காலம் என்பதால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட சின்னச் சின்ன உடல் உபாதைகளுக்குக்கூட மக்கள் மருத்துவமனைகளுக்குச் செல்ல பயந்துபோய் உள்ளனர். அவர்களுக்காகத்தான் 24 மணிநேரமும் அலைபேசி அழைப்புகளை ஏற்று இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்.

அவசரம் கருதி நோயாளிகளின் உடல்நிலைக்கு ஏற்ப மருந்துகளையும் பரிந்துரைக்கிறேன். இதுபோக தினம் ஒரு வீடியோ மூலமும் ஒவ்வொரு நோய் குறித்தும் விளக்கி வருகிறேன். எனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றும் அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது இன்னும் உற்சாகம் தருகிறது. இதுபோக வாட்ஸ் அப்பில் ஸ்கேன் ரிப்போர்ட் உள்ளிட்டவற்றை அனுப்பி வைப்பவர்களுக்கும் இலவச ஆலோசனைகளை வழங்கிவருகிறேன்.

மக்களிடம் இப்போது அச்ச உணர்வு மிதமிஞ்சி இருக்கிறது. தொழில் முடக்கம் ஏற்பட்டு அன்றாட வருமானத்தையே இழந்து தவிக்கின்றனர். சொந்த ஊரில் இருந்திருந்தால் கையில் இருக்கும் பணத்தில் என்னால் ஆன நிவாரண உதவிகளைச் செய்திருப்பேன். ஆனால், நானே ஊர் திரும்ப முடியாமல் மஸ்கட்டில் இருக்கிறேன்.

இந்த நெருக்கடியான சூழலில் எனது பங்களிப்பும் இருக்கவேண்டும் அல்லவா... அதனால்தான் இலவசமாக மருத்துவ ஆலோசனைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இப்போது தினமும் நூற்றுக்கும் அதிகமான அழைப்புகள் வருகின்றன. கரோனா மட்டுமே பிரச்சினை இல்லை. அதைத்தாண்டி மக்களின் மனதில் பலநூறு கேள்விகள் இருக்கின்றன. எனது இருபது ஆண்டுகால அனுபவத்தை வைத்து அத்தனைக்கும் முடிந்தவரை தீர்வு சொல்லி வருகிறேன்” என்று ஜாக்சன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்